தமிழகத்தில் இன்று
பீஜிங்:
பாரம்பரிய நட்பின் அடிப்படையில் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ள சீனா முன்வர வேண்டும் என்று குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணன் கூறியுள்ளார்.
சீனா சென்றுள்ள கே.ஆர்.நாராயணன், தலைநகர் பீஜிங்கிலுள்ள பழமையான பீகிங் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். அதற்குமுன்பாக பல்கலைக்கழக வளாகத்தில் வங்கக் கவிஞர் ரவீந்திர நாத் தாகூரின் சிலையை அவர் திறந்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியதாவது:
புதிய நூற்றாண்டில் இந்திய, சீன உறவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகி உள்ளது. இது மிகவும் தேவையான ஒன்றாகவும் மாறியுள்ளது.
1924-ல் தாகூர் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். அதன் பிறகு இரு நாடுகளின் உறவிலும் புதிய திருப்பம் ஏற்பட்டது. இருநாடுகளுக்கிடையேயும், நிலவி வந்த பாரம்பரிய உறவைப் புதுப்பிக்கும் வகையில் தாகூரின் வருகை அமைந்தது.
இரு நாடுகளின் பொருளாதாரமும் துவக்கத்தில் இறங்குமுகமாக இருந்தது. ஆனால் பின்னர் சவாலுக்குரிய, அபரிமிதமான வளர்ச்சியை இரு நாடுகளும் கண்டன.கடந்த இருபது ஆண்டுகளாக இரு நாடுகளும் கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கையே இதற்குக் காரணம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பனித்திரை விலகி வருகிறது. இந்தச் சமயத்தில் பாரம்பரிய நட்பின் அடிப்படையில், இந்தியாவுடனான நட்பை பலப்படுத்திக்கொள்ள சீனா முன்வர வேண்டும் என்றார் அவர்.