சிறைக்கு செல்போன்களுடன் வந்த மதானி மனைவி: போலீஸார் தாக்கியதாக புகார்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் அப்துல் நாசர் மதானியைப் பார்க்கச்சென்றபோது போலீஸார் தன்னைத் தாக்கியதாக அவருடைய மனைவி சோபியா புகார் கூறினார்.
ஆனால் சட்டவிரோதமாக செல்போன்களுடன் அவர் சிறைக்குள் சென்றதால், அவரிடமிருந்து 4செல்போன்களும், 5 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர் மாநகர கமிஷனர் சஞ்சய் அரோரா கூறினார்.
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர்மதானி கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை குண்டுவெடிப்புவழக்கில் முக்கியக் குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மதானியைப் பார்க்க அவருடைய மனைவி சோபியா கேரளாவிலிருந்து கோயம்புத்தூர் சிறைக்குவந்தார்.
நேற்று காலை மதானியைப் பார்க்கச் சென்றபோது, அவரிடமிருந்த 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து சஞ்சய் அரோரா தெரிவிக்கையில்,
சோபியா சிறைக்குள் நுழைந்தபோது அவரிடம் 4 செல்போன்களும், 5 சிம் கார்டுகளும் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து அவற்றை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரிடம் இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் செல்லமுயன்றபோது காவலர்களிடம் அவர் தகராறு செய்தார்.
ஒரு சப்-இன்ஸ்பெக்டரைத் தரக்குறைவாகவும் பேசினார் சோபியா. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது என்றார் அரோரா.
இதற்கிடையே சிறையிலிருந்து வெளியே வந்த சோபியா நிருபர்களிடம் பேசுகையில், விசாரணை என்ற பெயரில்போலீஸார் தன்னை அடித்ததாகவும், தன் 5 வயது மகளைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டதாகவும் புகார் கூறினார்.
இதுகுறித்து தமிழக, கேரள முதல்வர்களிடம் புகார் கூறப் போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தகவலைக்கேள்விப்பட்டதும் கோயம்புத்தூர் சிறையில் இருந்த அல்-உம்மா கைதிகள் போலீஸாரைக் கண்டித்துஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த மாதமும் இதேபோல மதானியின் உறவினர்கள் சிறைக்கு வந்தபோது, அவர்களிடமிருந்துசெல்போன்களுக்குப் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீப காலமாக முக்கிய சிறைச்சாலைகளில் செல்போன்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக பொதுவான புகார்உள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.போலோநாத் திடீர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-->


