ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு: போலீஸ் அதிகாரி 2வது நாளாக சாட்சியம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது, அவரது அனுமதி பெற்ற பிறகே சோதனை நடந்ததுஎன்று முதலாவது தனி நீதிமன்றத்தில் முன்னாள் காவல் துறைக் கண்காணிப்பாளரான நல்லம்ம நாயுடு இன்று 2வதுநாளாக சாட்சியம் அளித்தார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (1991-96) வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புக்கு சொத்துக்கள்சேர்த்ததாக ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான சுதாகரன் மற்றும் இளவரசிஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கத்திடம் சமீபத்தில் மாற்றப்பட்டது.இவ்வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இவ்வழக்கில் அனைத்து மற்ற அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடைசி அரசுத்தரப்பு சாட்சியான நல்லம்மநாயுடு நேற்று முன்தினம் சாட்சி அளித்தார். இவர் தான் இந்தச் சொத்துக் குவிப்புவழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நல்லம்மநாயுடு மீண்டும் தனி நீதிமன்றத்தில்ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா மீதான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது முறையாகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. முதல் தகவல் அறிக்கையைக்காட்டி, ஜெயலலிதாவின் அனுமதியைப் பெற்ற பிறகே அவரது வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினோம்.
பின்னர் அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பட்டியலிட்டு, அதில் ஜெயலலிதாவின் கையெழுத்தையும்நாங்கள் பெற்றுக் கொண்டோம். பின்னர் அந்தப் பொருட்கள் மதிப்பிடப்பட்டன என்றார் நல்லம்ம நாயுடு.


