சென்னை பெண்ணின் முகமூடிக் கொள்ளை டிராமா
சென்னை:
சென்னை நகரையே உலுக்கிய முகமூடிக் கொள்ளைச் சம்பவம் பொய்யான தகவல் என்றும் சம்பந்தப்பட்ட பெண்ணே நடத்திய டிராமா என்றும் தெரிய வந்துள்ளது.
சென்னை அருகே உள்ள அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் கிரிஜா. இவர் நேற்று சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், தனது வீட்டுக்குள் அதிகாலை 3 முகமூடித் திருடர்கள் வந்ததாகவும், தன்னையும் குடும்பத்தினரையும் மிரட்டி ரூ. 1 லட்சம் பணம், 6 பவுன் நகைகளைப்ல பறித்துக் கொண்டு தனது குழந்தையையும் கத்தி முனையில் எடுத்துக் கொண்டு தப்பியதாகவும், 2 தெரு தள்ளி குழந்தையை விட்டு விட்டுப் போய் விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
சென்னை மக்களை பதறடித்தது இச் சம்பவம். இந் நிலையில் திருட்டுத் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் ஏழ்மையான சூழ்நிலையில் கிரிஜாவின் வீடு இருந்ததைப் பார்த்த போலீஸார் அவரிடம் ரூ. 1 லட்சம் பணம் எப்படி வந்தது என்று விசாரித்தனர்.
அதற்கு ஆரணியில் உள்ள தனது வீட்டை விற்ற பணம் என்று போலீஸாரிடம் தெரிவித்தார் கிரிஜா.
இதைத் தொடர்ந்து போலீஸ் படை ஆரணிக்கு சென்று விசாரணை நடத்தியது. ஆனால் கிரிஜாவுக்கே சொத்துக்களே கிடையாது என்று தெரியவந்தது.
இதையடுத்து கிரிஜாவின் மேல் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து கிரிஜாவிடம் தோண்டி தோண்டி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக வாக்குமூலம் அளித்தார் கிரிஜா.
தனது வீட்டிற்கு திருடர்கள் வரவில்லை என்றும் தானே நடத்திய நாடகம் என்றும் அவர் ஒப்புக் கொண்டார். கிரிஜா அப்பகுதியில் சீட்டுப் பிடித்து வந்துள்ளார். அதை திருப்பிக் கொடுக்க போதிய பணம் இல்லை.
எனவே என்ன செய்வது என்று தெரியாமல் முகமூடிக் கொள்ளையர்கள் என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
கிரிஜாவின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுவதை அறிந்த காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கர், அவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் கடுமையாக எச்சரிக்கை செய்து விடுதலை செய்துவிட்டார்.


