(சாத்தான்)குளமும் குட்டையாகிவிடும்: கருணாநிதி கிண்டல்
சென்னை:
சாத்தான்குளத்தில் அதிமுகவுக்கு வாக்களித்தால் குளமும் கூட குட்டையாகிவிடும் என திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று அவர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜெயலலிதா கொண்டுவந்துள்ள மத மாற்றத் தடைச் சட்டத்தை கருணாநிதியும் ஆதரித்தால் அவரையும் வாழ்த்துவோம் என வி.எச்.பி.தலைவர் பிரவீன் தொகாடியா கூறியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, ஜெயலலிதாவின் அடிவருடிகளிடம் போய் இந்த தொகாடியா இதைச் சொல்லலாம்.ஒருவேளை அவர்கள் இந்த யோசனையை ஏற்று ஜெயலலிதாவை வாழ்த்தி தொகாடியாவின் ஆசிர்வாதத்தைப்பெறலாம்.
தமிழ்நாடு மீண்டும் இந்து அடையாளத்தைப் பெற்று வருவதாகவும் அந்தத் தொகாடியா பேசியிருக்கிறார்.ஜெயலலிதாவின் ஆட்சியைத் தான் அவர் குறிப்பிட்டு வாயெல்லாம் பல்லாக புகழ்ந்துரைத்துள்ளார்.ஜெயலலிதாவின் ஆட்சி என்பதே வர்ணாஸ்ரமத்தையும், சங்கர மடத்தையும் தூக்கிப் பிடிக்கும் ஆட்சி தான்என்றான பிறகு தொகாடியாக்கள் பேசுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
தொகாடியா நினைப்பது போல இந்து என்பதற்கு பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரன் என்ற நாலு பிரிவுகளும்,அதில் நாலாம் பிரிவான சூத்திரன் என்றால், வேசி மகன்- திருடன்- தாசி மகன் என்ற கேவல நிலையும்கடைபிடிக்கப்படுகிற இந்து மத அடையாளத்தைத் தான் நம் மீது திணிக்கப் பார்க்கிறார்கள் இந்தத்தொகாடியாக்கள்.
இந்த மனு நீதிகள் மனித நீதிக்கு எதிரானைவை. மனு நீதிகளை நாங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றால்அப்போது நடக்கிற எதிர்ப் புரட்சியில் தமிழகத்துக்கு பசுஞ்சோலைகளும் பற்றி எரியும், கடைசி திமுககாரன்உயிரோடு இருக்கும் வரை திராவிடக் கலாச்சாரம் காத்திடும் தீராத போராட்டம் தொடர்ந்து கொண்டு தான்இருக்கும் என்றார் கருணாநிதி.
மேலும் சாத்தான்குளத்தை தேவன் குளமாக்குவேன் என்று ஜெயலலிதா கூறியிருப்பது பெரிய ஜோக். குளம்ஏரியாகும் என்று கூறவில்லை பார்த்தீர்களா. இவருக்கு வாக்களித்தால் குளமும் கூட குட்டையாக மாறிவிடும்என்றார்.
அதிகாரிகள் விரட்டியடிப்பு:
இந் நிலையில் சாத்தான்குளத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் இலவசமாக வேட்டி, சேலைகள் கொடுத்ததுகுறித்து விசாரிக்க வந்த தேர்தல் அதிகாரிகளை அதிமுகவினர் விரட்டி அடித்தனர்.
ஆழ்வார்திருநகரி அருகே கிராமத்தில் இந்த விசாரணை நடந்தது. இதற்காக 2 பெண் அதிகாரிகள் உள்பட 5 பேர்வந்திருந்தனர். அதிமுகவிர் கொடுத்த புதிய சேலைகளைக் காட்டுமாறு அதிகாரிகள் கேட்க பொது மக்கள் பயந்துபோய் எடுத்து வந்து காட்டினர்.
இது குறித்து அதிமுக எம்.பியும் சசிகலாவின் அக்காள் மகனுமான தினகரனுக்கு அதிமுகவினர் தகவல் தந்தனர்.அவரது உத்தரவுப்படி 5 டாடா சுமோக்களில் ஆர்பாட்டமாக வந்திறங்கிய அதிமுகவினர் அதிகாரிகளைத்திட்டினர்.
தகாத வார்த்தைகளா திட்டியபடி அடிக்க முயன்றனர். இதில் விசாரணைக்கு வந்த அதிகாரிகள் குழுவில் இருந்த 2பெண் அதிகாரிகள் பயத்தில் அழுதனர். நிலைமை மோசமானதால் விசாரணையை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் கிளம்பினர். அவர்களை மிக மோசமாகத் திட்டி விரட்டியடித்தனர் அதிமுகவினர்.
பயத்தில் அதிமுக: மதிமுக
இதற்கிடையே சாத்தான்குளத்தில் தோற்று விடுவோம் என்ற பயம் வந்துவிட்டதால் மாற்றுக் கட்சியினர் மீதுஅதிமுகவினர் வன்முறையைத் தூண்டி விட்டுள்ளனர் என்று மதிமுக பொருளாளரும், மத்திய அமைச்சருமானகண்ணப்பன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த மதிமுக தொண்டர்கள் மீது சுமோ காரில் வந்த அதிமுகவினர்பயங்கர வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.போலீஸாரின் உதவியுடன் தேர்தல் விதிமுறைகளை அதிமுகவினர்காற்றில் பறக்கவிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.


