For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களை விரட்டும் சிங்கள ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

இலங்கையில் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை வீடுகளை காலி செய்து விட்டு ஓடுமாறு சிங்கள ராணுவம் மிரட்டி விரட்டி வருவதாகவும், பாலியல் வன்முறை உள்பட பல்வேறு வன்முறைகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுவதாகவும் அங்கிருந்து தப்பி அகதிகளாக வரும் தமிழர்கள் கண்ணீருடன் கூறுகிறார்கள்.

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு மீண்டும் அகதிகள் பெரும் எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் தமிழர்கள் ராணுவம் செய்யும் அட்டூழியங்களை கண்ணீர் மல்க பட்டியலிடுகிறார்கள்.

மன்னார் மற்றும் திரிகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்துதான் அதிக அளவில் தமிழர்கள் அகதிகளாக வந்துகொண்டுள்ளனர். திரிகோணமலையில் வசிக்கும் தமிழர்கள் மன்னார் வந்து அங்கிருந்து படகுகள் மூலம் தமிழகத்திற்கு வருகின்றனர். மன்னார் பகுதிக்கு வர அவர்கள் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

திரிகோணமலையிலிருந்து மன்னார் வருவதற்கு 7 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அதுதவிர ராணுவத்தின் 53 சோதனைச் சாவடிகளை தாண்டியாக வேண்டும். இத்தனை சோதனைகளையும் தாண்டிய பின்னர்தான் மன்னார் கடல் பகுதிக்கு வந்து சேர முடியும்.

இத்தனை சிரமப்பட்டு ஏன் தமிழகத்திற்குத் தப்பி வர வேண்டும்?

திரிகோணமலை அருகே உள்ள திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த சந்திரிகா இதற்குப் பதில் தருகிறார். ராணுவம் எங்களை அதிகம் தொந்தரவு செய்கிறது. அமைதி இல்லை, ஏராளமான வன்முறைகளை அரங்கேற்றுகிறது ராணுவம். தாங்க இயலாத வகையில் துன்பங்கள் எங்களுக்கு நேர்வதால் அங்கிருந்து இங்கு வந்துள்ளோம். எங்களுக்குத் தேவையெல்லாம் அமைதியான, பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான்.

நாங்கள் இருக்கும் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களை அண்டித்தான் நாங்கள் பிழைக்க வேண்டியுள்ளது. எங்கள் குடும்பத்து இளம் ஆண்களை எப்போது வேண்டுமானாலும் பிடித்துச் செல்வார்கள். எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் அவர்களது பொறுப்பில் வைத்திருப்பார்கள். அதைக் கேட்கவே முடியாது.

பொடியன்களையும் (சிறுவர்கள்) அவர்கள் விடுவதில்லை. முன்பெல்லாம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் குறுக்கிட்டு பொடியன்களை மட்டும் விடுவிக்க உதவி செய்தார்கள். இப்போது அவர்களும் இதில் தலையிடுவதில்லை. யாரும் கேட்க நாதியற்ற நிலையில் நாங்கள் வாழ்கிறோம்.

இப்படி பல்வேறு துயரத்தில் வாழ்வதற்கு இயலாத காரணத்தால்தான் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம் என்று கண்ணீர் மல்க முடித்தார் சந்திரிகா.

சந்திரிகா, தனது கணவர் தாஸ், 6 பிள்ளைகள், சகோதரர் மற்றம் அவரது குடும்பத்தாருடன் தமிழகம் வந்துள்ளார். சந்திரிகா தமிழகத்திற்கு அகதியாக வருவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 1990ம் ஆண்டு குடும்பத்துடன் தமிழகம் வந்தார் சந்திரிகா. பின்னர் நிலைமை சரியானதும் திரும்பிப் போனார்கள். இப்போது மீண்டும் நிலைமை மோசமாக இருப்பதால் மீண்டும் வந்துள்ளனர்.

தமிழர்களை சித்திரவதை செய்வது மட்டுமல்லாமல், தமிழ்ப் பெண்களை பாலியல் ரீதியாகவும் மிகவும் சித்திரவதை செய்து வருகிறது இலங்கை ராணுவம் என்றும் அகதிகள் குமுறுகிறார்கள்

கற்பழிப்புகள் வெகு சாதாரணமாகி விட்டதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். தமிழர்கள் யாரும் இங்கே வசிக்கக் கூடாது. உயிர் பிழைக்க வேண்டுமானால் வீடுகளை விட்டு வெளியேறுங்கள், இல்லாவிட்டால் எங்களது கொடுமைகளை சந்திக்கத் தயாராகுங்கள் என்று ராணுவம் மிரட்டவும் செய்கிறது.

இதன் காரணமாகவே பலர் அங்கிருந்து தப்பி தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.

தப்பிய அகதிகள்:

இதற்கிடையே தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 3 தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமுக்குச் செல்லும் வழியில் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இலங்கையிலிருந்து படகு மூலம் ராமநிாதபுரம் மாவட்டம் தர்காவலசை என்ற இடத்திற்கு மன்னார் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன், அவரது மனைவி புஷ்பராணி, மகள் இந்துஜா ஆகியோர் வந்தனர்.

அவர்கள் வந்து இறங்கிய இடம் உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் உச்சிப்புளி போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது இந்த 3 பேரும் தப்பி தலைமறைவாகி விட்டனர்.

இவர்களைத் தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X