
"சிட்னி ஒலிம்பிக் 2000 - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் செப்டம்பரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
21-ம் நூற்றாண்டின் முதல் ஒலிம்பிக் போட்டியாக "சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டி கருதப்படுகிறது. பல நாடுகளின் போட்டிகளுக்கு இடையே, இப்போட்டியை நடத்தும் உரிமையை சிட்னி நகரம் பெற்றது.
ஆகவே, இப் போட்டியை நல்லபடியாக நடத்தி முடிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிட்னி நகர அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். செப்டம்பர்15-ம் தேதி துவங்கும் இப் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொள்ளவுள்ளதால் தீவிரவாதிகள் மற்றும் பயங்கவாதிகளின் மிரட்டல்சிட்னி நகருக்கு வந்துள்ளது.
மிரட்டல்களைச் சந்திக்க சிட்னி நகரப் போலீஸாருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிட்னி நகரப் போலீசாருக்கு உதவியாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப்படையினரும் பாதுபாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போட்டிகள் நடைபெறும்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று சிட்னி நகரில் 100 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தஇடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிட்னி நகரை வான் மூலம் கண்காணிக்கவும், கடலோரப் பகுதிகளில் படகு மூலம்ரோந்து சென்று கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிட்னி நகரப் போலீஸார் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் ஆகியோருடன் தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளைச் சேர்ந்த சுமார் 1000 பேர்பாதுகாப்புப் பணயில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கும் பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை எந்த மிரட்டலும் வரவில்லை. அப்படி வரும் எவ்விதமான மிரட்டலையும் சமாளிக்க தயாராக உள்ளோம் என்று பாதுகாப்புஏற்பாடுகளைச் செய்து வரும் மெக்கினான் தெரிவித்தார்.
1972-ம் ஆண்டு ஜெர்மனியில் மியூனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது தீவிரவாதிகளின் நடவடிக்கை அதிகமாக இருந்தது. இஸ்ரேல் நாட்டின் இருஅதலெடிக் வீரர்களை பாலஸ்தீன தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும், வீரர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்குச் சென்று 9 வீரர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். ஆனால், அவர்களை மீட்கும் பணியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் 9 பேரும் கொல்லப்பட்டனர்.இவர்களுடன் பாலஸ்தீன தீவிரவாதிகள் 5 பேரும், ஒரு போலீஸ்காரரும் இறந்தனர்.
இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் சிட்னியில் நடைபெறாத வகையில் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாகமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நவீன ஆயுதங்களும் வழங்கப்பட உள்ளன.