For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுடன் தொகுதி உடன்பாட்டுக்கு எதிர்ப்பு: பா.ஜ.க. தலைமையகத்தில் தொண்டர்கள் முற்றுகைப் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருச்சி, புதுக்கோட்டை தொகுதியை அதிமுகவிடம் வாங்கத் தவறிய பா.ஜ.க. தலைவர்களைக் கண்டித்து அக் கட்சியின் தொண்டர்கள் இன்று சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசிய சுகுமாறன் நம்பியார் திருச்சியில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கே அதிர்ச்சி தரும் விதத்தில் அந்தத் தொகுதியை ஜெயலலிதா தரவில்லை.

அதே போல அதிமுகவின் முக்கிய ஜால்ராவாக விளங்கிய எச்.ராஜாவுக்கு சிவகங்கையைத் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையும் தரவில்லை. கட்சியின் முக்கியத் தலைவரான இல.கணேசன் எதிர்பார்த்த தென் சென்னையும் தரப்படவில்லை. இதனால் அவர் போட்டியே இடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அனைத்துக்கும் உச்சமாக புதுக்கோட்டையைத் தராத ஜெயலலிதா, மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் பா.ஜ.க. சார்பில் தமிழகத்தில் எங்குமே போட்டியிடக் கூடாது என்று நிபந்தனை போட்டுவிட்டார். இதனால் மாநில பா.ஜ.க. சுரத்து இழந்து காணப்படுகிறது.

மீண்டும் தொகுதி கிடைத்த மகிழ்ச்சியில் இருப்பது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் (நாகர்கோவில்), மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணனும் (கோவை) தான். நீலகிரியைக் கொடுத்தாலும் அத் தொகுதியின் பாஜ.க. வேட்பாளராக மாஸ்டர் மாதன் நிறுத்தப்பட்டால் அவருக்காக வேலை பார்க்க மாட்டோம் என்று அதிமுக கூறிவிட்டது.

இந் நிலையில் திருச்சி, புதுக்கோட்டையில் இருந்து 5 வேன்களில் அம் மாவட்ட பா.ஜ.க. தொண்டர்கள் இன்று சென்னை வந்தனர். கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், தலைவர் ராதாகிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்றனர்.

ஆனால், அவர் வெளியில் போய்விட்டதாக தகவல் தரப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா நடத்தினர். இதையடுத்து ஓடி வந்த பொதுச் செயலாளர் மோகன் ராஜூலு, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவர்களை கெஞ்சிக் கூத்தாடி உள்ளே அழைத்துச் சென்றனர்.

அவர்களை நிருபர்கள் சந்தித்துவிடாதபடி கதவைப் பூட்டினர். உங்களுக்கு மட்டும் சீட் வாங்கிக் கொண்டு விட்டீர்கள், பிறருக்கு சீட் கிடைக்காதது குறித்து உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என தொண்டர்கள் உரத்த குரலில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கத்தினர். இதையடுத்து கட்சி அலுவலகத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார் அமைச்சர்.

தொண்டர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

வாஜ்பாய் தான் தலைவர்...

அத்வானி-ஜெயலலிதா கூட்டணி தான் உருவாகியுள்ளது. வாஜ்பாய்-ஜெயலலிதா கூட்டணியே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளதை பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் மறுத்தார்.

முன்னதாக நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறியதற்கு பதில் சொல்வதாக நினைத்து காங்கிரஸ் எம்.பியான ரேணுகா செளத்ரி எங்களது கட்சியின் தலைவர்களின் தேசியத்தைப் பற்று சந்தேகம் கிளப்பி, அவர்களுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று கீழ்த்தரமாக பேசியுள்ளார்.

அத்வானி-ஜெயலலிதா கூட்டணி உருவாகியுள்ளதாகவும், வாஜ்பாயைக் கூட பா.ஜ.க. கெடுத்துவிடுமோ என்று சந்தேகப்படுவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார். சந்தேகம் என்ற நோய் திமுக தலைமைக்கு வந்தது குறித்து வருத்தப்படுகிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X