For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டரை மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News


சென்னை

முதல்வர் கருணாநிதி இன்று இரண்டரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். அவர் சென்றபோதிலும் கூட கூட்டணிக் கட்சி தலைவர்களும் திமுக மற்றும் கூட்டணி தொண்டர்களும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

Karunanidhiசேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் ேகாரி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

வாலாஜா சாலையில் உள்ள, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

கருணாநிதியுடன் ராமதாஸ் உள்பட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.

உண்ணாவிரதம் நடந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பெரும் அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிரப் பாதுகாப்பு தரப்பட்டது.

இதேபோல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக கூட்டணியினர் பல்லாயிரக்கணக்கான பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.

கருணாநிதியுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி,

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காஜா மொஹைதீன் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

டி.ஆர். பாலு, ஸ்டாலின் உண்ணாவிரதம்:

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் ஸ்டாலின், பரிதி இளம் வழுதி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்டசபை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சுதர்சனம், எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.

பந்தலின் எதிரே ஆயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

கனிமொழி:

ராஜ்யசபா எம்பியான கனிமொழி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் தொண்டர்கள் கூட்டத்தில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.

இந் நிலையில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திமுக அரசை கடுமையாக கண்டித்தது.

இதையடுத்து காலை 9 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்தில் அமர்ந்த முதல்வர் கருணாநிதி, உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தலைமைச் செயலகம் திரும்பி தனது பணிகளைத் தொடங்கினார். இதேபோல பிற அமைச்சர்களும் தத்தம் அலுவலகங்களுக்குச் சென்றனர்.

முதல்வர் உண்ணாவிரதத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டதற்கு, அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, சக தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்தது போதும் என்று வலியுறுத்தியதால்தான் அவர் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தையடுத்து மேலும் பிரச்சினைகள் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கருணாநிதி உண்ணாவிரதத்தைக் கைவிட்டாலும் கூட பிற கூட்டணித் தலைவர்கள், திமுகவினர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்டங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் அமைச்சர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை பெரிய அளவில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் இல்லாமல் உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

பேருந்துகள் ஓரளவுக்கு ஓடத் தொடங்கியுள்ளன. இருப்பினும் கடைகள் திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X