For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணா, காமராஜர்தான் பெஸ்ட்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் சிறந்த முதலமைச்சர்களாக அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் மட்டுமே கூறலாம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பதில்,

1950 முதல் 1980 வரை இருந்த முதல்வர்களை பட்டியலிட சொன்னால் உங்கள் பட்டியலில் யாருக்கு முதலிடம் கொடுப்பீர்கள்?

ஆற்றல் மிகுந்த முதல்வர் பட்டியலில் எனது கருத்துப்படி பேரறிஞர் அண்ணா தான் முதலிடத்தில் இருப்பார். அவரது ஆட்சிக் காலம் 2 ஆண்டு காலமே நீடித்ததால் அதிக பயன் பெற வாய்பில்லாமல் போனது.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய வேண்டும் என ஈடுபாடு கொண்டு 9 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜரை தான் சொல்லவேண்டும்.

1957ம் ஆண்டு நீங்கள் சட்டமன்றத்திற்கு சென்றபோது விவாதங்கள் தமிழிலே நடைபெற தொடங்கிய மாற்றம் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

1957ம் ஆண்டு நான் சட்டமன்றத்திற்கு சென்றபோது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாக வெற்றி பெற்று பேரவைக்கு சென்றபோது அவர்களுக்கு உயர்கல்வி தகுதிகள் எடுத்து கூறுகின்ற அளவிற்கு திறமை பெற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

விவாதங்கள் பெருமளவிற்கு தமிழிலே நடைபெற தொடங்கியதை அனைவரும் வரவேற்றனர். சில சொற்களுக்கு எதிர்ப்பினை காட்டிய போதும் முழு அளவில் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டது.

1959ல் திருச்சிக்கு மார்ஷல் டிட்டோ வந்திருந்தபோது, அவர் வந்த சாலைகளின் 2 பக்கங்களிலும் குடிசை பகுதிகளை பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த சாரங்கள் அமைப்பதற்கு அரசாங்கம் அதிகமாக செலவிட்டதை பற்றி பேசினீர்கள். அப்போது கடைபிடிக்கப்பட்ட முறை இது போலத்தான் இருந்ததா?

1958-59ல் நிதிநிலை அறிக்கையின் மீது சட்டபேரவையில் நான் பேசும்போது, சேரிகளின் சீரமைப்புக்குப் போதுமான தொகை ஒதுக்கப்படவில்லை என்பதை சுட்டிகாட்டுவதற்காக மார்ஷல் டிட்டோ திருச்சிக்கு வந்த நேரத்தில் சாக்கடை ஓரத்திலிருந்த சேரிகள் டிட்டோ கண்களில் படாமல் இருக்க அரை பனை மர உயரத்திற்கு மூங்கில் தட்டிகள் வைத்து மறைக்கப்பட்டிருந்ததையும், அதற்காக அரசு செலவழித்த தொகையையும் ஒப்பிட்டு காட்டி பேசினேன்.

அப்போதும் கூட அரசு சேரிகளின் மேம்பாட்டிற்காக போதுமான தொகை செலவிட வேண்டுமென்று அக்கறையில் பேசப்பட்டதே தவிர, அரசின் செயல்பாடுகளை கிண்டல் செய்யவேண்டுமென்பதல்ல. அண்ணா அவர்களின் அரசு இந்த வழக்கத்தை மாற்ற பெருமுயற்சி எடுத்து அதிலே பெருமளவிற்கு வெற்றியும் கிடைத்தது என்பதற்கு உதாரணம் தான் இப்போதும் செயல்பாட்டில் உள்ள குடிசை மாற்று வாரியம், அவற்றின் சார்பாக கட்டப்பட்ட மாடி வீடுகள்.

வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சட்டபேரவையில் திராவிட நாட்டை ஆதரித்தே நீங்கள் பேசியுள்ளீர்கள். இந்தியாவுடன் இணைந்திருப்பதால் தமிழகத்து மக்கள் முன்பிருந்ததை விட வளம் பெற்று இருக்கிறார்களா?

1962ல் சட்டபேரவையில் திராவிட நாடு கொள்கை கைவிடப்பட்டது. அந்த கொள்கையை கைவிடுவதற்கு முன்பு நான் பேசிய பேச்சுதான் இது, எனினும் அண்ணா அவர்கள் திராவிட நாடு கொள்கையை கைவிட்டபோது கூட, அந்த பிரிவினையைத்தான் கைவிட்டேனே தவிர, அதைக் கேட்டதற்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கின்றன என்று சொன்னதையும் நினைவில் கொண்டு தான் மாநில சுயாட்சி கொள்கையை பிரகடப்படுத்தினார்.

ஆனால் இந்தியாவுடன் இணைந்திருக்காவிட்டால் எப்படி இருந்திருப்போம் என்ற காரணத்தை உறுதியாக கூற முடியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் வளம் பெற்றிருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தை வெறும் சமுதாய சீர்திருத்த இயக்கமாக மட்டும் வைத்திராமல் அரசியல் இயக்கமாக மாற்றிட திமுக மேற்கொண்ட முடிவு விரும்பிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதா?

