For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விளைநிலங்களை விற்காதீர்கள் - விவசாயிகளுக்கு கலாம் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Abdul Kalam
டெல்லி: சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளை நிலங்களை யாராவது கேட்டால், விவசாயிகள் விற்கக் கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த மனித உரிமை தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலாம் பேசுகையில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவோ அல்லது வேறு பயன்பாட்டுக்காகவோ விளைநிலங்களை யாராவது கேட்டால் விவசாயிகள் தரக் கூடாது.

விவசாயிகள் தற்கொலைப் பாதைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காக்க வேண்டியது நாட்டின் கடமை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. இது விவசாயத்தையும், விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும். விவசாயிகளின் நிலங்களை பிடுங்குவது என்பது மனித உரிமை மீறலாகும்.

சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் நிலையில் விவசாயிகளும், சிறு நில உரிமையாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை குறித்து அனைவருமே சீரியஸாக சிந்திக்க வேண்டும்.

நாட்டின் சில பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினையை நாம் சரி செய்ய வேண்டும். இதை நாம் தடுத்து விவசாயிகளைக் காக்கத் தவறினால் அது பெரும் மனித உரிமை பிரச்சினைகளை உருவாக்கி விடும்.

இந்த மாநாட்டின் மூலமாக நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். சிறப்புப் பொருளாதார மண்டலம் அல்லது வேறு பெயரில் யாராவது உங்களது நிலத்தைக் கேட்டால் தயவு செய்து அவர்களுக்கு அதை விற்காதீர்கள்.

எந்த விவசாயியும், நிலமில்லாதவராக இருப்பதை நான் விரும்பவில்லை. நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். எனவே இந்தப் பிரச்சினையின் ஆழம் எனக்குத் தெரியும்.

அரசாங்கங்கள், தொழில் நிறுவனங்கள், விளை நிலத்தை கையகப்படுத்துவதற்குப் பதில், விவசாயிகளையும் தங்களது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு, அவர்களுக்கும் சம உரிமைகள் அளித்து செயல்பட முன்வர வேண்டும்.

இதன் மூலம் நிலமும் அழியாது, விவசாயியும் அழிய மாட்டார், அரசுக்கும் தனது திட்டம் நிறைவேறும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இணைத்துக் கொள்ளப்படும் விவசாயிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் வேலை வாய்ப்புகளைக் கற்றுத் தரலாம். அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேலும் உயரும். இது பஞ்சாப் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது என்றார் கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X