• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரமாரியாக வசூல் வேட்டை: போக்குவரத்து போலீசாரை விரட்டிப் பிடித்த பொது மக்கள்

By Staff
|

சென்னை:

சென்னை ஆலந்தூர் பகுதியில், வருகிற போகிற வாகனங்களை எல்லாம் நிறுத்தி சரமாரியாக பணத்தைக் கறந்த இரண்டுபோலீஸ்காரர்களை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு அடித்து, உதைக்க முயன்றனர்.

இதையடுத்து அந்த இரு திருட்டு காக்கிகளும் தப்பியோடினர். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் இந்த இரு மோசடிபோலீசாரையும் விரட்டிச் சென்ற பொது மக்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் மட்டும் பிடிபட்டார். இன்னொரு காவலர் தப்பியோடிவிட்டார்.

சென்னை மாநகர காவல்துறையுடன், புறநகர் காவல் நிலையங்கள் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தப்பகுதிகளுக்கென தனியாக போக்குவரத்துப் பிரிவு தொடங்கப்பட்டது.

போக்குவரத்துப் பிரிவு தொடங்கப்பட்டவுடன், புறநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து போலீஸார் அவ்வப்போது வாகனசோதனை என்ற பெயரில் வசூல் வேட்டையில் இறங்கி வருகின்றனர்.

எல்லா ஆவணங்களும் சரியா இருந்தாலும் கூட, லைட்டு ஏன் டிம்மா எரியுது?, ஓவர் ஸ்பீடா போறீயேப்பா (லூனா, டிவிஎஸ்50ல் ஓவர் ஸ்பீடாம்), சிக்னலை தாண்டி போறியே, வண்டில காத்து இல்லையே என்று எதையாவது சொல்லி ஐம்பதோ, நூறோவாங்கி தொந்திக்கு மேல் உள்ள சட்டைப் பையில் போட்டுவிட்டுத் தான் வண்டியை விடுவித்து வந்தனர்.

குறிப்பாக வாகன நெருக்கம் அதிகம் உள்ள ஆலந்தூர் பகுதியில் இந்த வசூல் படு ஜரூராக நடந்து வந்தது. இந் நிலையில்,ஆலந்தூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே இரண்டு போக்குவரத்து போலீஸ்காரர்கள் நின்று கொண்டு வழக்கமான வசூல்வேட்டையில் குதித்தனர்.

முதலில் செலக்ட்டிவாக வாகனங்களை நிறுத்தி பணத்தைக் கறந்தனர். பின்னர், ஒரே நாளில் வீட்டுக்குத் தேவையான எல்லாஅத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிப் போட்டுவிட நினைத்தார்களோ என்னவோ, அந்த பக்கமாக போன எல்லாவாகனங்களையும் (சைக்கிள், நடந்து போனவர்கள், டிரை சைக்கிள் தவிர) சகட்டுமேனிக்கு நிறுத்தி வைத்து காசு கேட்டக்தொடங்கினர்.

முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால் ரூ. 500 வரையும், எல்லா ஆவணங்கள் இருந்தாலும் கூட ஏதாவது ஓட்டைக் காரணம்சொல்லி ரூ. 100ம் கேட்டு கட்டாயப்படுத்தினர்.

ஆவணங்கள் இல்லாமல் வண்டி ஓட்டி வந்தவர்கள், வேறு வழியில்லாததால், பேரம் பேசி அவர்களால் முடிந்த தொகையைகொடுத்து விட்டுத் தப்பினர். ஆனால் ஆவணங்கள் இருந்தும் காசு கொடுக்க வேண்டுமா என்று சிலர் ஆட்சேபனை தெரிவித்துகாசு கொடுக்காமல் அங்கேயே நின்றனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பணம் வசூலிப்பதிலேயேதீவிரமாக இருந்தனர்.

அதுவும் மரியாதை இல்லாமல் நீ, வாடா, போடா என அந்த காக்கிகளின் கையோடு நாக்கும் நீண்டது.

