For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மாநகராட்சியைக் கலைக்க ஜெ. திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் பலர் மீது சரமாரியான புகார்கள் எழுந்திருப்பதால்மாநகராட்சியைக் கலைப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு முதல்வர் ஜெயலலிதா இப்போதே தயாராகி வருகிறார். பல்வேறு சலுகைகள்,திட்டங்களை அறிவித்து வரும் அவர், தனக்கு சாதகமாக உள்ள பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துபணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.

அதிமுகவுக்கு அதிக பாதகத்தைக் கொடுக்கக் கூடியதாக கருதப்படும் தலைநகர் சென்னை குறித்து ஆரம்பத்தில்அவர் அலட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தார். இப்போது சென்னையையும் அவர் குறி வைக்கத்தொடங்கியுள்ளார்.

முதல் கட்டமாக சென்னை நகரில் நிலவும் பெரும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்கக் கூடிய வகையில், புதிய வீராணம்திட்டத்தை நிறைவேற்றினார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு கோடை காலத்தைப் போல இந்த ஆண்டு கோடை காலத்தில் சென்னை நகரில்குடிநீர்ப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கவில்லை. தண்ணீர்ப் பிரச்சினை பெரிய அளவில் குறைந்துள்ளது.

இதன் பிறகு சென்னை மாநகரின் காவல்துறையை பலப்படுத்தினார் ஜெயலலிதா. சென்னைப் புறநகர்ப் பகுதிமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அப்பகுதிகள் அடங்கிய செங்கை கிழக்கு காவல் மாவட்டத்தை,சென்னை மாநகர காவல்துறையுடன் இணைத்தார்.

மினி பஸ் வசதி:

இதையடுத்து சென்னைப் புறநகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மினி பஸ் வசதியையும் தற்போதுகொண்டு வந்துள்ளார். முதல் கட்டமாக சில பகுதிகளில் மினி பஸ்களை இயக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

படிப்படியாக அனைத்துப் புறநகர்ப் பகுதிகளிலும் மினி பஸ் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது (மினிபஸ்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய திமுக, சென்னை புறநகர்களில் இப்பேருந்துகளை இயக்க கடும்எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது).

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பாதாள ரயில் மற்றும் பல்வேறு மேம்பாலத்திட்டங்களையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்து சென்னை மக்களை குளிர்விக்க நினைத்து பல திட்டங்களை அறிவித்து வரும் ஜெயலலிதா,அடுத்து ஒரு மேஜர் திட்டத்தையும் அறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு பீதியூட்டப் போவதாக கூறப்படுகிறது.

அந்த மெகா பிளான் தான் சென்னை மாநகராட்சிக்கு திடீர் தேர்தல். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சென்னைநகரில் அதிமுகவின் ஓட்டு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ள ஜெயலலிதா, சமீபத்தில்அதிமுக கவுன்சிலர்களை திடீரென அழைத்துப் பேசினார்.

சென்னை நகருக்காக அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்களுக்கு சரியாக போய்ச் சேருகிறதா என்பது குறித்துஅவர்களிடம் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

ஆனால் அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை விளக்கியதை விட, சக கவுன்சிலர்கள்குறித்து சரமாரியாக ஆளாளுக்கு போட்டுக் கொடுத்ததே அதிகமாக இருந்ததால் ஜெயலலிதா பெரும் அதிர்ச்சிஅடைந்தார்.

அப்போது தான் அதிமுக கவுன்சிலர்கள் மீது என்னென்ன பிரச்சினைகள், குறைபாடுகள், புகார்கள் உள்ளனஎன்பது அவருக்குத் தெரியவந்ததது. குறிப்பாக துணை மேயர் கராத்தே தியாகராஜன், கவுன்சிலர் வெற்றிவேல்(இருவரும் காங்கிரஸிலிருந்து அதிமுகவுக்கு வந்தவர்கள்) ஆகியோர் மீதுதான் ஏராளமான புகார்கள்குவிந்ததாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலலிதா கராத்தேவுக்கு டோஸ் விட்டாராம். மேலும், தொடர்ந்து இதுபோலபுகார்கள் வந்தாலோ அல்லது சரியாக செயல்படாவிட்டாலோ, மாநாகராட்சியைக் கலைத்து விடுவேன் என்றும்எச்சரித்து அனுப்பினாராம்.

திடீர் தேர்தல்:

கவுன்சிலர்களை எச்சரிக்கவே அவ்வாறு ஜெயலிதா கூறினார் என்றாலும் கூட நிஜமாகவே சென்னைமாநகராட்சிக்கு திடீர் தேர்தல் நடத்தும் திட்டம் ஜெயலலிதா மனதில் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில்கிசுகிசுக்கப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் வைத்து அதில் ‘எப்படியாவது‘ ஜெயித்துவிட்டால், அந்த வெற்றியைக் கொண்டு சட்டசபைத் தேர்தலில் சென்னையில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஜெயலலிதா நினைப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சென்னையில் தான் திமுகவின் முன்னணித் தலைவர்கள்( கருணாநிதி உள்பட)போட்டியிடுவார்கள்என்பதால், மாநகராட்சித் தேர்தல் மூலம் அவர்கள் மனதில் பீதியை ஏற்படுத்தலாம் என்பதும் அவரது திட்டமாம்.

இருப்பினும் இதை செயல்படுத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உள்ளாட்சிஅமைப்புகளுக்கான பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி சென்னை மாநகராட்சியின் பதவிக்காலம் 2006ம் ஆண்டுஅக்டோபர் மாதம் தான் முடிவடைகிறது.

ஒரு உள்ளாட்சி அமைப்பதைக் கலைப்பதாக இருந்தால் தனியாக கலைக்க முடியாது, ஒட்டுமொத்தமாக தமிழகம்முழுவதும் தான் கலைக்க முடியும்.

எனவே சென்னை மாநகராட்சியை மட்டும் இடையில் கலைப்பதில் சட்டச் சிக்கல் இருப்பதால் சட்டசபைத்தேர்தலுக்கு முன்பாக எப்படி சென்னை மாநகராட்சியைக் கலைத்து தேர்தல் வைக்க முடியும் என்ற கேள்விஜெயலலிதா முன்பு வைக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி சென்னை மாநகராட்சியைக் கலைப்பதாக இருந்தாலும், ஒரு மாதத்திற்கு முன்பாகவே கலைப்புகுறித்து நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். அதன் பின்னர் 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், சட்டசபைக்கு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தேர்தல் வரக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் அவசரம் அவசரமாக சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்துவது சரியாகஇருக்காது என்று சில மூத்த அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கு ஆலோசனை கூறியிருப்பதாக தெரிகிறது.

தீவிர ஆலோசனை:

மேலும், ஸ்டாலினை மேயர் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பான வழக்கு இன்னும் உயர்நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கின் தீர்ப்பு வெளி வரும் வரை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த முடியாதநிலையும் உள்ளதாம்.

சென்னை மாநகராட்சி நிலவரம் குறித்த இத்தனை குழப்பங்களும் ஜெயலலிதா முன்பு எடுத்துவைக்கப்பட்டிருக்கிறதாம். இருப்பினும் மாநகராட்சிக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தினால் அது சட்டசபைத்தேர்தலுக்கு மிகப் பெரும் பலமாக அமையும் என்று ஜெயலலிதா திடமாக நம்புகிறாராம்.

சென்னை மாநகராட்சியைக் கலைப்பது குறித்து ஜெயலலிதா உறுதியாக இருப்பதால் சட்டச் சிக்கல்களைசமாளித்து தேர்தலை நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடந்து வருகிறதாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X