வீரப்பன் விவகாரம்: நக்கீரன் கோபாலுக்கு முன் ஜாமீன்
சென்னை:
2 வழக்குகளில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்வழங்கியுள்ளது.
1998ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த மாணவர்கள் பக்தவச்சலம், தங்கவேலு ஆகியோர் போலீஸாருக்கு உளவுசொன்னதற்காக வீரப்பன் கும்பலால் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் கோபாலையும், நக்கீரன் நிருபர்கள் சிலரையும் குற்றவாளிகளாக போலீஸார் சேர்த்துள்ளனர்.இதுதவிர வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பன் தாக்கிய வழக்கிலும் கோபாலை குற்றவாளியாகசேர்த்துள்ளனர்.
இதில் நக்கீரன் நிருபர்களான சிவசுப்பிரமணியம், மகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
ஆனால், கோபால் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். அவரைத் தேடி வீட்டிலும் அலுவலகத்திலும்அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி வந்தனர். ஆனால், கோபால் சிக்காமல் தப்பித்து வந்தார்.
இந் நிலையில் கோபாலின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன் மீதான இருவழக்குகளிலும் முன் ஜாமீன் வழங்க வேண்டும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நேர்மையாக இருக்காதுஎன்பதால் இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் கோபால்.
இந்த மனுவை நீதிபதி நாகப்பன் இன்று விசாரித்தார். இந்த இரு வழக்குகளிலும் கோபாலுக்கு நிபந்தனையுடன்கூடிய முன் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார். தனது உத்தரவில் நீதிபதி கூறியதாவது:
அடுத்த 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் கோபால் சரணடைந்து ஜாமீனைப்பெற்றுக் கொள்ள வேண்டும்.
பின்னர் தினமும் கோபிச்செட்டிப்பாளையம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.அங்கு கோபலை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே போலீசார் விசாரிக்கலாம்.
அப்போது கோபாலின் பாதுகாப்பை போலீசார் தான் உறுதி செய்ய வேண்டும். அவரது உடல் நிலையையும்போலீசார் கவனத்தில் கொள்ள வேண்டும். கோபாலின் பாதுகாப்பை சென்னை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று நீதிபதி நாகப்பன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இதனால் கடந்த பல மாதங்களாக கோபால்- சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடையே நடந்து வந்த கண்ணாமூச்சிமுடிவுக்கு வருகிறது.


