2011ல் திமுக, அதிமுக இல்லாத தனி அணி - ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil
Ramdoss

சென்னை: பாமக தலைமையில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புதிய அணியை உருவாக்கி தேர்தலை சந்திப்போம். இதில் திமுக, அதிமுக இடம் பெறாது. பாஜகவுடன் இனிமேல் கூட்டணி சேர மாட்டோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக, அதிமுக இடம்பெறாத புதிய அணியை உருவாக்குவோம். இந்த அணியில் இடதுசாரிகளுடன், தேமுதிக, பாமக ஆகியவை இடம் பெறலாம் என்று நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியிருந்தார்.

தற்போது அவரது கருத்தை ஒத்து டாக்டர் ராமதாஸும் திமுக, அதிமுக இல்லாத புதிய அணி அமைக்கப்படும் என்று கூறி பரபரப்பை கூட்டி விட்டுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைமையில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புதிய அணி உருவாகும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2007 ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் கடமைகளை நாங்கள் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராடியிருக்கிறோம்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் எங்களுடைய போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, அரசாங்கமும் எங்களுடைய கருத்துக்களை ஏற்று செயல்படுத்தும் அளவிற்கு நாங்கள் பணியாற்றி இருக்கிறோம்.

மதுவுக்கு எதிராக தீவிரப் பிரசாரம்

2008 ஆம் ஆண்டை பொறுத்தவரை மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். இதற்காக கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நானே வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

தமிழக நகர்ப்புறங்களில் 3264 டாஸ்மாக் மதுக்கடைகளும், கிராமப்புறங்களில் 3433 டாஸ்மாக் மதுக்கடைகளும் உள்ளன. அந்த வகையில் கிராமப்புறங்களை மது விற்பனையில் முன்னேற்றியிருக் கிறார்கள்.

சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்த அரசாங்கம் சாதாரண, ஏழை, எளிய, உழைக்கும் மக்களிடமிருந்து சுரண்டியிருக்கிறது. எனவே தான் முழுமையான மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.

இதற்கான தேதியை இம்மாத இறுதியில் புதுவையில் நடைபெற உள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அறிவிப்போம்.

உடனடியாக மதுவிலக்கை அமல் படுத்தாவிட்டாலும், படிப்படியாக இதனை செயல்படுத்தலாம். முதலில் பார்களை அப்புறப்படுத்தலாம். பிறகு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். விற்பனை நேரத்தை மாலை 5 மணியுடன் நிறுத்தி விடலாம்.

மகாராஷ்டிராவில் இருப்பது போன்று, உள்ளாட்சி அமைப்புகள் மதுக் கடைகள் கூடாது என்று தீர்மானம் போட்டால் அங்கு கடைகளை திறக்கக் கூடாது. பொதுமக்களில் 50 சதவிகிதத்தினரும், பெண்களில் 25 சதவிகிதம் பேரும் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்பதற்கான அரசாணையை மராட்டிய அரசு பிறப்பித்துள்ளது. அதேபோன்ற அரசாணையை தமிழகத்திலும் மாநில அரசு பிறப்பிக்கலாம்.

என் யோசனையைக் கேளுங்களேன் ..

மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் என்று கூறுகிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் 6 மாத காலத்திற்கு என்னுடைய யோசனை களை கேட்டு செயல்படுத்தினால் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இல்லாமல் செய்து விடலாம்.

நாடாளுமன்ற தேர்தல் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகளால் மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சிக்கு எந்தஆபத்தும் இல்லை. 5 ஆண்டு ஆட்சி முழுமையாக நடைபெறும்.

திமுக - அதிமுக இல்லாத புது கூட்டணி

2009ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடம் பெறும் கூட்டணியில்தான் பாமகவும் இருக்கும்.

2011ல் பாமக தலைமையிலான புதிய அணி உருவாகும். இந்த அணியில் திமுக, அதிமுக இருக்காது. இந்த அணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமைப்போம்.

திராவிடக் கட்சிகளிடமிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளோம். இரு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டும், மக்களுக்கு எதையும் செய்யவில்லை. எனவேதான் மாற்று அணியை உருவாக்க தீர்மானித்துள்ளோம்.

2011 சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்கவிட்டால், உ.பியில் மாயாவதி செய்தது போல கூட்டணி ஆட்சியை தமிழகத்திலும் அமைப்போம்.

புதிய கூட்டணி எப்படி இருக்கும் என்பதை இப்போதே சொல்வதற்கில்லை. தேர்தல் நேரத்தின்போதுதான் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவு செய்யப்படும்.

ஒன்றை மட்டும் தெளிவாக சொல்ல முடியும். 2011 சட்டசபைத் தேர்தலில் பாமக இடம் பெறும் கூட்டணியில் திமுகவும் இருக்காது, அதிமுகவும் இருக்காது.

அதேபோல இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டு சேர மாட்டோம்.

திமுக, பாமக இடையிலான கருத்து வேறுபாடுகள் சாதாரண விஷயம்தான். அரசியல் கட்சிகளிடையே இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் இருப்பது புதிதில்லை. நான் சொன்ன பல கருத்துக்களை, விமர்சனங்களை ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தில்தான் தான் எடுத்துக் கொள்வதாக முதல்வரே கூறியுள்ளார் என்றார் அவர்.

வரதராஜன் கூறியுள்ள புதிய கூட்டணிக்கு பாமக தலைமை தாங்குமா என்ற கேள்விக்கு, அதான் தேர்தல் நேரத்தின்போது சொல்கிறேன் என்று கூறுகிறேனே. மற்ற கேள்விகளுக்கு இப்போது எந்தப் பதிலையும் என்னால் சொல்ல முடியாது. அதற்கான காலம் இப்போது இல்லை என்றார் ராமதாஸ்.

பேட்டியின் போது பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நேற்று வரதராஜனும், இன்று டாக்டர் ராமதாஸும் மூன்றாவது அணி குறித்து அடுத்தடுத்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதுக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...