தமிழ் vs
டெல்லி:
நாடாளுமன்றத்தில் இந்திக்கு ஆதரவாக தமிழைத் தாழ்த்திப் பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பிக்களை திமுக எம்.பிக்கள் அடிக்க முயன்றனர்.இதையடுத்து லோக்சபாவில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று லோக்சபா கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பேசிய மதிமுக எம்.பி. கிருஷ்ணன், தமிழகத்தில் உள்ளதேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கல்களில் இந்தியில் மட்டும் எழுதுவது ஏன்? இந்தி படிக்கத் தெரியாத தமிழக டிரைவர்களுக்கு வசதியாகதமிழிலும் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அமைச்சர் பதிலளிப்பதற்கு முன்னதாக சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் முந்திரிக் கொட்டை மாதிரி எழுந்து தமிழை கிண்டல் செய்யும்வகையில் பேசினர். இந்தி தான் தேசிய மொழி. தேசிய நெடுஞ்சாலையில் தமிழில் எல்லாம் எழுத முடியாது என்றனர்.
நாங்கள் தமிழகத்தில் மட்டும் தான் இதைக் கேட்கிறோம். வேறு மாநிலத்தில் அல்ல என கிருஷ்ணன் பதிலளித்தார்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் மனோகர் ஜோஷி, மதிமுக எம்.பி. சம்பந்தமில்லாத கேள்வியை எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறிஇப் பிரச்சனையைக் கிளப்பவே அனுமதி தர மறுத்தார். சபாநாயகரின் இந்தப் பேச்சுக்கு திமுக எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுசரியான கேள்வி தான் என்று கூறிய திமுக, அதிமுக உறுப்பினர்கள், இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும் என்றனர்.
இந் நிலையில் சமாஜ்வாடி எம்.பிக்களான அகிலேஷ் சிங், ராம்ஜிலால் சுமன், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதாகட்சியைச் சேர்ந்த பிரபுநாத் சிங் ஆகியோர், இந்தி தவிர வேறு எந்த மொழியையும் ஏற்க முடியாது என்று கூறியதோடு தமிழைக் கிண்டல்செய்யும் வகையில் பேசினர்.
இதனால் திமுக எம்.பிக்கள் கடுப்படைந்தனர். இந்தியையும் சமாஜ்வாடி, சமதா கட்சி எம்.பிக்களையும் திருப்பித் திட்டினர். அப்போதுதிமுகவிரை நோக்கி சமாஜ்வாடி கட்சியினர் தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர்.
இதையடுத்து கடும் இரைச்சலுக்கு மத்தியில் பேசிய தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பி.சி. கந்தூரி, தேசிய நெடுஞ்சாலை மைல்கல்களில் இந்தி தவிர ஆங்கிலம் மற்றும் அந்நந்த மாநில மொழிகளிலும் எழுதுவது குறித்து யோசித்து வருவதாகவும் மத்திய அரசின்மும்மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.
ஆனால், இந்த பதிலால் திமுக, மதிமுக, அதிமுக எம்.பிக்கள் திருப்தி அடையவில்லை. ஏன் தமிழில் மைல் கல்களில் எழுதவில்லை என்றுகேட்டவண்ணம் இருந்தனர்.
அப்போது எழுந்த அதிமுக எம்.பியான பி.எச்.பண்டியன், உலகின் மிகப் பழமையான மொழி தமிழ். அந்த மொழி வஞ்சிப்பட்டுவதை ஏற்கமுடியாது. மொழி விஷயத்தில் தமிழகம் யாருக்கும் விட்டுக் கொடுக்காது. பணியாது. இந்திக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. எங்கள் மொழிமதிக்கப்பட வேண்டும் என்பது கேட்பது தவறா என ஆவேசமாகக் கேட்டார். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தமிழ் ஏன்பயன்படுத்தப்படவில்லை. பதில் சொல்லுங்கள் என்றார்.
இதற்கும் சமதா, சமாஜ்வாடி எம்.பிக்கள் தலையிட்டு பதில் கூறிக் கொண்டிருந்தனர். அப்போது திமுக எம்.பிக்கள் எழுந்து வடமாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மைல் கல்களில் இந்தியில் எழுதுகிறீர்கள். அதே போல தமிழகத்தில் ஏன் தமிழில் எழுதக் கூடாதுஎன காட்டமாகக் கேட்டனர்.
ஆனால், தொடர்ந்து தமிழுக்கு எதிராக சமாஜ்வாடி எம்.பிக்கள் பேசவே திமுக எம்.பிக்களான ஆதி சங்கர், கிருஷ்ணசாமி, விஜயன்ஆகியோர் அவர்களை நோக்கி பாய்ந்து சென்றனர். ஆனால், அவர்களை பிற கட்சி எம்.பிக்கள் ஓடி வந்து தடுத்து இழுத்தனர். அமைச்சர்கள்யஸ்வந்த் சின்ஹா, சுஷ்மா சுவராஜ், புவனாபென் சிகாலியா மற்றும் ஏராளமான காங்கிரஸ் எம்.பிக்கள் ஓடி வந்து திமுகவினரைப் பிடித்துக்கொண்டனர்.
ஆனாலும் ஆவேசம் குறையாத திமுக எம்.பிக்கள் சமாஜ்வாடி எம்.பிக்களை கடுமையான திட்டியபடி திமுக எம்.பிக்கள் தாக்க முயன்றனர்.நிலைமை மோசமாகவே இந்தப் பிரச்சனைக்கு பதிலளிக்க பிரதமர் வாஜ்பாய் எழுந்தார்.
ஆனால், திமுக உறுப்பினர்கள் ஆத்திரம் அடங்காமல் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி எம்.பிக்களை நோக்கி திமிரிக் கொண்டு முன்னேறவேஅவையை ஒத்தி வைத்துவிடுமாறு சபாநாயகர் மனோகர் ஜோஷியிடம் வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவையை 15 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
இன்று காலை நடந்த இச் சம்பவத்தால் அவையில் பெரும் அமளி நிலவியது. எதிலுமே ஒன்று சேராத அதிமுக, திமுகவினர் தமிழை முன்வைத்து ஒன்று சேர்ந்ததால் நாடாளுமன்றத்தின் வட மாநில எம்.பிக்கள் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் இன்று விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.


