For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனனி வழக்கை நீதிபதி கற்பக விநாயகம் விசாரிக்க தடைகோரி அதிமுக வழக்கறிஞர் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரியுள்ள ஜனனியின் வழக்கை நீதிபதி கற்பகவிநாயகம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜனனியின் விவகாரத்தில் பின்னணியை உடைக்கவும், உண்மைகளை வெளியே கொண்டு வரவும் நீதிபதி கற்பக விநாயகம் முயன்று வரும் நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடராஜனின் தோழியாகக் கருதப்படும் மதுரையைச் சேர்ந்த ஜனனி, அவரது தாயார் ரெஜீனா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது கஞ்சா கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜனனியும் ரெஜீனாவும் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

இந்த மனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் ஜனனி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நீதிபதி ரகசிய விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில் பெரும் பின்னணி இருப்பதாகவும், அந்த உண்மைகளை ஜனனி பயப்படாமல் நீதிமன்றத்தில் சொல்லலாம் எனறும் கூறிய நீதிபதி, தான் நினைப்பதை எல்லாம் எழுதித் தருமாறு ஜனனியிடம் கூறினார்.

இதையடுத்து தனி அறையில் ஜனனி சொன்னதையெல்லாம் நீதிபதியின் ஸ்டெனோ பதிவு செய்து கொண்டார். அப்போது இந்த வழக்கில் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படும் தமிழகத்தின் நம்பர் டூ குறித்த உண்மைகளை ஜனனி போட்டு உடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது போலீசார் நடந்து கொண்ட விதம், ஜனனியைக் கைது செய்து அவரிடம் காட்டப்பட்ட முரட்டுத்தனம், அலைகழிப்புகள் ஆகியவற்றையும் கண்டித்த நீதிபதி மதுரை போலீஸ் கமிஷ்னர் விஜய்குமாருக்கு சாட்டையடி தந்தார். நீங்கள் ஐ.பி.எஸ். படித்துவிட்டு இவ்வாறு சட்டத்தை மீறலாமா என்று கேட்டார்.

மேலும் ஜனனியை சிறைக்கு அனுப்பாத நீதிபதி அவரை இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடியும் வரை சென்னை மகளிர் காப்பகத்தில் வைக்க உத்தரவிட்டார்.

இந் நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று மாலை 3 மணிக்கு மீண்டும் நடக்க இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் இன்று காலை ஜெயலலிதாவின் வழக்கறிஞரும் அதிமுக எம்.பியுமான ஜோதி அவசர மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கறிஞர் கந்தசாமி என்பவர் சார்பில் இந்த மனுவை ஜோதி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

ஜனனியின் மனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரிக்கும் முறை தவறாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஜனனியை இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, ஐபிஎஸ் அதிகாரியான மதுரை கமிஷ்னர் விஜய்குமாரை நிற்க வைத்து கேள்விகள் கேட்டுள்ளார்.

ஜனனியிடம் தனி அறையில் ரகசிய வாக்குமூலம் வாங்கியுள்ளார். இதனால் ஜனனியின் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி கற்பக விநாயகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப் பிரகாசம் விசாரணை நடத்தவுள்ளனர்.

நீதிபதி கற்பகவிநாயகம் முழு உண்மைகளையும் வெளியே கொண்டு வந்துவிடுவார் என்ற பயத்தில், ஜனனியின் வழக்கில் பின்னணியில் உள்ள சூத்ரதாரி கலவரமடைந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஜனனி கைதானபோது ஆளுநருக்கு கந்தசாமி என்பவரின் பெயரில் தான் ஒரு பேக்ஸ் போனது. அந்த கந்தசாமி தான் இப்போது விசாரணைக்குத் தடைகோரும் வழக்கறிஞர் கந்தசாமியா என்று தெரியவில்லை.

எப்படியோ, தனது விசாரணைகளின்போது மிக வித்தியாசமான அணுகுமுறையைக் கடைபிடிப்பவர் நீதிபதி கற்பக விநாயகம். பஞ்சாயத்தாரில் மண்டியிட வைக்கப்பட்ட தலித் பெண்ணிடம் அந்த பஞ்சாயத்தாரையே மன்னிப்பு கேட்க வைத்தவர் கற்பக விநாயகம்.

அதே போல சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சேதுபதி ராமலிங்கம் தனது மருமகள் சங்கீதாவிடமே நடத்திய செக்ஸ் லீலைகளையடுத்து பதிவான வழக்கில், அந்தப் பெண்ணின் மண வாழ்க்கை சிதைந்துவிடாமல் தடுத்து ராமலிங்கத்தின் மகனையும் சங்கீதாவையும் ஒன்று சேர வைத்தார்.

மேலும் சமீபத்தில் ஒரு பள்ளி விவகாரம் தொடர்பாக அண்ணன்- தம்பி இடையே சண்டை வந்து அது வழக்கானது. இருவரையும் அழைத்துப் பேசி, உறவுகளின் முக்கியத்துவத்தை உணர வைத்தார் நீதிபதி. இதையடுத்து இருவருமே வழக்கை வாபஸ் பெற்றதோடு, குடும்பத்தோடு வந்து நீதிமன்றத்தில் கண்ணீர் சிந்தி இணைந்தனர். நீதிபதியை கும்பிட்டு நன்றி கூறிவிட்டுச் சென்றனர்.

ஒரு கடத்தல் வழக்கில் ப.சிதம்பரத்தின் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரெங்கநாதனை, காந்தியடிகளின் சுயசரிதையை கட்டாயமாகப் படிக்க வைத்தார் கற்பக விநாயகம்.

இப்படிப்பட்ட மனிதாபிமான நீதிபதியின் மீது பாய்ந்துள்ளது அதிமுக அஸ்திரம். முன்பு ஒரு நீதிபதியின் மருமகன் மீதே கஞ்சா வழக்கைப் போடச் செய்தது அதிமுக அரசு என்பது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X