தமிழக அதிரடிப்படை- வீரப்பன் கும்பல் துப்பாக்கிச் சண்டை: நாகப்பா காயம்- காட்டில் தனியே விடப்பட்டார்
சத்தியமங்கலம்:
நேற்று முன் தினம் காட்டுப் பகுதியில் தமிழக அதிரடிப் படை நடத்திய தாக்குதலில் வீரப்பனும், பிணைக் கைதியாக இருந்த நாகப்பாவும் சிலஅதிரடிப்படை வீரர்களும் குண்டுக்காயம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாகப்பாவை வீரப்பன் காட்டுப் பகுதியிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டான். இதைத் தொடர்ந்து நாகப்பாவைத் தேடி கர்நாடகஅதிரடிப் படையினர் பெரும் எண்ணிக்கையில் காட்டுக்குள் புகுந்துள்ளனர்.
ஆனால், வீரப்பனுடன் எந்த தாக்குதலும் நடக்கவில்லை என தமிழக அதிரடிப் படையின் தலைவர் தேவாரம் மறுத்துள்ளார். வீரப்பன்கும்பலுக்கும் வேறு கும்பலுக்கும் இடையே ஏதாவது சண்டை நடந்து அதில் நாகப்பா காயமடைந்தாரா என்று தெரியவில்லை. இதில்பெரும் குழப்பம் நிலவுகிறது.
நள்ளிரவில் 6வது கேசட் வந்தது:
வீரப்பனிடம் இருந்து நேற்று இரவு 6வது கேசட் வந்தது. கொள்ளேகால் தாலுகா காமகெரேயில் உள்ள நாகப்பாவின் பண்ணை வீட்டின்உள்ளே இந்த கேசட் எறியப்பட்டது.
அதில் பேசியுள்ள வீரப்பன், தமிழக அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தியதில் நாகப்பா காயமடைந்துவிட்டார். இதனால் அவரை நான்வியாழக்கிழமையே காட்டுப் பகுதியில் விட்டுவிட்டேன். இப்போது அவர் எனது கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறியுள்ளான்.
வீரப்பனும் காயம்:
இத் தாக்குதலில் வீரப்பன், சேத்துக்குளியான் உள்ளிட்ட அவனது கும்பலைச் சேர்ந்த பலரும் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது.
2 தமிழக வீரர்கள் படுகாயம்?:
வீரப்பனுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக அதிரடிப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் மிக பலத்த காயமடைந்துவிட்டதாகவும்அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக அமைச்சர் மெளனம்:
ஆனால், கேசட்டில் உள்ள விவரம் குறித்து கர்நாடக அரசு தகவல் ஏதும் தர மறுத்துவிட்டது.
அந்த கேசட் இன்னும் தனது கைக்கு வர வில்லை என உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். ஆனால், வீரப்பன் குறித்தபுதிய தகவல்களைக் கேட்டு நாகப்பான் மருமகன் கிரண் படேல் பெங்களூர் வந்தார். அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயைச் சந்தித்தார்.
இதன் பின்னர் கார்கேயின் வீட்டில் இருந்து வெளியே வந்த கிரண் படேல், நாகப்பா காயமடைந்துவிட்டதால் அவரை காட்டுப்பகுதியிலேயே விட்டுவிட்டதாக அந்த கேசட்டில் வீரப்பன் கூறியிருக்கிறான் என்று தெரிகிறது என்றார்.
அதற்கு மேல் விவரம் எதையும் அவர் பேசவில்லை. உடனே அவரை போலீசார் காரில் ஏற்றி அழைத்துச் சென்றுவிட்டனர்.
அவசரக் கூட்டம்:
இதையடுத்து கார்கேயின் இல்லத்தில் இன்று கர்நாடக டி.ஜி.பி., முதல்வரின் பாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசுலு மற்றும் உளவுப் பிரிவுஅதிகாரிகள் அவசரமாகக் கூடினர். தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
எந்த விவரத்தையும் வெளியிட அதிகாரிகளும் அமைச்சரும் மறுப்பதால் நிருபர்கள் கார்யிேன் வீட்டின் வெளியே பெரும் எண்ணிக்கையில்காத்துக் கொண்டுள்ளனர்.
கர்நாடக அதிரடிப்படை நுழைந்தது:
வீரப்பனின் எச்சரிக்கை காரணமாக கடந்த 2 மாதங்களாக காட்டுப் பகுதியில் இருந்து வாபஸ் பெறப்பட்ட கர்நாடக அதிரடிப்படை இன்றுபகலில் காட்டுக்குள் நுழைந்தது.
