For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் உண்ணாவிரதம் உச்ச நீதிமன்ற அவமதிப்பு- ஜெ

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்ச நீதிமன்ற அவமதிப்பாகும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும் என்றும், இந்தக் கால்வாய் வழியாக கப்பல்கள் சென்றால் கப்பல்கள் பயணத்தில் 24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் வரை சேமிக்கப்படும் என்றும், இதனால் செலவுகள் குறையும் என்றும் கூறுவது உண்மையல்ல.

மாறாக, கப்பல் உரிமையாளர்கள் இந்தக் கால்வாயைப் பயன்படுத்துவதினால் செலவு கூடுமே தவிர எந்த விதமான செலவும் குறையாது. இந்தக் கால்வாய் 12 மீட்டர் ஆழம் உள்ள கால்வாயாகத் தான் இருக்கும். ஆகவே மிகப்பெரிய கப்பல்கள் இந்தக் கால்வாயை பயன்படுத்த முடியாது.

சாதாரணமாக செல்கின்ற பாதையில் சென்றால் என்ன செலவு ஆகுமோ, அதை விட நான்கு மடங்கு கூடுதல் செலவுதான் இந்தக் கால்வாயைப் பயன்படுத்துவதினால் கப்பல்களுக்கு ஏற்படும். ஆகவே பெரிய கப்பல் உரிமையாளர்கள் நிச்சயமாக இந்தக் கால்வாயைப் பயன்படுத்த மாட்டார்கள்.

இதைப் பற்றி எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் கருத்து சொன்னால் அவர்களைத் தாக்குகின்ற நிலைமைதான் தமிழகத்தில் நிலவுகிறது.

அதிமுக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்க்கவில்லை. ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

மத்திய அரசே சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மூன்று மாத கால அவகாசம் கேட்டுப் பெற்ற பிறகு, இந்தப் பிரச்சினை குறித்து பந்த் நடத்தப் போவதாக கருணாநிதி அறிவித்தார்.

இந்த பந்த் சட்டத்திற்கு விரோதமானது, எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், திமுக நடத்தும் பந்த் சட்ட விரோதமானது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு அளித்து அதற்குத் தடை விதித்ததோடு, தனிக் கட்சிகளின் நலனை விட மக்களின் நலனே முக்கியம் என்றும், அரசியல் கட்சிகளின் இம்மாதிரியான நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. இனி எந்த மாநில அரசும் பந்த்திற்கு அழைப்பு விடுக்க முடியாது. இந்தத் தீர்ப்பின் மூலம் எனது தலைமையில் இயங்கும் அதிமுக புதிய வரலாறு படைத்துள்ளது.

தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக வந்தவுடன், தனது கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் அறிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஒன்றும் சொல்ல முடியாது என்றும், சேது சமுத்திரத் திட்டத்தை வேகமாக நிறைவேற்றக் கோரியே உண்ணாவிரதம் இருப்பதாக கருணாநிதி பேட்டி அளித்துள்ளார்.

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் நிலையில், அதனை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு மூன்று மாத கால அவகாசம் கோரிய நிலையில், வழக்கு விசாரணை வருகிற 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், இதையெல்லாம் மீறி வேகமாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணாவிரதம் இருப்பது கூட, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கை தான் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X