For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தர்மபுரி, சிதம்பரம், வடசென்னை: நடுக்கத்தில் பா.ஜ.க.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தங்களுக்கு தர்மபுரி, சிதம்பரம், வட சென்னை ஆகிய தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது குறித்து பா.ஜ.கவில் அதிருப்தி நிலவுகிறது. வெல்லவே முடியாத தொகுதிகள் தங்கள் தலையில் கட்டப்பட்டுள்ளதாக அக் கட்சியினரே கூறுகின்றனர்.

இந்தத் தொகுதிகள் தவிர கடந்த முறை அக் கட்சி வென்ற நாகர்கோவில், கோயம்புத்தூர், நீலகிரி, பாண்டிச்சேரி ஆகிய தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.

இதில் நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவார். கோவையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் நிறுத்தப்படுவார். நீலகிரி மீண்டும் மாஸ்டர் மாதனே போட்டியிடலாம்.

இந்த மூன்று தொகுதிகளிலும் பிரச்சனை அதிகம் இல்லை. ஆனால், மற்ற நான்கிலும் யாரை நிறுத்துவது என்று தெரியாமல் அக் கட்சி குழம்பிப் போயுள்ளது.

கேட்டது தென்சென்னை.. கிடைத்தது வட சென்னை:

தென் சென்னை தொகுதியில் உள்ள படித்தவர்கள், முற்பட்ட சமுதாயத்தினரின் வாக்குகள் மீது கண் வைத்து இந்தத் தொகுதியைத் தான் பா.ஜ.க. கோரியது. இங்கு இல.கணேசனை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அந்தத் தொகுதியைத் தராமல் தொழிலாளர்கள் நிறைந்த, கம்யூனிஸ்ட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள வட சென்னையை பா.ஜ.கவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கிவிட்டார். இங்கு வெல்வது மிகக் கடினம் என்பதால் இல.கணேசன் நிற்பாரா என்பதே சந்தேகமாகியுள்ளது. கணேசன் நிற்கவிட்டால் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரான குமாரவேலு நிறுத்தப்படலாம்.

இங்குள்ள நாடார் சமூகத்தினரின் வாக்குகளை மனதில் கொண்டு, இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் டாக்டர் தமிழிசை. இவர் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.கவில் இருந்து வருகிறார்.

இங்கு திமுக சார்பில் இப்போதையே எம்.பியும் தொழிற்சங்கத் தலைவருமான குப்புசாமி நிற்பது கிட்டதட்ட உறுதியான ஒன்று.

பா.ம.கவின் கோட்டையிலே..

அதே போல மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் போட்டியிட்ட சேலத்தை கேட்ட பா.ஜ.கவுக்கு அதற்குப் பதிலாக தர்மபுரி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதி தங்களுக்குத் தரப்படும் என பா.ஜ.க. கனவில் கூட நினைக்கவில்லை. சேலம் கொடுத்தால் குமாரமங்கலத்தின் சகோதரி லலிதாவை நிறுத்த அக் கட்சி திட்டமிட்டிருந்தது.

வன்னியர்கள் நிறைந்த இப் பகுதி பா.ம.கவின் கோட்டையாக விளங்கி வருகிறது. இந்த முறை திமுக கூட்டணியில் தர்மபுரியில் பா.ம.க. போட்டியிடும் நிலையில் பா.ஜ.கவுக்கு அங்கு வெற்றி வாய்ப்பு சிறிதும் இல்லை.

அதிமுக வாக்குகளை மட்டுமே நம்பி களத்தில் இறங்க வேண்டிய நிலையில் பா.ஜ.க. உள்ளது. இம் மாவட்டத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் பா.ஜ.கவில் இல்லாதது மிகப் பெரிய குறை. ஜனதா தளத்தில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்த முன்னாள் ஒசூர் எம்.எல்.ஏ. வெங்டசாமியை நிறுத்தலாமா என்ற யோசனையும் உள்ளது. ஆனால், அவருக்கு தெலுங்கு பேசத் தெரிந்த அளவுக்கு சரியாக தமிழ் பேச வராது.