அவர்கள் நாகப்பாவைத் தேடியும் வீரப்பனைப் பிடிக்கவும் காட்டுக்குள் புகுந்துள்ளனர். அதிரடிப்படை மீண்டும் காட்டுக்குள் நுழைந்ததைமட்டும் கர்நாடக டி.ஜி.பி. அலுவலகம் உறுதிசெய்தது. மேலும் நாகப்பாவின் சொந்த ஊரான காமகெரயிேல் இருந்தும் சுமார் 2,000 பேர்காட்டுக்குள் புகுந்துள்ளனர்.
நாகப்பா என்ன ஆனார்?:
குண்டுக் காயம் அடைந்த நாகப்பா வியாழக்கிழமையே காட்டுப் பகுதியில் விடப்பட்டிருந்தால் அவரது நிலை என்ன ஆனது என்றுதெரியவில்லை.
வியாழக்கிழமை வீரப்பன் கும்பலை தமிழக அதிரடிப்படை சுற்றி வளைத்ததாகவும் அப்போது இரு தரப்பினருக்கும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தாகவும் தெரிகிறது. இதில் தமிழக போலீசார் சுட்டுத் தான் நாகப்பா காயமடைந்ததாக வீரப்பன் கேசட்டில் கூறியிருக்கிறான்.
காயமடைந்த அவரை அங்கேயே போட்டுவிட்டு வீரப்பன் கும்பல் தப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவாரம் மறுப்பு:
ஆனால், வீரப்பன் கும்பலுடன் என்கெளண்டர் ஏதும் நடக்கவில்லை என தமிழக அதிரடிப்படை கூறியுள்ளது. அதிரடிப் படையின் தலைவர்தேவாராம் சத்தியமங்கலத்தில் இருந்து என்.டி.டிவிக்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில்,
தமிழக அதிரடிப் படைக்கும் வீரப்பன் கும்பலுக்கும் இடையே சமீபத்தில் எந்தவிதமான துப்பாக்கிச் சண்டையும் நடக்கவில்லை. அவன்இப்போது கர்நாடக காட்டுப் பகுதியில் தான் பதுங்கியிருக்கிறான். ஆனால், அவர்களது எல்லையில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டாம்என்று கூறிவிட்டார்கள். இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழக அதிரடிப் படையினர் தமிழக எல்லையில் தான் உள்ளனர்.
கர்நாடக வன எல்லையில் நுழையவில்லை. வீரப்பனுடன் எந்த எண்கெளன்டரிலும் ஈடுபடவில்லை. இப்போது வீரப்பனிடம் இருந்துவந்துள்ள கேசட்டில் கூறப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது என்றார்.
வீரப்பன் விவகாரத்தில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் முழு உண்மைகளை வெளியில் தெரிவித்தது இல்லை. இதனால் தேவாரத்தின்மறுப்பு எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காட்டுப் பகுதியில் வேறு கும்பலுடன் வீரப்பன் மோதியிருக்கவும் வாய்ப்புள்ளதாகபோலீசார் தெரிவித்தனர்.
உதவத் தயார்: தமிழகம்
இதற்கிடையே நாகப்பாவை காட்டுக்குள் தேடும் பணியில் கர்நாடகத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக தமிழக அரசு கூறியுளளது.கர்நாடக டி.ஜி.பியிடம் தமிழக டி.ஜி,பி. நெயில்வால் இத் தகவலைத் தெரிவித்ததாகத் தெரிகிறது. கடந்த இரு மாதங்களாக வீரப்பன்விவகாரத்தல் தமிழக, கர்நாடக அதிரடிப்படைகளும் போலீசாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
கொளத்தூர் மணி ஜாமீன் குழப்பம்:
இதற்கிடையே வீரப்பனைச் சந்திக்க தூதுவராக செல்லத் தயாராக இருக்கும் கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைப்பதில் நேற்று புதிய சிக்கல்ஏற்பட்டது. மைசூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த இரு ஜாமீன் மனுக்களையும் அரசு எதிர்க்கவில்லை. இதனால் ஜாமீன் கிடைக்கஇருந்தது.
ஆனால், இரு தனி நபர்கள் இந்த ஜாமீனை எதிர்த்து மனு செய்தனர். ஜாமீனை எதிர்ப்பதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் விளக்குமாறுஇந்த இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் தங்கள் விளக்க மனுக்களை நாளை (திங்கள்கிழமை) தாக்கல் செய்வர். இதன் பின்னர்தான் ஜாமீன் குறித்து முடிவு செய்வார்.
நாகப்பாவை குண்டுக் காயம் மற்றும் ரத்தக் காயத்துடன் நடுக் காட்டிலேயே விட்டுவிட்டதாக வீரப்பன் கூறியிருப்பதால் கொளத்தூர்மணிக்கு ஜாமீன் தர கர்நாடக அரசு விடுமா என்று தெரியவில்லை.
-->


