• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன்தான் கூட்டணி"

By Staff
|

கே: பா.ஜ.க. எம்பி உமா பாரதியின் பதவி விலகல், பா.ஜ.க.வின் உட்கட்சி பூசலின் ஆரம்பமா, முடிவா...?

ப: ஆரம்பம் எப்போதோ ஆகிவிட்டது; முடிவு விரைவில் வராது, இது பா.ஜ.க.வின் உட்கட்சி விவகாரங்களின் ஓர் அம்சம்.

மதன்லால் குரானா ஒரு தனி அமைப்பை தோற்றுவித்திருப்பது, கோவிந்தாச்சார்யா விரக்தியுடன் பேசுவது மற்றும் சுஷ்மா ஸ்வராஜ், ஜனாகிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் நிலைகள் - போன்றவை மற்ற அம்சங்கள்.

கே: மானம் முக்கியம் என்பதால், அ.தி.மு.க. விலிருந்து பிரிந்து தனிக் கட்சி அமைக்கிறேன் என்று ஜாதிக் கட்சி ஆரம்பித்துள்ள முன்னாள்அமைச்சர் கண்ணப்பனின் விளக்கம் பற்றி...?

ப: எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்த, இத்தனை நாள் மானத்தை குளிர்சாதனைப் பெட்டியில் வைத்திருந்தார் போலிருக்கிறது.

கே: மத்திய அமைச்சர் ரங்கராஜனுக்கு ஆரம்பத்தில் பிரபல தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறை சரியில்லை - என்று எழுந்துள்ளகுற்றச்சாட்டு பற்றி...?

ப: மேலெழுந்தவாரியாக நாமே முடிவு கட்டிவிட முடியாது. இதுபற்றி விசாரணை நடந்து முடியட்டும். அதற்குப் பிறகுதான் இதுபற்றி தெளிவு ஏற்படும்.

கே: கலாசார சீரழிவு என்றால் என்ன?

ப: தமிழ்நாடு ஈவ் டீசிங்கில் இந்தியாவிலேயே முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது - என்ற செய்தி காட்டுகிற உண்மை.

கே: அறிவீனம், முந்திரிக்கொட்டை, சிறுபிள்ளைத்தனம், அரைவேக்காடு... என்று ஒரு தாய் ( சுலோசனா சம்பத்), தன் பிள்ளைக்கு (இளங்கோவன்) உதிர்த்த பொன் மொழிகளை அர்ச்சனை என்பதா, ஆசிர்வாதம் என்பதா?

ப: அது அர்ச்சனையுமல்ல, ஆசிர்வாதமும் அல்ல. நடிப்பு. எஜமானியம்மாளிடம் குறும்பு செய்த பிள்ளையிடம், எஜமானியம்மாளின் திருப்திக்காக ஒரு தாயார்காட்டுகிற போலி கண்டிப்பு.

கே: தெரிந்தே செய்யப்படும் தவறு என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

ப: ஓட்டுப் போடுவது.

கே: அரசியலைவிட்டு நிரந்தரமாக விலகப் போவதாகவும், இனி கட்சியில் என் அரசியல் தலையீடு இருக்காது என்றும் - மதுரையில் மு.க. அழகிரிஅறிவித்துள்ளது பற்றி.. தங்கள் கருத்து என்ன?

ப: என்னவோ நடக்கிறது என்பது தெரிகிறது; என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.

கே: சட்டத்தின் முன் அனைவரும் சமம் - இது நம் நாட்டைப் பொறுத்த வரை நடைமுறையில் உள்ளதா?

ப: நல்ல வக்கீலை வைத்து, எத்தனை அப்பீல்கள், குறுக்கு மனுக்கள் தேவைப்பட்டாலும் அசராமல், செலவைக் கண்டு விழிக்காமல், பணத்தைதண்ணீராகக் கொட்டி, வழக்கை நடத்திச் செல்லுகிற உரிமை - பணக்காரன் ஏழை இருவருக்கும் உண்டு. இது சரி சமநிலைதானே!

கே: உங்கள் நாடகத்தைக் காண இளைஞர்கள் அதிக அளவில் வந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: மியூசியத்துக்கு இளைஞர்கள் போவதில் என்ன வியப்பு இருக்கிறது?

கே: சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் ஒரு குறிப்பிட்ட மாடிப் பகுதி இடிந்து விழுந்த சம்பவம் பற்றி ...?

ப: அங்கு நிலவுகிற அவலத்தைப் பார்த்து, கட்டடத்துக்கே சகிக்க முடியவில்லை போலிருக்கிறது. தற்கொலை செய்து கொள்கிற முடிவெடுத்து, இடிந்துவிழுந்து விட்டது.

கே:தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை நிறுவும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறாரே ஜெயலலிதா?

ப: வேண்டாம். இவர்கள் அடிக்கடி இப்படிப் பேசினால், இப்போது நடப்பதே எம்.ஜி.ஆர் ஆட்சிதான் என்று கருணாநிதி கூறிவிடுவார்.

காமராஜ் ஆட்சிக்கு நேர்ந்த கதி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கும் நேர்ந்து விடும்.

கே: வீரப்பன் தமிழக முதல்வரானால் தமிழகம் எப்படி இருக்கும்?

