பஸ் எரிப்பு அதிமுகவினரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு-அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil
சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் அப்பீல் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது.

இதையடுத்து இந்த மூவருக்கும் வரும் 10ம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படவுடுள்ளது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 3 பேரையும் 2008 ஜனவரி 10ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை தூக்கில் போட கோவை சிறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நிலுவையில் இருப்பதால் தூக்கு தண்டனையை 8 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனும் (பி.எச்.பாண்டியனின் மகன்), அரசு தரப்பில் டி.குமரேசனும் வாதாடினார்கள்.

அதிமுகவினர் சார்பில் பாண்டியன் வாதாடுகையில், தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நகல் எங்களுக்கு 14ம் தேதி தான் கிடைத்தது. தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் கிருஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால், 3வது வாரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வேளையில் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது தவறானதாகும். வரும் 10ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது. எனவே தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 3 பேரின் உயிருக்கு பாதகம் ஏற்படும் என்றார்.

வாதத்தை கேட்ட பின்னர் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பீல் செய்யப்படுவதற்கு முன்பாக தண்டனையை நிறுத்தி வைக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த பின்னர், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது.

சிறை விதிப்படி செஷன்சு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் வாரண்ட் பிறப்பித்து தண்டையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் சார்பில் அணுக வேண்டும். அங்குதான் இதுகுறித்து அவசர உத்தரவுகளை பெறமுடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய பாண்டியன், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தண்டனையை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது தவறு. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நிராகரிக்கப்பட்டு பின்னர் கவர்னர், ஜனாதிபதியிடம் கருணா மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவையும் நிராகரிக்கப்பட்டால் தான் தண்டனையை நிறைவேற்ற முடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய நீதிபதி முருகேசன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விட்டீர்கள். அங்கு இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. இந்த வழக்கு மீண்டும் 4ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இது போன்ற சூழ்நிலையில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா. ஏற்கனவே இதுபோன்று உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதா. இதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்க வேண்டும்.

இதேபோல அரசு தரப்பிலும் தனது கருத்தை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார் நீதிபதி.

இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ராஜ இளங்கோ ஒரு பதில் மனு தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில், மூன்று குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள கோவை சிறையின் கண்காணிப்பாளர் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்த மூவரின் மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற பதிவாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்த உத்தரவின் நகலை நான் இந்த நீதிமன்றத்திடம் வழங்குகிறேன் என்று கூறி கோவை சிறை கண்காணிப்பாளர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய உத்தரவின் பேக்ஸ் நகலை சமர்பித்தார்.

இதையடுத்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மூன்று அதிமுகவினரும் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...