தமிழக காவல்துறையில் விரைவில் மேலும் அதிரடி மாற்றங்கள்
சென்னை:
நெயில்வால் தூக்கப்பட்டது, ராஜகோபாலன் மீண்டும் டி.ஜி.பியாக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையில் மேலும் பல அதிரடிமாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
ராஜகோபாலனுக்கு டி.ஜி.பி. பதவி கிடைத்ததில் காஞ்சி மடத்தின் ஆசிர்வாதமும் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் தமிழக போலீஸ் துறையில் பணியாற்றிய ராஜகோபாலை மீண்டும் டி.ஜி.பியாக்க வேண்டும் எனஅவரது உறவினரும் மடத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவரான முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் வைத்தகோரிக்கையை மடம் ஏற்றுக் கொண்டதாம்.
மேலும் துணைப் பிரதமர் அத்வானியின் ஆதரவும் கிடைக்க டி.ஜி.பியாகிவிட்டார் ராஜகோபால். மடத்தின் மூலமாக பா.ஜ.க.மத்தியத் தலைமையை தாஜா செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள தலைவிக்கு இந்தப் பதவியை ராஜகோபாலுக்குத் தருவதில் எந்தமன வருத்தமும் இல்லை.
அதே நேரத்தில் தமிழக போலீசில் மேலும் அதிரடி மாற்றங்கள் வரப் போவதும் உண்மை. அதிமுக ஆட்சிக்கு வந்தபோதுசென்னை மாநகர கமிஷ்னராக சர்வ வல்லமையுடன் செயல்பட்டு வந்த முத்துக்கருப்பன் திமுக தலைவர் கருணாநிதி கைதுவிவகாரத்தில் மத்திய அரசிடம் கொட்டு வாங்கினார்.
தொடர்ந்து சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாகிகிய விவகாரத்தில் கோர்ட்டிடம் கொட்டு வாங்கினார். திமுக பேரணியில் தடியடிநடத்தியும் ரெளடிகளை விட்டும் தாக்கினார். இதனால் மத்திய அரசு இவர் மீது தனது பிடியை இறுக்க தனக்கு கெட்ட பெயரைவாங்கித் தந்த முத்துக்கருப்பனை ஒரு நாள் திடீரென தூக்கி திருச்சி ஆயுதப் படைக்கு பேக் செய்தார் முதல்வர் ஜெயலலிதா.
அங்கு பல் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரி அதிகாரம் ஏதும் இல்லாமல் உட்கார்ந்துள்ள முத்துக்கருப்பனுக்கு இப்போது மீண்டும்அடிமேல் அடி விழுந்துள்ளது.
ஆயுதப் படையில் இருந்து தூக்கி இப்போது மதுரை போலீஸ் பயிற்சிப் பிரிவில் போட்டுள்ளார்கள். அது சுத்தமாக எந்தஅதிகாரமும் இல்லாத பதவி. பயிற்சியில் இருக்கும் போலீசாரின் சல்யூட் தவிர வேறு எதுவும் கிடைக்காது.
முத்துக்கருப்பன் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. இந் நிலையில் காவல்துறையில் மேலும் அடுத்தடுத்து மாற்றங்கள்வரலாம் என்கிறார்கள்.
சென்னை கமிஷ்னர் விஜய்குமார் மாற்றப்படலாம் என்ற பேச்சும் உள்ளது. அதே போல ஒதுக்கி வைக்கப்பட்ட முன்னாள் உளவுப்பிரிவின் தலைவர் அலெக்சாண்டர் மீண்டும் அதே பதவிக்கு வரப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.
அதே போல மாநிலம் முழுவதும் சுமார் 12 டி.எஸ்.பிக்களுக்கு பதவி உயர்வு தரப்பட்டு எஸ்.பிக்கள் ஆக்கப்பட உள்ளனர்.காலியாக உள்ள வேலூர் சரக டி.ஐ.ஜி. பதவிக்கும் விரைவில் மூத்த அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.
ஆனால், எல்லோர் பார்வையும் இருப்பது மத்திய சென்னை இணை கமிஷனர் பதவி தான். காலியாக உள்ள இந்த செல்வாக்குமிக்க பதவியைப் பிடிக்க கடும் போட்டியே நடந்து வருகிறது. அதே போல கீழ்பாக்கம் துணை கமிஷ்னர் பதவியும் காலியாகஉள்ளது.
இந்தப் பதவிகளை நிரப்பும்போது மேலும் பல முக்கிய மாற்றங்கள் வரலாம்.
-->


