For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக காங். தலைவராக கிருஷ்ணசாமி நியமனம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Krishnasamyதமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த ஜி.கே.வாசன் மாற்றப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பியான எம்.கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டாக்டர் ராமதாசின் சம்பந்தியாவார்.

அதே நேரத்தில் வாசன் தலைமையில் தேர்தல் குழுவையும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

வன்னியர்கள் புறக்கணிப்பு, கருணாநிதி, வாசனுக்கு கடும் எதிர்ப்பு திண்டிவனம் ராமமூர்த்தி நடத்தி வந்த எதிர்ப்பு அரசியலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஒரு வழியாக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைவராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எம்.கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் வன்னியர் சமூகம் ஒடுக்கப்படுவதாக திண்டிவனம் பேசி வருவதற்கு சாட்டையடி தந்துள்ளது அக் கட்சி.

கிருஷ்ணசாமியின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மாமனார் தான் கிருஷ்ணசாமியாவார். மேலும் இவரது மகன் விஷ்னு பிரசாத் தான் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

புதிய தலைவராக கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டாலும் கூட, தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளப் போகும் குழுவின் தலைவராக ஜி.கே.வாசனை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

எனவே, தேர்தல் தொடர்பான முடிவுகள், நடவடிக்கைகள், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் என அனைத்திலுமே வாசன்தான் முன்னிலையில இருப்பார் என்பது குறிப்பிடத்ததக்கது.

இதற்காக வாசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட தேர்தல் கமிட்டியின் விவரம்:

ஜி.கே.வாசன் (தலைவர்), எம்.கிருஷ்ணசாமி (அமைப்பாளர்), எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மணிசங்கர அய்யர், ஆர்.பிரபு, தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், குமரி அனந்தன், சுதர்சன நாச்சியப்பன், யசோதா, பீட்டர் அல்போன்ஸ், தனுஷ்கோடி ஆதித்தன், ஞானதேசிகன், ஜே.எம்.ஹாரூண்.

இவ்வாறாக தமிழகத்தின் அனைத்து கோஷ்டிகளின் தலைவர்களுக்கும் இந்தக் குழுவில் இடம் தரப்பட்டுவிட்டது.

இதுதவிர 53 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவையும் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

அதில், மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன், இளங்கோவன், ப.சிதம்பரம், மணிசங்கர அய்யர், ஜெயந்தி நடராஜன், குமரி அனந்தன் உள்ளிட்ட 53 பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

புதிய நியமனங்கள் குறித்த தகவல்களை காங்கிரஸ் கட்சியின் மேலிட செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் வெளியிட்டார்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.கிருஷ்ணசாமி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர். காமராஜர் காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் இருப்பவர். 1967ம் ஆண்டு நடந்த நிாடாளுமன்றத் தேர்தலில் வந்தவாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது கேரள மாநில காங்கிரஸ் பார்வையாளராக இருந்தவர் கிருஷ்ணசாமி. 67 வயதான கிருஷ்ணசாமி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளரான அகமத் படேலின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவர் ஆவார்.

இவரை கட்சியின் மாநிலத் தலைவராக்கியது அகமத் படேல் தான் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இப்போது அகமதின்பேச்சுக்கு மறு பேச்சு இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பரசு எதிர்ப்பு:

இந் நிலையில் கிருஷ்ணசாமியை தலைவராக நியமித்ததற்கு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு தலைவரான அன்பரசுஎதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தனக்கு இந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த அன்பரசு, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்பமொய்லியை சந்தித்து தனது வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமியை விட எனக்கு அதிக தகுதி உண்டு. நானும் வன்னியன் தான். கிருஷ்ணசாமியை தலைவராக்கியதற்கு அவரதுமருமகன் அன்புமணியையே (பாமக மத்திய அமைச்சர்) தலைவராக்கியிருக்கலாம் என்று படபடத்த அன்பரசுவை, எம்எல்ஏ சீட்ஒதுக்கும்போது உங்கள் தரப்புக்கு உரிய மதிப்பு தரப்படும் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் மொய்லி.

கருணாநிதி வாழ்த்து:

இந் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.கிருஷ்ணசாமிக்கு திமுக தலைவர் கருணாநிதி தந்தி மற்றும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்தத் தந்தியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நயமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள். அரசியலில் நீண்ட, நெடிய அனுபவம் கொண்ட தங்களுக்கு அந்த அனுபவம், சிறந்த முறையில் புதிய பொறுப்பில் பணியாற்ற உதவியாக இருக்கும்.

மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் புதிய பொறுப்பில் செயல்பட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல தொலைபேசி மூலமும் கிருஷ்ணசாமியை தொடர்பு கொண்டு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X