For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை- திருச்சி பெண்ணைக் காப்பாற்றிய பாகிஸ்தான் டாக்டர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவில் வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகி காரில் இருந்து தள்ளிவிடப்பட்டு கோமா நிலைக்குப் போன திருச்சி பெண் ஸ்மாலின் ஜெனிட்டாவை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு டாக்டர் சிகிச்சை அளித்து காப்பாற்றியதோடு, அவருக்கு உதவிகளும் செய்துள்ளார்.

திருச்சியை சேர்ந்த ஜெனிட்டாவை அமெரிக்காவில் இன்போஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அவருடைய கணவர் கிரிஸ்டி சேவியர் டேனியஸ் மற்றும் குடும்பத்தினர் காரில் இருந்து தள்ளி கொல்ல முயன்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்து அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் பாரஸ்ட் மருத்துவமனையில் (http://www.lfh.org) கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிதாவை அவரது பெற்றோர் சென்று சென்னை அழைத்து வந்துள்ளனர்.

லேக் பாரஸ்ட் மருத்துவமனையில் ஜெனிட்டாவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் சர்தார் இனாமுல்லா என்பவர்தான் சிகிச்சை அளித்துள்ளார். மேலும் அவர் தான் ஜெனிதாவுக்கு வேண்டிய உதவிகளையும் செய்துள்ளார்.

இதுகுறித்து சர்தார் இனாமுல்லா கூறுகையில்,

வடக்கு கரோலினாவில் உள்ள லேக்பாரஸ்ட் மருத்துவமனையில் நான் வேலை பார்த்து வருகிறேன். ஜெனிட்டாவை படுகாயமடைந்த நிலையில் காவல்துறை ரோந்து வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 80 சதவீத அளவுக்கு மோசமான காயங்களுடன் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கோமா நிலையில் இருந்த அவருக்கு பல எலும்புகள் முறிந்திருந்தன. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதினோம்.

இருப்பினும் நம்பிக்கையுடன் நான் சிகிச்சை அளித்து உடன் வந்த அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் நன்றாக தெரிந்தது.

ஆனால் அவர்கள் ஜெனிட்டா குறித்து சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை. இன்சூரன்ஸ் ஆவணங்கள் எதையும் தரவில்லை. எனவே எனக்கு அதிகம் சந்தேகம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் அவரது கணவர் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென ஜெனிட்டாவை பார்க்க வருவதையே நிறுத்தி விட்டார். ஜெனிட்டா உயிருக்கு போராடி கொண்டிருந்த போதும் உறவினர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. அனாதை போல பரிதாப நிலையில் ஜெனிட்டா இருந்தார்.

அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை தவிக்க விட்டுவிட்டு சென்று விட்டனர்.

இந்த விஷயம் பற்றி இந்தியாவைச் சேர்ந்த எனது நண்பர்கள் சிலரிடம் கூறினேன். அவர்கள் ஜெனிதாவுக்கு உதவ முன் வந்தனர். அதன் பின்னர் ஜெனிட்டாவின் தந்தைக்கு தகவல் கொடுத்து அவரை வரவழைத்தோம். அவர் தான் ஜெனிட்டாவை பார்த்து கொண்டார்.

ஜெனிட்டா உடல் நிலை தேறி பேச ஆரம்பித்தபோது, தனது கணவர் குடும்பத்தினர் தான் தன்னை காரில் இருந்து தள்ளியதாக அதிர்ச்சி தகவலைக் கூறினார். காரில் செல்லும் போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் அப்போது காரில் இருந்து பிடித்து கீழே தள்ளி விட்டனர் என்றும் கூறினார்.

டாக்டர் என்ற முறையில் ஒரு உயிரை காப்பாற்றுவது எனது கடமை. அதன்படி ஜெனிட்டாவுக்கு சிகிச்சையளித்து தேவையான உதவிகளை செய்தேன். எனக்கு அமெரிக்காவில் நண்பர்கள் என்றால் அது இந்தியர்கள் தான். எனக்கு இந்திய நண்பர்கள் என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி என்றார் இனாமுல்லா.

இந் நிலையில் தனது மகளை காரிலிருந்து தள்ளி கொல்ல முயற்சித்ததாக கிரிஸ்டி சேவியர் டேனியஸ் மீது ஜெனிட்டாவின் தந்தை செபாஸ்டியன் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

என் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து திருச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஜெனிட்டாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை, சித்ரவதை, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் கூறி இருந்தேன். ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

எனவே வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருக்கிறேன். இந்த சம்பவத்தில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும். மருமகனை நம்பிதான் எனது மகளை அமெரிக்கா அனுப்பினேன். அங்கு அவளை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். அவளை மருத்துவமனையில் சேர்த்தது பற்றி கூட எனக்குத் தெரிவிக்கவில்லை.

மருமகன் கிரிஸ்டி சேவியர் டேனியஸை இந்தியா கொண்டு வந்து விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். எனவே அவரை போலீசார் இங்கு அழைத்து வந்து விசாரிக்க வேண்டும்.

இப்போது ஜெனிட்டா ஓரளவு குணமாகி விட்டார். நன்றாக பேசுகிறாள். நடந்த சம்பவம் அனைத்தையும் வழக்கறிஞரிடம் கூறியிருக்கிறாள் என்றார் செபாஸ்டின்.

இது சம்பவம் குறித்து டி.ஜி.பி. ராஜேந்திரன் கூறுகையில், இந்த மனு மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடந்தது அமெரிக்காவில் என்பதால் அந்நாட்டு போலீசுக்கு முறைப்படி இந்த மனு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

நடந்தது விபத்தே-கணவர்:

இந் நிலையில் ஜெனிட்டா மற்றும் அவரது தந்தையின் புகார்களை கணவர் கிரிஸ்டி சேவியர் டேனியஸ் மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு அமெரிக்காவில் புதிய இடத்தில் வேலை கிடைத்தபோது வீடு மாற்றிக் கொண்டு காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில்தான் ஜெனிட்டாவுக்கு காயம் ஏற்பட்டது. அந்த விபத்தில் காயமடைந்த என் தாயும், சகோதரியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன.

நான் ஜெனிட்டா குடும்பத்தாரிடம் வரதட்சணை கேட்டதாக சொல்லப்படுவது தவறு. ஜெனிதா குடும்பத்தாரிடமிருந்து நான் ஒரு பைசா கூட வரதட்சணையாக பெறவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிட்டாவின் குடும்ப உறுப்பினர்கள் திருச்சியில் உள்ள எனது வீட்டுக்கு குண்டர்களுடன் வந்து அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்.

ஜெனிட்டாவின் தந்தை அமெரிக்காவில் 2 மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது ஏன் என் மீது போலீசில் புகார் சொல்லவில்லை, தரவில்லை?. அமெரிக்காவில் ஜெனிட்டாவுக்கு நிகழ்ந்தது கார் விபத்துதான். எனது தாய்க்கும், சகோதரிக்கும் கூட அந்த விபத்தில் காயம் ஏற்பட்டது குறித்து அமெரிக்க பத்திரிகையில் செய்தி வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் தனது ஊழியர் தொடர்புடைய இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இன்போஸிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X