வீரப்பனுக்கு மீண்டும் கர்நாடக அரசு கோரிக்கை
பெங்களூர்:
கொளத்தூர் மணியுடன் தானும் தூதுவராக காட்டுக்குள் வருவதாகவும் அதுவரை நாகப்பாவை ஒன்றும் செய்துவிட வேண்டாம்எனவும் கொள்ளேகாலைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத் தலைவர் மகாதேவசாமி ரேடியோ மூலம் வீரப்பனுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
வீரப்பனின் 12 நாள் கெடு முடிந்துவிட்டது. ஆனால், கொளத்தூர் மணிக்கு ஒரு வழக்கில் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. கொள்ளேகால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஜாமீன் மனு மைசூர் செசன்ஸ் நீதிமன்றத்துக்குமாற்றப்பட்டுவிட்டது.
அங்கு மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தாக வேண்டும். அதற்கு உரிய ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் கொளத்தூர்மணியில் வழக்கறிஞர் பிரகாஷ் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்தால் மனு தாக்கல் செய்ய இரண்டு மூன்றுநாட்கள் ஆகும் என்று பிரகாஷ் கூறியுள்ளார்.
இதனால் மணி ஜாமீன் கிடைத்து வெளியே வருவதில் தாமதம் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இதையடுத்து அமைச்சர் ராஜூகெளடா மூலம் நேற்று கர்நாடகம் வீரப்பனுக்கு ரேடியோ செய்தி அனுப்பியது.
இப்போது மணியின் நெருங்கிய நண்பரும், வீரப்பனால் காட்டுக்கு அழைக்கப்பட்டவருமான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின்கொள்ளேகால் தலைவர் மகாதேவசாமி மூலம் கர்நாடகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவரது கோரிக்கை மைசூர் வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அதில் மகாதேவசாமி கூறியிருப்பதாவது:
வீரப்பன் அண்ணா, நீங்கள் சொன்னது மாதிரி கொளத்தூர் மணி வெளியே வந்துவிடுவார். அவரும் நானும் காட்டுக்கு வந்துஉங்களை சந்திக்கிறோம். அதுவரை கெடுவை நீட்டிக்க வேண்டும்.
மணியின் வழக்குகளில் சிக்கல் உள்ளது. ஆனால், எப்படியும் சில நாட்களில் ஜாமீன் கிடைத்துவிடும். நாங்கள் காட்டுக்குள்வரும் வரை நாகப்பாவை ஒன்றும் செய்துவிட வேண்டாம்.
அவரை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என்று பேசியுள்ளார்.
இந்தச் செய்தி மைசூர் ரேடியோ நிலையம் மூலம் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மீது காங். புகார்:
இந் நிலையில் வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுவருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தமிவக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
நாகப்பா விவகாரத்தில் கொளத்தூர் மணியை விடுவிக்க கர்நாடக அரசு அவசரம் காட்டுவதாக அமைச்சர் பொன்னையன்கூறியுள்ளார். கர்நாடக அரசின் செயல்பாடுகளில் தவறில்லை. மரணத்தின் வாசலில் துடித்துக் கொண்டிருக்கும் நாகப்பாவைமீட்கவே கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப கர்நாடகம் முயற்சித்துக் கொண்டுள்ளது.
ஆனால், கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படும் அதிமுக அரசு,வீரப்பனிடம் இருந்து நாகப்பா விடுதலையாகி விடாமல் தடுக்கவும், அதன் மூலம் கர்நாடகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைசீர்கெட்டு, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் துடிக்கிறது.
அதனால்தான் நாகப்பாவை மீட்க இடையூறு செய்கிறார் ஜெயலலிதா. இதுதான் அதிமுக ஆட்சியின் நோக்கம். இதன் மூலம்அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் ஜெயலலிதா என்றார் பீட்டர் அல்போன்ஸ்.
-->