தலித் வேட்பாளரைத் தேடி...

அதைவிட கஷ்டமான தொகுதி சிதம்பரம். ரிசர்வ் தொகுதியான இங்கு தலித் வேட்பாளரை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. உள்ளது. அக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கிருபாநிதிக்கு சொந்த ஊர் சிதம்பரம் தான். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இப் பகுதியில் சிறிதும் செல்வாக்கு இல்லாதவர்.

மேலும் இல.கணேசன் போன்றவர்கள் அவருக்கு சீட் கிடைக்கக் கூடாது என்பதிலும் தீவிரமாக உள்ளனர். இதனால் சிதம்பரம் தொகுதிக்கு ஆள் தேடுவதே பா.ஜ.கவுக்கு மிகக் கடினம்.

சாதகமான பாண்டிச்சேரி:

அடுத்தது பாண்டிச்சேரி. காங்கிரசின் கோட்டையான இங்கு வன்னியர்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்கள். இந்த முறை திமுக கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடுகிறது. தங்களுக்கு தொகுதி தரப்படாததால் காங்கிரஸ் வெறுப்பில் உள்ளது. பா.ம.க. வேட்பாளருக்கு எதிராக உள்வேலை செய்து காங்கிரசே அந்த வேட்பாளருக்கு வேட்டு வைத்தாலும் ஆச்சரியமில்லை.

இதனால், இந்தக் குழப்பத்தில் பா.ஜ.க குளிர்காயந்துவிட நல்ல வாய்ப்புள்ளது. கூடவே அதிமுகவுக்கும் இங்கு ஓட்டு வங்கி உள்ளதால் பாண்டிச்சேரியில் எதுவும் நடக்கலாம். சேலம் கிடைக்காததால் இந்தத் தொகுதியில் லலிதா குமாரமங்கலம் பா.ஜ.க. சார்பில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

பிரபு பயத்தில் நீலகிரி:

நீலகிரியில் கடந்த முறை வென்ற மாஸ்டர் மாதனே மீண்டும் நிறுத்தப்படலாம். ஆனால், காங்கிரஸ் சார்பில் ஆர்.பிரபு நின்றால் மாதன் கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். இதை பா.ஜ.கவிடமே முதல்வர் ஜெயலலிதா நேரில் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மாதனுக்கு பதிலாக வேறு யாரையாவது நிறுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

பிரபுவுக்கு இப் பகுதி தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியினரிடையே நல்ல செல்வாக்கு உண்டு. இதைவிட பிரபுவிடம் உள்ள பண பலத்தை மாதன் சமாளிப்பது கஷ்டமே.

உறுதியான நிலையில் நாகர்கோவில், கோவை:

பிரச்சனையே இல்லாமல் பா.ஜ.க வெல்லும் என்று கருதப்படும் இடம் நாகர்கோவில் தான். இங்கு பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்கொள்ளும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பெல்லார்மீனும் இல்லை, திமுகவும் இல்லை.

அதே போல கோவை தொகுதியிலும் எதிர் தரப்பு வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த சுப்பராயனால், பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணனை வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. காங்கிரஸ் கோட்டையாக இருந்த கோவை பல காலத்துக்கு முன்பே பா.ஜ.க. கோட்டையாகிவிட்டது. மதக் கலவரத்துக்குப் பின் கோட்டை மேலும் பலமானதாகிவிட்டது.

டெல்லி, மும்பை என்ன ஆச்சு?

7 தொகுதிக்கு மேல் கேட்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் இணையாக எங்களுக்கும் டெல்லி, மும்பை, கர்நாடகத்தில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுக வைத்த அதிரடி கோரிக்கை காரணமாகவே 10 சீட் என்று பிடிவாதம் பிடித்த பா.ஜ.க. 7க்கே இறங்கி வந்துவிட்டதாகவும் தெரிகிறது.

நாங்கள் விட்டுக் கொடுத்துவிட்டதால் டெல்லி, மும்பை, கர்நாடக சீட்களைக் கேட்டு அதிமுக நச்சரிக்காது என்கின்றனர் தமிழக பா.ஜ.கவினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X