For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னை எப்படி வரவேற்கப் போகிறது இந்தியா? 'சாம்பியன்' ஆனந்த் கேள்வி!!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

2வது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ள எனக்கு, 20-20 உலகக் கோப்பையை வென்று திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு கொடுத்த அதே அளவிலான வரவேற்பினை இந்தியா கொடுக்குமா என்பதை அறிய ஆவலாக உள்ளேன் என்று 2வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.

Anandஇந்திய கிரிக்கெட் வாரியம், தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்த இந்திய கிரிக்கெட் அணி, 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆனதை நாடே விழுந்து விழுந்து கொண்டாடியது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆங்கில தொலைக்காட்சி சானல்களும் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதையே காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்திய வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகள் குவிந்தன. குடியரசுத் தலைவர், பிரதமர் என பல தலைவர்களும் இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டினர்.

இந்திய அணி வீரர்கள் மும்பைக்குத் திரும்பியபோது, குடியரசுத் தலைவர் ஒருவருக்குக் கொடுக்கப்படும் ராஜ மரியாதை இந்திய வீரர்களுக்குத் தரப்பட்டது.

மும்பை நகர் முழுவதும் வீரர்களை திறந்த பஸ்சில் ஏற்றி ஊர்வலமாக கூட்டிச் சென்று வாங்கடே விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா நடத்தி பரிசுத் தொகையை ஸ்பாட்டிலேயே கொடுத்து கெளரவித்தனர்.

இந்ததிய கிரிக்கெட் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ராஜ உபசாரமும், பரிசுகளும், கொடுக்கப்பட்ட கெளரவமும் மற்ற விளையாட்டுக்காரர்களை கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளன.

குறிப்பாக ஹாக்கி வீரர்கள் கடும் கோபமடைந்தனர். பாரபட்ச போக்கைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக கர்நாடகத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதனால் பயந்து போன கர்நாடக அரசு உடனடியாக ஆசிய கோப்பைப் போட்டியில் வென்றதற்காக கர்நாடகத்தைச் சேர்ந்த நான்கு ஹாக்கி வீரர்களுக்குப் பரிசுத் தொகையை அறிவித்தது. இதையடுத்து ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சிலரும் பரிசுகளை அறிவித்தனர்.

இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். முதல் முறை அவர் சாம்பியன் பட்டம் வென்றபோதே அவருக்கு இந்தியா உரிய முறையில் கெளரவம் தரவில்லை என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் 2வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளார் ஆனந்த்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தரப்பட்ட அதே அளவிலான கெளரவமும், மரியாதையும், தற்போது ஆனந்துக்குக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக ஆனந்த்திடமே அதுகுறித்த ஆர்வம் எழுந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து கேள்விப்பட்டேன். அக்டோபர் மாதம் நான் இந்தியாவுக்கு வரும்போது இதேபோன்ற வரவேற்பு கிடைக்குமா என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன்.

வரவேற்பு கிடைக்கிறதோ, இல்லையோ, செஸ் உலகைச் சேர்ந்த நண்பர்கள் நிச்சயம் வரவேற்புக்காக காத்திருப்பார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் மெக்சிகோவில் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்றார் ஆனந்த்.

காஸ்பரோவுக்குப் பின்னர் செஸ் உலகின் அசைக்க முடியாத மன்னராக இருக்கிறார் ஆனந்த். முன்னணி வீரரான ரஷ்யாவின் விலாடிமிர் கிராம்னிக்கால் கூட ஆனந்த் இடத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது செஸ் வாழ்க்கையில் 2வது முறையாக 2800 ஈலோ பாயிண்டுகளைத் தொட்டுள்ளார் ஆனந்த். தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.

7 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக உலக சாம்பியன் ஆனார் ஆனந்த். மெக்சிகோவில் தற்போது நடந்து முடிந்துள்ள செஸ் சாம்பியன் போட்டியில், ஒரு ஆட்டத்தில் கூட ஆனந்த் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல சாதனைகளுடன் நாடு திரும்பவுள்ள ஆனந்த்தை இந்தியா எப்படி வரவேற்கப் போகிறதோ?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X