For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பி.இ., எம்பிபிஎஸ்: இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்- ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ் தான். இதை வலியுறுத்தி இன்றுசென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

இந் நிலையில் தான் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமதாசுக்கு மாணவர்கள் நன்றி:

இந் நிலையில் இன்று காலை சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள பாமக அலுவலகத்திற்கு வந்த மாணவர்கள் ராமதாசைச் சந்தித்து தங்களது நன்றிகளைத்தெரிவித்துக் கொண்டனர். சில மாணவர்கள் உற்சாக மிகுதியில் வெடிகளைப் போட்டனர்.

ராமதாஸ் பேட்டி:

பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறுகையில்,

நுழைவுத் தேர்வு ரத்து என்பது மிக முக்கிய முடிவு என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். முக்கிய முடிவு தான். அதில் சந்தேகமில்லை. எங்களது முயற்சிக்குக்கிடைத்த மகத்தான வெற்றி இது.

இந்த நுழைவுத் தேர்வால் கடந்த 20 ஆண்டுகளாக சி.பி.எஸ்.சி. மாணவர்கள் தான் பலனடைந்து வந்தார்கள். மாநில அரசின் தேர்வெழுதியவர்களும் கிராமப்புறமாணவர்களும் பலன் பெறவே இல்லை.

தேர்வு ரத்தானதால் மட்டும் நான் திருப்தியடைந்து விட மாட்டேன். மாணவர் சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் வகையிலான அரசியல்சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும் வரை நான் ஓய மாட்டேன்.

தொழிற் கல்வி படிப்புகளில் ஊரகப் பகுதி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த 25 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத் திரும்ப வழங்கவேண்டும்.

மேலும் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் தந்து தொழில் கல்லூரிகளில் சேர அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். தமிழ்ப் பாடத்தில்எடுத்த மதிப்பெண்ணையும் சேர்த்தே தொழில் கல்லூரிகளில் சேர கட்-ஆப் நிர்ணயிக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்று நடத்துவதாக இருந்த போராட்டம் அவசியமற்றதாகிறது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்துள்ளது வரவேற்புக்குரியது. இருப்பினும் புதியமுறை மூலம் குழப்பம் ஏற்படாமல் தடுக்க முன்னேற்பாடாக தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார்.

அரசியல் கட்சிகளைத் தவிர கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். சென்னையின் முன்னணி சுய நிதிக் கல்லூரிஅதிபரான ஜேப்பியார் கூறுகையில்,

இந்த தேர்வு ரத்து மூலம் மாணவ சமுதாயம் பெரும் நிம்மதியை அடைந்துள்ளது. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, மிகச் சரியான முடிவாகும் என்றார்.

மனப்பாடம் செய்வது வளரும்: கல்வியாளர் கருத்து

பிரபல கல்வியாளர் ராஜகோபாலன் கூறுகையில், இந்த முடிவு சரியானதுதான் என்றாலும் சற்று முன்பே எடுத்திருக்கலாம். காரணம், நுழைவுத் தேர்வுக்காக பல்வேறுஇடங்களில் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று, மிகவும் கஷ்டப்பட்டுப் படித்து தேர்வை எழுதிய பலருக்கு, இந்த ரத்து முடிவு மன வருத்தம் தரலாம். அவர்களில் பலர்வழக்குகளும் தொடுக்கும் வாய்ப்பு உண்டு.

இருப்பினும், இந்த தேர்வு ரத்தானது மிகவும் சந்தோஷப்பட வேண்டிய ஒன்று. இதேபோல, டியூஷன் வகுப்புகளுக்கும் அரசு தடை விதித்தால் நன்றாக இருக்கும்.வகுப்பில் பாடம் கேட்பதுடன் நில்லாமல், காலையிலும், மாலையிலும் மாணவர்கள் டியூஷனுக்குச் செல்கிறார்கள். இதனால் மனதளவில் அவர்கள் சோர்வடைந்துவிடுகிறார்கள்.

இதுதவிர கைடுகளும் (கோனார் உரை போன்றவை) அவர்களது படிக்கும் ஆர்வத்தைத் தடுத்து மனப்பாடம் செய்யும் ஆர்வத்தையே அதிகரிக்கிறது. ஆசிரியர்களும்இப்போதெல்லாம் பாடத்தை வீட்டிலேயே தயார் செய்து விட்டு வந்து நடத்துவதில்லை, இந்த கைடுகளைப் பார்த்தே நடத்தி விட்டுச் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட டியூஷன் வகுப்புகளுக்கும், ரெடிமேட் கைடுகளுக்கும் அரசு தடை விதித்தால் மிகவும் நலமாக இருக்கும் என்றார் ராஜகோபாலன்.

பிளஸ் டூ மதிப்பெண்ணை மட்டுமே வைத்து உயர் கல்வியில் சேர முடியும் என்பதால், இனிமேல் மாணவர்கள் மத்தியில் மனப்பாடம் செய்வது அதிமாகும் என்றும் சிலகல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X