உயர்நீதிமன்றத்தில் தமிழ்: தீர்மானத்தை திருப்பிஅனுப்பியது மத்திய அரசு-கருணாநிதி அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டசபையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலேயே திருப்பி அனுப்பி விட்டது. மத்திய அரசின் இந்த செயல்குறித்து முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாகஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், அதேசமயம், அடிப்படைக்கட்டமைப்பை ஏற்படுத்தாமல் இதை அமல்படுத்துவது சரியாக இருக்காது என்றும் கூறியிருந்தார்.

அதற்கு கருணாநிதி பதிலளிக்கையில், தலைமை நீதிபதி விரும்பும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்ட பின்னரே தமிழ் ஆட்சிமொழியாகும்என்று தெரிவித்திருந்தார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டது மத்திய அரசு.

இதற்கு முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும், வியப்பும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சட்ட அமைச்சர்எச்.ஆர்.பரத்வாஜ், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தமிழக சட்டசபையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்குவது என்று கூறி தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை திருப்பி அனுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள பதிலில்,உச்சநீதிமன்றத்துடன் இந்தத் தீர்மானம் குறித்து கலந்து ஆலாசிக்கப்பட்டது. அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தற்போதைய சூழ்நிலையில்மாநில மொழிகளை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக்குவது பொருத்தமான செயல் அல்ல என்று கூறினார்.

எனவே அதன் அடிபப்டையில், தமிழக அரசின் தீர்மானம் குடியரசுத் தலைவரிடம் அனுப்பாமல், திருப்பி அனுப்பப்படுவதாக மத்திய அரசுதெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்தப் பதில் அதிர்ச்சி தருவதாக உள்ளது. வியப்பளிப்பதாகவும் இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 348 (2) மற்றும் 1963ம் ஆண்டைய ஆட்சி மொழிச் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை மிகத் தெளிவாக உள்ளன.அதன்படி உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியை அலுவல் மொழியாக வைத்துக் கொள்ள இவை அனுமதிக்கின்றன.

இந்த சட்டப் பிரிவுகளை மாநிலத்திற்கு மாநிலம் பாரபட்சமாக அமல்படுத்த முடியாது. தமிழகத்தின் ஆட்சி மொழியாக உள்ள தமிழ், சென்னைஉயர்நீதிமன்றத்திலும் ஆட்சி மொழியாக வேண்டும் என லட்சோபம் லட்சம் தமிழர்கள் நீண்ட காலமாக கனவு கண்டு கொண்டுள்ளனர், ஏங்கிக்கொண்டுள்ளனர்.

இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே மத்திய அரசால் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழியாவதற்குத் தமிழுக்குத் தடை இருக்காது என்ற நம்பிக்கையும் அதிகரித்தது.

சட்டசபையில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தவிர, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் இந்த முடிவுக்கு கொள்கைஅடிப்படையில் ஆதரவும் தெரிவித்திருந்தது.

மேலும், உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கும் முடிவு சட்டப்பூர்வமானதுதான் என்று தமிழக ஆளுநரும், சென்னை உயர்நீதிமன்ற.ம்கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநில உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழியாக அந்த மாநில ஆட்சி மொழியை அமல்படுத்த சட்டப்பூர்வ உரிமைஉண்டு.

ஏற்கனவே உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் அந்த மாநில ஆட்சி மொழியே, அலுவல்மொழியாக உள்ளது நினைவு கூறத்தக்கது.

இந்த அடிப்படையில்தான் தமிழகத்திலும் உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக தமிழை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. இந்த விஷயத்தில் பிற மாநிலங்களுக்கு ஒரு நீதியும், தமிழகத்திற்கு இன்னொரு நீதியும் என்பதை ஏற்க முடியாது.

எனவே, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர உதவ வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற