For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸ் கனவு காண உரிமை உண்டு-ஜெ.

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னுடைய இல்லத்தை நோக்கியே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுக கட்சியில் இணையும் விழாவில் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் யார் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தாலும் அவர்கள் தேசவிரோத, தேசத்துரோக செயலில் ஈடுபட்டதாக கருதி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் சட்டம் என்து அனைவரும் பொதுவானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் பாய்வதில் அர்த்தம் இல்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த வகையில் பார்க்கும்போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வனுக்காக இரங்கல் செய்தி வெளியி்டடதற்காக முதல்வர் கருணாநிதியை கைது செய்திருக்க வேண்டும்.

பொதுக்கூட்டங்களை நடத்தி விடுதலைப்புலிகளை பாராட்டி பேசுவதையும் அனுமதிக்க முடியாது. பேரணிகள் நடத்துவதையும் அனுமதிக்க முடியாது. இத்தகைய கூட்டங்கள், பேரணிகள் நடத்த அனுமதியளித்தால் தமிழ அரசையே கலைக்கவேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.

நாகா தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் அரசே பேச்சுவார்த்தை நடத்தவில்லையா என்று திமுகவினர் கூறுகிறார்கள். இதுபோன்ற வியாக்யானத்தில் நான் ஈடுபட விரும்பவில்லை. அதிமுகவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாடும் தெளிவாக இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்.

தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை பற்றி பேசுவோம், அதைப்பற்றி சிந்திப்போம். இப்போது எந்த கட்சியை எடுத்துக் கொண்டாலும், காங்கிரசானாலும், பாஜகவானாலும் ஒரு காலகட்டத்தில் வைகோவுடன் கூட்டணி வைத்திருந்தன. என்னை பொறுத்தவரை இப்போது கூட்டணி பற்றி பேச முடியாது.

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். முன்பு காங்கிரஸ் கட்சி எங்கள் கூட்டணியில் இருந்தபோது நான் கிருஷ்ணசாமிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். இப்போது அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டது அறிந்ததும் மனிதாபிமான அடிப்படையில் அவரை நான் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன்.

பாலாறு பிரச்சனையில் ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் முதல்வராக இருந்தபோது இந்த பிரச்சனைக்காக ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அவரது பதில் திருப்திகரமாக இல்லை.

எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். பின்வந்த அரசு அந்த வழக்கை தொடர்ந்து நடத்தவில்லை. அதை பற்றியே அவர்கள் சிந்திக்கவில்லை. பாலாறு பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய தீர்ப்பை பெற வேண்டும்.

நந்திகிராமில் தொடர்ந்து நடைபெறும் அடக்குமுறை, வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. மாநில அரசு இத்தகையை வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும். அடக்குமுறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். மாநில அரசால் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் மத்திய அரசு தலையிட வேண்டும்.

2011ம் ஆண்டு திமுக, அதிமுக இல்லாத ஆட்சி அமைக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.

அணு சக்தி ஒப்பந்தத்தில் எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக இதனை முழுமையாக எதிர்த்து வருகிறது. இந்த ஒப்பந்தமே தேவையற்றது. இந்த விவகாரத்தில் தேர்தல் விரைவில் வரப்போகிறது.

3வது அணி என்று ஒன்றுமில்லை. ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி பற்றிய கேள்வி தேவையில்லை. குஜராத்தில் தேர்தல் வரப்போகிறது. இந்த நேரத்தில் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என்பதில் அர்த்தம் கிடையாது.

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. பாதுகாப்பு கொடுத்திருப்பதாக ஏதோ சொல்கிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. என்னவென்று தெரியவில்லை. அது எப்படி சென்னையில், தமிழ்நாட்டில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னுடைய இல்லத்தை நோக்கியே வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X