For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. வீட்டில் பிடிபட்டவர் அதிமுகவை சேர்ந்தவர்-பெண் விவகாரத்தில் சிக்கியவர்!

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

வேலை கேட்கத்தான் ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைந்ததாக போயஸ் தோட்ட வீட்டுக்குள் பிடிபட்ட மர்ம நபர் கூறியுள்ளார்.

Jaya's house Vedha Nilayam in Poes gardenஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்குள் நேற்று காலை மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் செயலாளர் பூங்குன்றன் மற்றும் பாதுகாவலர்கள் சேர்ந்து அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் பின்னர் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் தண்டபாணி என்றும், ஈரோடு மாவட்டம் தாராபுரத்தைச் சேர்நதவர் என்றும் தெரிய வந்தது. அவர் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,

தாராபுரம் பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வருகிறேன். 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.

எனது தந்தை பழனிச்சாமி இறந்து விட்டார். எனக்கு 2 தங்கைகளும், ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர். நான் எனது தாயார் கோவிந்தம்மாளுடன் வசித்து வருகிறேன்.

நெசவுத் தொழிலே எங்களது குடும்பத்தின் தொழிலாகும். ஆனால் எனக்கு அந்த வேலை பிடிக்காமல் தச்சர் வேலை பார்த்து வந்தேன். எனக்கும், எனது அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். கோபத்தில் அவரை நான் அடித்து உதைத்து விட்டு திருப்பூர் போய் விட்டேன்.

அங்கு ஒரு நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலையில் சேர்ந்தேன். மாதம் ரூ. 3,000 சம்பளம் தருவதாக அவர்கள் சொன்னார்கள். அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அங்கு போய் அடையாள அட்டை வாங்குவதற்காக வந்தேன்.

The intruder சென்னையில் எனது நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், பேசாமல் ஜெயலலிதாவை போய்ப் பார். அவர் உனக்கு நல்ல வேலை தருவார் என்றனர்.

இதையடுத்து ஜெயலலிதா வீட்டுக்கு வந்தேன். அப்போதுதான் நான் பிடிபட்டேன். நான் ஏற்கனவே அதிமுகவினருடன் ஜெயலலிதா வீட்டிற்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் தண்டபாணி.

திருப்பூரிலிருந்து சென்னைக்கு வந்ததற்கான பேருந்து டிக்கெட் தண்டபாணியிடம் இருந்ததைப் போலீஸார் கண்டுபிடித்தனர். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், தண்டபாணியைப் பிடித்தபோது வாய் பேச முடியாதவர் போல நடித்துள்ளார் தண்டபாணி. இதனால் அவரை ஊமை என்று முதலில் நினைத்துள்ளனர்.

ஆனால் பயத்தின் காரணமாகவே தனக்கு பேச்சு வரவில்லை என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார் தண்டபாணி.

தண்டபாணி வைத்திருந்த பையை போலீஸார் சோதனை போட்டபோது, 2 சட்டை, பேன்ட்டுகளும், ரூ. 946 பணமும் இருந்தது.

இதுதவிர சிகரெட் லைட்டர், பீடிக் கட்டு, 3 பெண்களின் படங்களும் இருந்தன. அந்தப் பெண்கள் யார் என்று போலீஸார் கேட்டபோது, நான் திருமண ஏற்பாடு செய்வதற்காக கொண்டு வந்த பெண்களின் புகைப்படங்கள் என்று கூறியுள்ளார் தண்டபாணி.

இதற்கிடையே தண்டபாணி குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள தண்டபாணி அதிமுகவைச் சேர்ந்தவர். ஈரோடு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருக்கு இவரை நன்கு தெரியும்.

இவர் ஏற்கனவே ஊரில் பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளார். அப்போது அதிமுக செயலாளர்தான் தண்டபாணியைக் காப்பாற்றியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடைய வீட்டில் 3 இன்ஸ்பெக்டர்கள், 3 சப் இன்ஸ்பெக்டர்கள், 27 போலீஸார் ஷிப்ட் முறையில் 24 மணி நேரக் காவலில் உள்ளனர்.

மெயின்கேட் அருகே ஒரு காவலர் 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் நிற்பார். இதுதவிர முன்னாள் முதல்வரின் பொறுப்பில் ஒரு கூர்க்காவும், இருக்கிறார்.

நேற்று சம்பவம் நடந்தபோது ஜெயலலிதா வீட்டில் கார்பென்ட்ரி வேலை செய்யும் ஒருவர் சிலருடன் உள்ளே சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் சேர்ந்து தண்டபாணியும் சென்றுள்ளார்.

முன்னாள் முதல்வர் வீட்டுப் பாதுகாப்பு குறித்து மறு பரிசீலனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X