For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

உள்துறை அமைச்சர் அத்வானி, இலங்கைப் பிரச்சினையை வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைப்பிளக்க எதிர்க் கட்சிகள் ஆசைப்பட்டன; அந்த ஆசை பொய்த்துப் போய் விட்டது என்று கூறிதிருப்திப்பட்டுக் கொண்டுள்ளார். அவருடைய திருப்தி நியாயமானதே. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குஓர் ஆபத்தும் நேர்ந்து விடவில்லை.

ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் விடுதலைப் புலி ஆதரவை கைவிடவில்லை; புலி இயக்கத்தின் மீதானதடையை மீண்டும் நீடித்துள்ள மத்திய அரசின் உள்துறை அமைச்சருக்கு - இதனால் ஒரு முரண்பாடும்தெரியவில்லை.

உள்துறை அமைச்சரின் இந்த தாராள மனப்போக்கினால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குஆபத்து எதுவும் இல்லாமற் போய் விட்டது.

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக இங்கே பிரச்சாரம் செய்கிற இரு கட்சிகளின் மந்திரிகள்மத்திய அமைச்சரவையில் இருக்கிறார்கள். தடையை அமல்படுத்திய மத்திய அரசுக்கு இது ஒருபிரச்சினையாகத் தெரியவில்லை; அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆபத்தின்றி இயங்குகிறது.

உள்துறை அமைச்சர் கூறியபடி, பிளவு ஏதும் இல்லை. ஆக, அவருடைய திருப்தி நியாயமானதே.மத்திய அரசுக்கு இது பலவீனமில்லையா என்று கேட்கலாம் - அது வேறு விஷயம்.

இது தொடர்பான பல தர்மசங்கடமான கேள்விகளை பா.ஜ.க. காதில் போட்டுக் கொள்ளாமல்இருந்து, பிளவு முயற்சிகளைத் தகர்த்து எறிந்து விட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆபத்தில்லை.

அத்வானியின் திருப்தி நியாயமானதே. இப்படி இரு கட்சிகள் செயல்படுவது, தமிழகத்தின்எதிர்காலத்திற்கு ஆபத்தில்லையா - என்று கேட்கலாம்; அது வேறு விஷயம்.

இந்த விஷயத்தில் திருப்தி அடைவதோடு, அத்வானி நிறத்திவிடக் கூடாது. காஷ்மீர் விஷயத்திலும்திருப்தி அடைய வேண்டியதுதான் நியாயம்.

ஃபரூக் அப்துல்லா, சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றியதை வைத்துக் கொண்டு, தேசியஜனநாயகக் கூட்டணியைப் பிளக்க எதிர்க் கட்சிகள் நினைத்தாலும் அவர்கள் முயற்சி பலிக்காது- என்பதை நினைத்து திருப்திப்படலாமே!

சுயாட்சி தீர்மானத்தினால் எந்த பிரச்சினையும் இல்லை - என்று கண்ணை மூடிக் கொண்டுவிட்டால், அப்புறம் சிக்கல் ஏது, பிளவு ஏது?

"காஷ்மீரை அடுத்து பஞ்சாப்; பஞ்சாபை அடுத்து தமிழகம் என்று சுயாட்சி கோரிக்கைகள்புதுப்பிக்கப்பட்டால் - என்ன ஆவது?" என்று கேட்பவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைப்பிளக்க விரும்புகிறவர்கள் என்பதைப் புரிந்து கொண்டு, இந்த ஆபத்துக்களைப் பார்க்காமலே இருந்துவிட்டால், ஏது பிரச்சினை? கூட்டணிக்கு ஆபத்தில்லை என்று திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டியதுதானே?

ம.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதால், மத்திய அரசின் நிலையை விளக்கிச் சொல்லும் வாய்ப்புக்கிட்டும் என்று கூறி, புலி ஆதரவு கூட்டத்தில் பங்கேற்பதா? என்று கேட்டவர்களின் வாயைஅடைத்தார் அத்வானி.

ஆனால் மாநாட்டில் பேசிய போது - விடுதலைப் புலிகள் மீதான தடை பற்றியோ, தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்காக உழைப்பது சட்ட விரோதம் என்பது பற்றியோ, ஈழம்உருவாவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பது பற்றியோ, இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள்செய்வது என்ற இந்திய அரசின் முடிவு பற்றியோ - அவர் எதுவும் சொல்லவில்லை.

இலங்கை பிளவு படக்கூடாது என்று மட்டும் சொல்லி, அதுவே மத்திய அரசின் நிலைக்குபோதுமான விளக்கம் என்று முடிவு செய்து விட்டார் அத்வானி.

இப்படி தனக்குக் கிடைத்த தன்னிலை விளக்க வாய்ப்பை அவர் நழுவ விட்டதால், தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு ஆபத்தில்லாமல் போய் விட்டது. அவருக்கு திருப்தி. சரி, ம.தி.மு.க. மாநாட்டுஊர்வலத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்?அது வேறு விஷயம்.

இதோடு வேறு சில்லறை திருப்திகளும், மத்திய அரசுக்கு இருக்கின்றன. பாஸ்வானின்,டெலிஃபோன் இனாம் திட்டம் வந்த போது, அதை நிராகரிக்காமல் சம்மதித்து விட்டதன்மூலம் - தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆபத்து இல்லாமற் போயிற்று; அது ஒரு திருப்தி.

மம்தா பானர்ஜி மிரட்டுகிற போதெல்லாம் பணிந்து விடுவதால். அதனாலும் கூட்டணிக்குஆபத்தில்லை; அது ஒரு திருப்தி.

இதனால் எல்லாம் நிர்வாகம் பாதிக்கப்படாதா - என்று கேட்பவர்களின் பிளவு ஆசையைப்புரிந்து கொண்டு, பிரிவினை வாதத் தொடக்கம், தீவிரவாத ஆதரவு, பொருளாதாரபொறுப்பின்மை எல்லாவற்றையும் மத்திய அரசு அரவணைத்துச் சென்று விட்டால், அதன் பிறகுதேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பிரச்சினை ஏது? அப்படியே பிரச்சினை தோன்றிவிட்டாலும்,அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால், பிளவு ஏது?

ஆக, அத்வானியின் திருப்தி நியாயமானதே. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சங்கடம் ஒன்றும்இல்லை. ஆட்சிக்கு குறையொன்றுமில்லை! நாட்டுக்கு? அது வேறு விஷயம்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X