மதத்தை வென்ற கும்பாபிஷேகம்!
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தேச ஒற்றுமைக்கே இலக்கணம் வகுப்பது போல, இஸ்லாமியர் ஒருவரின் தலைமையில்கோவில் கும்பாபிஷேகம் சிறப்புற நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கூடலூர் பகுதியில் மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில்கட்டப்பட்ட கோவில் இது. பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்தது இக்கோவில். இதைபுனரமைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் அவை சரிவர நடக்கவில்லை.
இந் நிலையில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர் ஹமீது என்பவரைத் தலைவராகக் கொண்டு கும்பாபிஷேகதிருப்பணிக் குழு அமைக்கப்பட்டது. இதைத் தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதிய ஹமீதுத் மிகஆர்வமாக பணிகளை முடுக்கி விட்டார்.
இஸ்லாமியரான ஹமீது, கோவில் கும்பாபிஷேகத்திற்காக கடுமையாக உழைப்பதைப் பார்த்த பொதுமக்களும்,பிறரும் தாராளமாக நிதியுதவி செய்யவே பணம் குவிந்தது.
இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு கோபுரத் தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஹமீத், ஜாதி, மத பேதத்தை ஒழிக்க கிடைத்த நல் வாய்ப்பாக இதைக் கருதுவதாகபெருமையுடன் கூறினார்.
கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்திய ஹமீதை ஊர் மக்கள் பாராட்டி மாலைகள் இட்டு வாழ்த்தினர்.
இந்துக்களோடு கிருஸ்துவர்களையும் சேர்த்துக் கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்திக் காட்டியுள்ளார் ஹமீத் பாய்!