ப: நமக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது.

கே: நக்கீரன் கோபால் பற்றி அறிக்கை வெளியிட, ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது சரியா?

ப: வந்திருப்பது இடைக்கால உத்தரவு. இறுதித் தீர்ப்பு வந்த பிறகு பார்ப்போம்.

கே: உங்களைப் போல் அறிவாளியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்ன செய்யலாம்?

ப: என்னைப் போலத்தானே? அறிவாளி என்று நினைத்துக் கொண்டு விட வேண்டும். அவ்வளவுதான்.

கே: உமா பாரதியின் விலகல் பற்றி...?

ப: உமா பாரதி, இனிமேல் சு(ம்)மா பாரதி ஆகிவிடாமல் இருப்பாராக!

கே: கொலைகாரன், தீவிரவாதி, போராளி - என்ன வித்தியாசம்?

ப: ஒரு கொலை செய்தவன்; பல கொலைகளைச் செய்தவன்; பல கொலைகளைச் செய்து, அதை பகிரங்கமாக பறைசாற்றுபவன்.

கே: வீரப்பன் பணம் கேட்டிருந்தால், அரசு அதை ஏன் மறைக்க வேண்டும்?

ப: அதை மறைக்க வேண்டும் - என்பதையும் அவன் ஒரு நிபந்தனையாக விதித்திருந்தால் ...? அப்போதுதானே, அவனது தமிழ்ப்பற்று புடம் போட்டதங்கமாக ஒளி விடும்!

கே: தாராளமயம் என்பது ரத்த அழுத்தம் மாதிரி, அது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது என்று வி.பி. சிங் கூறியிருப்பது பற்றி...?

ப: வி.பி.சிங் போன்றவர்களின் அரசியல் கான்சர் மாதிரி. அது கொஞ்சம் இருந்தால் கூட ஆபத்துதான்.

கே: பிஜியில் மக்களாட்சி மலர இந்தியா முழு ஆதரவளிக்கும் - என்று இந்தியா வந்திருக்கும் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்திரியிடம் வாஜ்பாய்கூறியிருக்கிறாரே?

ப: மகேந்திர சவுத்ரிக்கு இந்தியா காட்டுகிற ஆதரவினால், பிஜியில் இந்தியர்கள் மீது தாக்குதல் இன்னும் அதிகமாகாமல் இருந்தால் சரி.

கே: கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்; வலிமையான ஒரு தலைவரை முன்னிலைப்படுத்துவதைத்தான் மக்கள் ஏற்பார்கள் என்று ஜெயலலிதா கூறுவது பற்றி ...?

ப: இப்படி கூறியதற்கு ஆதாரமாக, ஜெயலலிதா சுட்டிக் காட்டியது - 1980 தேர்தலைத்தான். தி.மு.க.-காங்கிரசுக்கு சரிபாதி இடங்களை விட்டுக்கொடுத்ததால், கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்ற நிலையில் - அந்த அணி தோற்றது என்று கூறியிருக்கிறார்.

இப்போது இப்படிச் சொல்கிற அ.தி.மு.க., 1980 தேர்தல் முடிந்த போது கருணாநிதியே முதல்வர் என்று கூறியதால்தான் அந்த அணி தோற்றது என்றுகூறியது.

இந்த முரண்பாடு ஒரு புறம் இருக்கட்டும். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் - எம்.ஜி.ஆர். அரசை, இந்திராகாந்தி அநியாயமாக டிஸ்மிஸ் செய்தததுதான்.

அந்த டிஸ்மிஸ்ஸின் விளைவாக மக்கள் மனதில் ஏற்பட்ட அனுதாப உணர்வுதான், எம்.ஜி.ஆர்.ஆட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்தது. ஆகையால், அதுகூட்டணி ஆட்சி என்பதற்கான முயற்சியின் தோல்வி அல்ல.

இப்போதைய நிலையை எடுத்துக் கொண்டால் - அ.இ.அ.தி.மு.க. சென்ற தேர்தலில் இருந்து என்ன மாறுதலை மக்கள் முன்னிலையில் காட்டப்போகிறது? பா.ம.க. வரும் என்று நம்பலாம்; அல்லது தி.மு.க. ஆட்சி மீதான அதிருப்தி வாக்கே நம்மை ஜெயிக்க வைக்கும் - என்றும் அவர்கள்நம்பலாம்.

ஆனால் இவற்றை விட, அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை கூட்டக் கூடிய விஷயம் - ஒரு நல்ல மாறுதல் வரும் என்ற நம்பிக்கையைஏற்படுத்துவதுதான்.

த.மா.கா. போன்ற ஒரு சில கட்சிகளும், மந்திரி சபையில் பங்கேற்கும் என்று இப்போதே கூறி, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால் - அதுவே ஒருநல்ல மாற்றத்துக்கான அறிகுறியாக மக்களால் கருதப்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

ஊழல் இமேஜ் ஓரளளாவது தணியவும் இது உதவக் கூடும். அதை ஜெயலலிதா இவ்வளவு ஆக்ரோஷத்தோடு நிராகரித்திருப்பது - அவருக்கே கூடநல்லதல்ல.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more