திராவிட இயக்கத்தை வெறும் சமுதாய சீர்திருத்த இயக்கமாக மட்டும் இல்லாமல் அரசியல் இயக்கமாகவும் மாற்றிய காரணத்தால் எத்தனையோ சமுதாய சீர்திருத்த பணிகளையெல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றிட முடிந்துள்ளது.

உதாரணமாக சொல்ல வேண்டுமானால், அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட ஒப்புதல் பெற முடிந்தது. நான் பொறுப்புக்கு வந்தபின் சமூக சீர்திருத்த கொள்கையை கடைப்பிடிக்க இட ஒதுக்கீடு செய்ய முடிந்தது.

பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க முடிந்தது. கலப்பு திருமணத்திற்கு ஊக்கமளிக்க முடிந்தது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க ஆணை பிறபிக்க முடிந்தது.

பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற பெயரால் அணைத்து சாதியினரும் ஒரேயிடத்தில் குடியிருக்க வைக்க முடிந்தது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினருக்கு அளபறிய சாதனைகளை செய்ய முடிந்தது. இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்.

தமிழ்நாடு சட்டபேரவை வரலாறு 1989ல் மிகத் தரம் தாழ்ந்ததாக இருந்தது. இந்த நிகழ்ச்சியிலிருந்து திமுகவும், அதிமுகவும் எதையேனும் கற்று கொண்டதா?

1989ம் ஆண்டு முழுவதும் சட்டபேரவை மிக தரம் தாழ்ந்ததாக இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். ஒரே ஒரு நாள் நிகழ்ச்சி, வீட்டிலே இருந்து கொண்டே ஜெயலலிதா அம்மையாரால் திட்டமிட்டு, அவையை நடத்த விட கூடாது.

அப்படி செய்துவிட்டால் ஆட்சியையே கலைத்துவிட்டு நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற நப்பாசையுடன் கட்சியின் முக்கியமானவர்களை எல்லாம் அழைத்து பேசி ஒத்திகை பார்த்து நடத்தப்பட்டது என்பது பின்னர் அந்த கட்சியிலிருந்து வெளியே வந்த திருநாவுகரசர் சட்டபேரவையிலே எடுத்து விளக்கி அது அவைக் குறிப்பிலே இன்றும் இருக்கின்றது.

ஆனால் அந்த நேரத்தில் பெரும்பாலான நாளேடுகள் சாதி உணர்வோடு நடந்து கொண்டன என்பதும் உண்மையாகும். அந்த நிகழ்ச்சியில கற்றுக் கொள்ளவேண்டியது எதுவும் இல்லை.

தமிழ்நாட்டில் பிரதான எதிர்கட்சிக்குமிடையை மோசமான உறவுநிலை நிலவி வருகிறது. இந்த உறவு நிலை சீர்படுவதற்கு வாய்ப்புண்டா?

2 கைகள் சேர்த்து தட்டினால் தான் ஓசைவரும். காவிரி பிரச்சனையில் பிரதான எதிர்கட்சி உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும் என கூறியது. ஏனைய கட்சிகள் அனைத்தும் நடுவர் மன்றத்திடம் மறுஆய்வு மனு தாக்கல் செய்யலாம் என கூறின.

அந்த நேரத்தில் நான் 2 சாரரையும் ஒப்பு கொள்ள செய்யும் வகையில் முதலில் நடுவர் மன்றத்திடம் மனுதாக்கல் செய்வோம் என்றும் பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம் என்று 2 கருத்துகளையும் என் கைபட எழுதி அதனை அனைவருக்கும் படித்துகாட்டி பிரதான எதிர்கட்சியை இணங்க செய்வற்காக அதனையும் இணைத்திருக்கிறேன் என எல்லோர் மத்தியிலும் சொல்லியே அதனை படித்து காட்டினேன்.

அப்படியும் கூட தீர்மானமே நிறைவேற்றபடவில்லை என்று அபாண்டமாக அந்த கட்சியில் சார்பிலே கலந்து கொண்டவர்கள் அல்ல, அந்த கூட்டத்திற்கே வராத பிரதான எதிர்கட்சி தலைவர் கூறுகிறார் என்றால் பொதுப் பிரச்சனைகளில் ஆளும்கட்சிக்கும் பிரதான எதிர்கட்சிக்கும் இடையே இணக்கம் வரும் என்று எப்படி கருதமுடியும்.

மேலவை மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் என்ன?

மேலவையை மீண்டும் கொண்டு வருவது தேவையற்ற செலவு என்று நான் கூறமாட்டேன். ஏனென்றால் மேலவையின் சிறப்புகளை பற்றி எவ்வளவு வாதங்கள் இதற்கு முன்பு பல முறை எடுத்து சொல்லப்பட்டுள்ளன. திமுக கழக தேர்தல் அறிக்கை கூட மேலவை பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை கொண்டு வருவதற்கான நேரம் கனிந்து வரவில்லை என்பது தான் இப்போதுள்ள நிலை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

அண்ணா, காமராஜர் மட்டுமே சிறந்த முதல்வர்கள் என்று கூறியுள்ளது கருணாநிதியின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் அந்த வரிசையில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதிக்கும் கூட கண்டிப்பாக இடம் உண்டு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X