போக்குவரத்துப் போலீஸாரின் செயலைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர், முறையான ஆவணங்களுடன் வண்டி ஓட்டிவந்த வாகனதாரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். போலீஸ்காரர்களை அவர்கள் தட்டிக் கேட்டனர்.

இப்படியாக அங்கு ஏராளமான இந்தியன்கள் கூடி விட்டனர். எல்லாப் பேரும் உடனே கலைந்து போய் விடுங்கள்.இல்லாவிட்டால் வழக்குப் போட்டு உள்ளே கொண்டு போய் முட்டியைப் பெயர்த்து விடுவோம் என தமிழக காவல் துறைதோன்றிய காலத்தில் இருந்தே சொல்லப்படும் வசனத்தை இந்த இரு போலீஸாரும் எடுத்துவிட்டு பொதுமக்களை மிரட்டினர்.

இதைக் கேட்டதும் வெகுண்டெழுந்த பொதுமக்கள், போலீஸ்காரர்கள் மீது பாய்ந்தனர். அவர்களது சட்டை, பேண்ட்பாக்கெட்டுகளில் கையை விட்டு லஞ்சப் பணத்தை உருவினர்.

இதையடுத்து இருவரையும் அப்படியே பரங்கிமலை காவல் நிலைய போலீசில் ஒப்படைப்போம் வாருங்கள் என பொது மக்களேஇரு காவலர்களையும் பிடித்தனர்.

பொது மக்கள் திடீரென இந்தியன் தாத்தாக்களாக மாறிவிட்டதால் பீதியடைந்த இரு திருட்டு காக்கிகளும், யாரும் எதிர்பாராதவகையில் அங்கிருந்து தலை தெறிக்க ஓடத் தொடங்கினர்.

இதைப் பார்த்தவுடன் முதலில் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் பின்னர் ஜாலியாகி அவர்களை விரட்டத் தொடங்கினர்.போலீசாரை பொது மக்கள் விரட்டும் வித்தியாசமான சீனைப் பார்த்த அப் பகுதியினர் தெலுங்கு பட சூட்டிங்காக இருக்குமோ எனமுதலில் நினைத்தனர்.

பின்னர் காரணமே தெரியாமல் அவர்களும் சேர்ந்து போலீசாரை விரட்டினர்.

வாழ்க்கையில் இப்படி ஒரு வாய்ப்பு இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்ற வெறியுடன், போலீஸார் இருவரையும் பெரும்கும்பலாக பொது மக்கள் துரத்தோ துரத்தென்று துரத்தினர்.

கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு போலீசாரும் ஓடினர். நல்ல டிரெயினிங் போலிருக்கிறது.

கடைசியில் பொது மக்களில் சிலர் பி.டி.உஷாவின் வேகத்தை பிரேக் செய்து போலீசாரைப் பிடித்தனர்.

இதில் ஒரு போலீஸ்காரர் மட்டும் பிடிபட, இன்னொருவர் நழுவி ஓடிவிட்டார். (தப்பியோட திருடர்களிடம் இருந்து பாடம்கற்றிருப்பார் போலிருக்கிறது)

பிடிபட்ட போலீஸ்காரர் குறித்து பரங்கிமலை காவல் நிலையத்துக்குத் தகவல் போனது. பரங்கிமலை போலீஸார் வந்துபார்த்தபோது, பிடிபட்டவர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர் காவலர் தாமோதரன் என்பதும்தெரிய வந்தது.

பிடிபட்ட நாகராஜனை போலீசாரே ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவரிடம் போக்குவரத்துஉதவி ஆணையர் ராஜகோபால் விசாரணை நடத்தினார். அவர் மீதுதுறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்உறுதியளித்துள்ளனர்.

மேலும் தப்பி ஓடிய காவலர் தாமோதரனைப் பிடிக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருடனைப் போலீஸார் பிடித்த காலம் போய், போலீஸ்காரர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கும் அளவுக்கு,காவல்துறை தரம் தாழ்ந்து போய்க் கிடப்பது வேதனையும் வேதனை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X