நீதிபதியிடம் தவறான வரைபடம் கொடுத்த ஜெ. வக்கீல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி அப்பீல் வழக்கு விசாரணையின்போது டான்சி நிலம் உள்ள இடம் என்று குறிப்பிட்டு தவறான மேப்பை நீதிமன்றத்தில்கொடுத்த ஜெயலலிதாவின் வக்கீல் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார்.

டான்சி அப்பீல் வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 3-வது நாளாக வியாழக்கிழமையும்வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது.

அப்போது ஜெயலலிதா தரப்பு வக்கீல் வேணுகோபால், நீதிபதி தினகரிடம் ஒரு மேப்பை கொடுத்தார். அந்த மேப்பில் ஜெயலலிதாவாங்கியதாக கூறப்படும் டான்சி நிலம் ஆலந்தூர் கிராமத்திற்குட்பட்டதுதான் என்பது புரிய வரும் என்று அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வக்கீல் வெங்கடபதி ஒரு மேப்பைக் கொடுத்தார். அந்த மேப்பில், டான்சி நிலம் அடையாறுபகுதியில் வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டு மேப்களையும் வாங்கிப் பார்த்த நீதிபதி தினகர், இரண்டும் வேறுபடுகிறதே என்று வக்கீல் வேணுகோபாலிடம் கேட்டார்.அப்போது குறுக்கிட்ட வக்கீல் வேணுகோபால், தவறான மேப்பை நான் கொடுத்து விட்டதாக நினைக்கிறேன். தவறுக்கு மன்னிப்புகேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அதைத் தொடர்ந்து விவாதம் நடந்தது.

ஜெயலலிதா வாங்கிய டான்சி நிலம் அடையாறு பகுதியில் இருப்பதாகத் தான் திமுக அரசு தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.இந்த நிலத்தை குறைந்த விலைக்கு ஜெயலலிதா வாங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக திமுக அரசுவழக்கில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், இந்த நிலம் ஆலந்தூர் பகுதியில் இருப்பதாகவும் இங்கு நிலத்தின் விலை அடையாறு பகுதியைவிடக் குறைவு என்றும்அதிமுக தரப்பில் சில காலமாகவே கூறி வந்தனர். எனவே, இந்த நிலத்தை வாங்க ஜெயலலிதா கொடுத்த தொகை மார்க்கெட்ரேட்டை விட அதிகமாகும் எனவும் கூற வந்தனர்.

இதை திமுகவினர் மறுத்து வந்தனர். நிலம் அடையாறு பகுதியில் தான் இருக்கிறது என திமுகவினர் திட்டவட்டமாகக் கூறிவருகின்றனர். இந்த நிலத்தை ஜெயலலிதா வாங்கியதால் அரசுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டது எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் தான் நீதிபதியிடம் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தவறான வரைபடம் (மேப்) கொடுத்துவிட்டு, அரசுத் தரப்புவழக்கறிஞர் சரியான மேப்பைக் கொடுத்த பின்னர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற