45 நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு?
வாஷிங்டன்:
ஈராக்கைத் தாக்க தங்களுக்கு 45 நாடுகளின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறியுள்ளார்.
இந்த நாடுகள் தங்களது படைகளை அனுப்பவும், அமெரிக்க விமானங்கள் தங்கள் நாட்டின் மீது பறக்கவும், எரிபொருள் நிரப்பித் தரவும், ஈராக்கைப்புனரமைக்கவும் உதவ முன் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதில் 30 நாடுகள் மட்டுமே தங்கள் பெயரை வெளியிடலாம் என்று கூறியிருப்பதாகவும் மேலும் 15 நாடுகள் தங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டாம்என்று கேட்டுக் கொண்டுள்ளன என்றார்.
அமெரிக்காவுக்கு ஆதரவு தந்துள்ளதாக காலின் பாவல் குறிப்பிட்டுள்ள நாடுகளின் விவரம்:
ஆப்கானிஸ்தான், அல்பேனியா, ஆஸ்திரேலியா, அஸர்பைஜான், பிரிட்டன், பல்கேரியா, கொலம்பியா, செக் குடியரசு, டென்மார்க், எல் சால்வடோர்,எரித்ரியா, எஸ்டோனியா, எதியோப்பியா, ஜார்ஜியா, ஹங்கேரி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, லாட்வியா, லிதுவேனியா, மேசடோனியா, நெதர்லாந்து,நிகாரகுவா, பிலிப்பைன்ஸ், போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், துருக்கி, உஸ்பெகிஸ்தான் ஆகியவை.
மற்ற நாடுகள் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை என்றார் பாவல்.
அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளில் பெரும்பான்மையானவை முன்னாள் யு.எஸ்.எஸ்.ஆர். அமைப்பில் இருந்த நாடுகள். ரஷ்யா உடைந்துசிதைந்த பின் அமெரிக்க நிதியுதவியை நம்பியே இருக்கும் நாடுகள் இவை.
இந்தப் பட்டியலில் குவைத், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளின் பெயர் இல்லாதது ஆச்சரியத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கப் படைகளில் 80 சதவீதம்இந்த நாடுகளில் தான் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் மீதும் அமெரிக்க போர் விமானங்கள் பறக்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது. நேடோஉறுப்பினர்கள் என்ற வகையில் அமெரிக்காவுக்கு இந்த உதவியை இந்த நாடுகள் செய்தாக வேண்டிய நிலையில் உள்ளன.


