For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் கட்சியில் ஜாதிப் பூசல்: வன்னிய தலைவர்கள் தனி கோஷ்டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் கட்சியில் உள்ள வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் திடீரென தனி கோஷ்டியாக புறப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதற்கும், காங்கிரஸ் கட்சியில் வன்னியர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கும் இவர்கள்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏதாவது ஒரு பிரச்சினையை வைத்து காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது ஏதாவது ஒரு சலசலப்பு இருந்து கொண்டேதான்இருக்கிறது. கடலும், கடலலையும் போல காங்கிரஸும், கோஷ்டிப் பூசலும் பிரிக்க முடியாதவை.

இப்போது புதிதாக ஒரு கோஷ்டி காங்கிரஸில் கிளம்பியுள்ளது. அது தான் வன்னியர் சமுதாயத் தலைவர்களின் புதுக் கோஷ்டி.

ஜி.கே.வாசனுக்கு எதிராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தீவிரமாக ஈடுபடுவது தெரிந்ததுதான். அவருக்கு மறைமுகமாக சில மூத்ததலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமானவர்கள் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களான திண்டிவனம்ராமமூர்த்தி, இரா. அன்பரசு, பூவராகவன் ஆகியோர்.

இந்த மூன்று தலைவர்களுமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது தலைமையில் சென்னையில் ஒரு ரகசியக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், இவர்கள் தவிர முன்னாள் எம்.பி. ராமதாஸ், சேலம் பழனிமுத்து, துரைமுத்துசாமி, பி.ஆர்.எஸ். வெங்கடேசன் உள்ளிட்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பூவராகவன் தான் தலைமை தாங்கியுள்ளார். இந்த ரகசிய ஆலோசனைக்குப் பின்னர் திண்டிவனம் ராமமூர்த்திசெய்தியாளர்களிடம் பேசுகையில்,

காங்கிரஸ் கட்சியில் வன்னியர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அத்தோடு வட மாவட்டங்களைச்சேர்ந்தவர்களையும் காங்கிரஸ் கட்சி மதிப்பதில்லை.

கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பிற சமுதாயத்தினருமே அதிக அளவில் உள்ளனர்.நான், விஷ்ணுபிரசாத் (இவர் இளைஞர் காங்கிரஸ் தலைவர், மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் மருமகன் ஆவார்)உள்பட மொத்தமே நான்கு வன்னியர்களுக்குத்தான் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ஏழு கட்சிக் கூட்டணியில் மதிமுக, பாமக மட்டுமே வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.வட மாவட்டங்களில் பெரும்பாலும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே தேர்தலில் நிறுத்தப்படுகின்றனர், முக்கியப்பொறுப்புகளிலும் வன்னியர்கள் அதிக அளவில் உள்ளனர்.

ஆனால் காங்கிரஸில் இந்த நிலை இல்லை. காங்கிரஸ் கட்சிக்காக செலவு செய்து விட்டு, மற்றவர்களிடம் (திமுக, பாமக?)கொத்தடிமையாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. அப்படி இருக்கவும் மாட்டோம். யாருடைய நிர்ப்பந்தம் காரணமாகவன்னியர்களை தமிழக காங்கிரஸ் தலைமை புறக்கணிக்கிறது என்பது தெரியவில்லை.

நாங்கள் தொடர்ந்து கொத்தடிமைகளாகவே இருப்போம் என கருணாநிதி நினைத்தால் அது தவறு. சோனியா காந்திக்காகவேநாங்கள் இத்தனை நாட்களாக அமைதி காத்து வந்தோம், வாய் மூடி மெளனியாக இருந்தோம்.

ஆனால் இனிமேல் எங்களால் பொறுமை காக்க முடியாது. வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் எங்களை அவமதிப்பவர்களுக்குதக்க பாடம் கற்பிப்போம். மற்றவர்களுக்கு பல்லக்கு தூக்க நாங்கள் தயாராக இல்லை என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.

முன்னாள் எம்பி அன்பரசு கூறுகையில்,

வன்னியர்களுக்கான தொகுதிகளை அடையாளம் கண்டு திமுகவிடம் அந்தத் தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுப் பெற வேண்டும்.இது தொடர்பாக சோனியா காந்தியையும் சந்தித்து மனு கொடுப்போம். கட்சியில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம்அளிக்க வேண்டும் என்றார்.

இதுவரை தலைவர் பதவியை முன் வைத்தே காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் பூத்துக் குலுங்கி வந்தன.

தற்போது கட்சிக்குள்ளேயே ஜாதிரீதீயாக புதுக் கோஷ்டி உருவாகியிருப்பது உண்மையான காங்கிரஸ்காரர்களை நிச்சயம் கவலைகொள்ளவே செய்யும்.

திண்டிவனம் ராமமூர்த்தியின் இந்த திடீர் திமுக எதிர்ப்பின் பின்னணியில் அதிமுக இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.சமீபத்தில் இவர் ஜெயா டிவியிலும் சிறப்புப் பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X