For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் காவல்: தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Jayandrarசங்கராச்சாரியாரை போலீஸ் காவலில் அனுப்புவதா இல்லையா என்பது குறித்து நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாககாஞ்சிபுரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்குக்காக இன்று சங்கராச்சாரியார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். முதலில் தீர்ப்பை இன்று மாலைவழங்குவதாக அறிவித்த நீதிபதி உத்தமராஜன், பின்னர் தீர்ப்பை நாளை அறிவிப்பதாகக் கூறிவிட்டார்.

சங்கராச்சாரியாரை போலீஸ் காவலில் வைத்து 5 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனு தாக்கல் செய்தது. இதனைவிசாரித்த நீதிபதி, சங்கராச்சாரியாரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

சிறையிலிருந்து போலீஸ் வேனில்...

இதையடுத்து இன்று காலை 11.15 மணிக்கு வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சங்கராச்சாரியார் அழைத்துவரப்பட்டார் சங்கராச்சாரியார். பகல் 12.45 மணிக்கு அவர் காஞ்சி நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். அவரை சங்கர மடம்வழியாக அழைத்து வராமல், சென்னை-பெங்களூர் ஹைவேயில் பொன்னேரிக்கரை வழியாக நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தனர்.

ஜெயேந்திரர் பயணம் செய்த வேனில் ஒரு எஸ்.ஐ. உட்பட 13 போலீஸார் பாதுகாப்புக்காக உடன் வந்தனர். அந்த வேனுக்குமுன்னும் பின்னும் 7 போலீஸ் வாகனங்கள் வந்தன.

வேனில் இருந்து சங்கராச்சாரியார் இறங்கியதும் அங்கு கூடியிருந்த பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, இந்து முன்னணிதொண்டர்கள் ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர என கோஷமிட்டனர்.

ராணி ஜேத்மலானி:

நீதிபது உத்தமராஜன் முன் சங்கராச்சாரியார் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக வாதாட தினகரன்,ராம்ஜேத்மலானியின் மகள் ராணி ஜேத்மலானி, சத்யநாராயணன், அருண் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராயினர். போலீஸ் தரப்பில்வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆஜரானார்.

ஜெயக்குமார் வாதாடுகையில், கொலை தொடர்பாக ஜெயேந்திரரிடம் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளது. சங்கர மடத்தில்இருந்து கொலையாளிகளுக்குப் பணம் தரப்பட்டது, போலியாக 5 பேரை நீதிமன்றத்தில் சரணடைய வைத்தது ஆகியவை குறித்துவிசாரிக்க வேண்டியுள்ளது. மேலும் அவர் மூலமாக கொலை தொடர்பான பல ஆதாரங்களையும் திரட்ட வேண்டியுள்ளது.

இதனால், அவரை குறைந்தபட்சம் 5 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்ப வேண்டும் என்றார்.

இதற்கு ஜெயந்திரரின் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். வழக்கறிஞர் தினகரன் வாதாடுகையில்,

ஜெயேந்திரரரின் வழக்கறிஞர் வாதம்:

நீதிமன்றக் காவலில் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டவரை, அந்தக் காவல் முடியும் முன்பாக போலீஸ் காவலில் அவரைஅனுப்ப குற்றவியல் சட்டத்தின் 167வது பிரிவின்படி சாத்தியமில்லை. மேலும் முதலில் இந்த நீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரைபோலீசார் கொண்டு வந்து நிறுத்தியபோது, போலீஸ் காவலுக்கு அனுப்புமாறு கோரவில்லை.

இதனால் தான் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்தக் கொலை தொடர்பான பண பட்டுவாடா உள்ளிட்ட சாட்சியங்கள் தங்களிடம் ஏற்கனவே இருப்பதாகச் சொல்லித்தான் சங்கராச்சாரியாரை போலீசார் கைதே செய்தனர். இப்போது பண பட்டுவாடா குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றுசொல்லி அவரை தங்கள் காவலில் எடுக்க முயல்வது ஏன்?. அவரை போலீஸ் காவலில் வைத்து என்ன ஆதாரத்தை அவர்களால்திரட்டிவிட முடியும்? என்று கேட்டார்.

இதையடுத்துப் பேசிய போலீஸ் தரப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார், இந்த வழக்கு இப்போதுள்ள நிலையில் சட்டத்தின் 167வதுபிரிவு குறித்தெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கக் கூடாது. சங்கராச்சாரியாரை போலீஸ் காவலில் அனுப்ப போதியஆதாரங்களை நாங்கள் இந்த நீதிமன்றத்திடம் சமர்பித்துவிட்டோம். அதன் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்என்றார்.

மாலையில் தீர்ப்பு:

இந்த இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் மாலையில் தீர்ப்பளிப்பதாக அறிவித்தார்.இதையடுத்து நீதிமன்றத்திலேயே சங்கராச்சாரியார் அமர வைக்கப்பட்டிருந்தார்.

மாலையில் பேசிய நீதிபதி உத்தமராஜன், இந்த வழக்கில் இரு தரப்பினரின் வாதங்களும் மிகவும் நீண்டுவிட்டன. இதனால் இந்தவிஷயத்தில் முடிவெடுக்க எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் நாளை காலை 10.30 மணிக்கு இந்த மனு மீதுதீர்ப்பளிக்கிறேன் என்று அறிவித்தார்.

இதையடுத்து சங்கராச்சாரியார் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வெடிகுண்டுப் புரளி:

முன்னதாக இன்று காலை இந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளம்பியதால் பெரும் பரபரப்புஏற்பட்டது. இதையடுத்து மோப்ப நாய்களைக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. போலீசாரும் பெரும் எண்ணிக்கையில்குவிக்கப்பட்டு சோதனையிட்டனர். ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை. இது வெறும் புரளியே என்று தெரியவந்தது.

இருப்பினும் தொடர்ந்து மோப்ப நாய்ப் படையினர் நீதிமன்ற வளாகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் 500 ஆயுதம்தாங்கிய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்துக்குள் செல்ல வழக்கறிஞர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. வழக்கறிஞர்கள் கூட மெட்டல்டிடெக்டர்களைக் கொண்டு சோதனையிடப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

சங்கராச்சாரியார் நீதிமன்றம் வருவதையொட்டி அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஏராளமான அளவில்குவிந்துள்ளனர்.

போலீஸ் காவலில் சங்கராச்சாரியார் ஒப்படைக்கப்பட்டால் அவரை தனி பங்களாவிலோ அல்லது காவல்துறை அதிகாரியின்அலுவலகத்திலோ வைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X