மரத்தடி கட்டப் பஞ்சாயத்துகளைத் தடுக்க 2 வாரத்தில் புதிய சட்டம்!
சென்னை:
தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கள், ஊர்ப் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் புதிய சட்டமசோதா இன்னும் 2 வாரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இத் தகவலை சென்னை உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி என்ற தொலைபேசித் துறையில் பணியாற்றி வரும் தலித் ஊழியரையும்,அவரது தாயாரையும் அவரது கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள், ஊர் மக்களின் காலில் விழ வைத்து தண்டனைகொடுத்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சுகந்தி வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கற்பக விநாயகம் கூறுகையில்,
கட்டப் பஞ்சாயத்துக்களைத் தடுக்க அவசரச் சட்டம் இயற்றுவது குறித்து இன்னும் 2 வாரங்களில் சாதகமானமுடிவைத் தெரிவிப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் என்னிடம் தெரிவித்துள்ளார்.
சட்டம் இயற்றுவதற்கு முன், கிராம கட்டப் பஞ்சாயத்துகள் குறித்து உரிய அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுக்கும்வகையில் பொது மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
பஞ்சாயத்துக்களில் வழங்கப்படும தண்டனைகளை கண்டித்து நான் கூறிய கருத்துக்களை திருவாடானை தொகுதிகாங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி, மற்றும் தேனி, தேவகோட்டை பகுதிகளைச் சேர்ந்த இரு பஞ்சாயத்துத் தலைவர்கள்விமர்சித்துள்ளனர். இது ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ளது. அவர்களது செயல் நீதிமன்றஅவமதிப்பாகும். இதனால் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அந்த மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இதற்கான சம்மன்களை அனுப்ப மதுரை மற்றும் சிவகங்கை நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்நீதிபதி.
இதையடுத்து வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

