இலங்கை அமைதிப் பேச்சு: ரணிலைப் பாராட்டி கருணாநிதி கடிதம்
சென்னை:
இலங்கையில் அமைதி முயற்சிகளை மேற்கொண்டிருப்பதற்காகப் பாராட்டு தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,
கடந்த 1956ல், ஈழத் தமிழர்களின் தந்தை செல்வநாயகம் தலைமையிலான உரிமைப் போராட்டம் வெற்றிபெறவும், இலங்கையில் அமைதியான வாழ்வு மலரவும் வாழ்த்தி திமுக பொதுக்குழுவில் தீர்மானம்கொண்டுவரப்பட்டது. அதை நான்தான் முன்மொழிந்தேன்.
அதன் பின்னர் கலங்கிடத்தக்க, கண்ணீர் விடத்தக்க, பெருமூச்சு விடத்தக்க எத்தனையோ நிகழ்வுகள் ஈழத்திலும்தமிழகத்திலும் நடந்தேறி விட்டன.
தற்போது இலங்கையில் சுயாட்சி மலர்வதற்கு ஓஸ்லோ பேச்சுவார்த்தையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. புலிகளும்தனி நாடு கோரி வலியுறுத்தாமல் அமைதிக்கான சூழலை அங்கு ஏற்படுத்தியுள்ளனர்.
இதற்காக ஒரு காலத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் திமுகவுக்கும் பெரும் பங்கு உண்டு.
இடையிடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுகளை எதிர்கொண்டு திமுக எத்தனை தியாகம்செய்துள்ளது என்பதையும் பேரணிகள், மாநாடுகள் மூலம் இலங்கைத் தமிழர்களிடையே அமைதியான வாழ்வுபூத்துக் குலுங்க வேண்டுமென்று விரும்பி திமுக செயல்பட்டது என்பதையும் அறியாதவர்களோதெரியாதவர்களோ இருக்க முடியாது.
நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் பல சோகமான சம்பவங்கள் நடந்த போதிலும் என்ன செய்வது? நடந்தவைநடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பதாவது நன்றாக நடக்கட்டும் என்று அன்றே அண்ணன் தளபதிஅழகிரி அவர்கள் புதுவை மாநாட்டில் முழங்கினாரே, அதைச் செயல்படுத்த அனைவருமே முன்வர வேண்டும்.
கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, இலங்கையில் எதிர்க் கட்சித்தலைவராக இருந்த நீங்கள் (ரணில்) என்னை வந்து சந்தித்தபோதே, இலங்கை இனப் பிரச்சனை சுமூகமாகத் தீரவேண்டும் என்பதில் நீங்கள் அதிக அக்கறை கொண்டிருந்தது எனக்குத் தெரிந்து விட்டது.
எதிர்க் கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, ஆட்சிக் வந்துவிட்டால் ஒரு பேச்சு என்று மாறுபட்ட நிலைகளைஎடுக்காமல் ஒன்றுபட்ட கருத்து உருவாகி, அதன் மூலம் அமைதி விடியல் ஏற்படுவதற்கு ஒத்துழைப்புஅளித்துள்ளீர்கள்.
இதற்காக உங்களுக்கு நன்றிகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தக்கடிதத்தில் கூறியுள்ளார் கருணாநிதி.
-->


