For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'என்ன நடக்கப் போகிறதோ': அச்சத்தில் அலங்காநல்லூர்!

By Staff
Google Oneindia Tamil News


மதுரை: ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் சாமி குத்தம் ஏற்படும், நோய் நொடிகளால் குடும்பத்தினரும், ஊர் மக்களும் அவதிப்பட நேரிடும் என்ற அச்சத்தில் அலங்காநல்லூர் மக்கள் உள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன ஊர் மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர். உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்ற பெயரும் கூட. எல்லாப் புகழும் ஜல்லிக்காட்டால் வந்தது.

வருடா வருடம் இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண தென் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அலை மோதுவார்கள். இதற்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து தரும்.

ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அலங்காநல்லூர் மக்கள் கடந்த சில நாட்ளாகவே சாமி கும்பிட்டு வந்தனர். நேற்றும் கூட முனியசாமி கோவிலில் ஊர் மக்களும், மாடு வளர்ப்போரும், மாடு பிடிப்போரும் திரண்டு சிறப்பு பூஜை செய்து சாமி கும்பிட்டனர்.

அந்த சமயத்தில்தான் தடை என்ற இடிச் செய்தி அவர்களை வந்தடைந்தது. நினைவு தெரிந்தது முதல் தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறி விட்ட ஜல்லிக்கட்டுக்குத் தடையா என்ற அதிர்ச்சியும், வேதனையும், துயரமும், குழப்பமும் அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அலங்காநல்லூர் முழுவதும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்த பேச்சுத்தான். அந்தப் பேச்சுக்களில் இடம்பெறும் ஒரே அம்சம், இதனால் சாமி குத்தம் ஏற்படுமே, நோய் நொடிகள் தாக்குமே, என்ன பாதிப்பு வரப் போகிறதோ என்ற அச்சம்தான் பிரதானமாக உள்ளது.

ஜல்லிக்கட்டு பிற ஊர் மக்களுக்கு வீர விளையாட்டாக இருந்தாலும், அலங்காநல்லூர் கிராமத்து மக்களைப் பொருத்தவரை அது, ஊர் மக்கள் நலமாக இருக்க, நோய் நொடிகள் தாக்காமல் இருக்க, எந்தவித கடவுள் கோபமும் நேராமல் இருக்க நடத்தப்படும் சடங்கு நிகழ்ச்சி.

இதன் காரணமாகவே வருடா வருடம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மிகவும் விசேஷமாக, விமரிசையாக நடத்தி வருகின்றனர் அலங்காநல்லூர் மக்கள்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜீரணிக்க முடியாத நிலையில் இருப்பினும் கூட, ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள 17ம் தேதியன்று, வழக்கம் போல சாமி கும்பிட்டு விட்டு, உள்ளூர் காளைகளை அவிழ்த்து விடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜல்லிக்கட்டால் மதுரை மாவட்டத்தின் இதர பகுதிகளான அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களிலும் கூட பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் நிலவுகிறது. அவனியாபுரம், பாலமேடு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கிட்டத்தட்ட 11 தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு முக்கிய அம்சமாகத் திகழ்வதால், இந்த மாவட்டங்களில் பெரும் சோகமும், ஏமாற்றமும் நிலவுகிறது. இந்த பொங்கல் கண்டிப்பாக சந்தோஷப் பொங்கலே இல்லை என்று கிராம மக்கள் விரக்தியுடன் பேசுகின்றனர்.

சில விவரம் தெரிந்தவர்கள், ஸ்பெயின், ஸ்வீடனிலும் கூட இதுபோன்ற காளைகளைப் பிடிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் கூட உயிர்ப்பலிகள் நடக்கத்தான் செய்கின்றன. இங்கு காளைகளுக்கு சாராயம் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த நாடுகளிலோ விலை உயர்ந்த மதுக்களைக் கொடுக்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் இந்த காளை விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படவில்லை.

அப்படி இருக்கும்போது தமிழ் இனத்தின் அடையாளங்களில் ஒன்றாக, தமிழர்களின் வீர விளையாட்டாக, பாரம்பரியமாக ஆயிரக்கணக்கான ஆண்டுளாக நடந்து வரும் ஒரு வீர விளையாட்டை தடை செய்வது என்பது ஒரு இனத்துக்கு எதிரான செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது என்று குமுறுகிறார்கள்.

உழவர்கள் தங்களது தொழிலுக்கு பேருதவியாக இருக்கும், தங்களுக்குத் துணையாக இருக்கும் காளைகளுக்கும், பசுக்களுக்கும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று மரியாதை செய்கின்றனர். ஆனால் இந்த பொங்கல் எங்களுக்கு சந்தோஷப் பொங்கலாக இல்லாமல் போய் விட்டது என்று வருத்தத்துடன் கூறுகின்றனர் கிராமத்தினர்.

அலங்காநல்லூரைச் சேர்ந்த முருகவேல் என்பவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. இதை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வது, தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. காளைகள் அனைத்தும் தாயராக உள்ளன. மாடு பிடி வீரர்களும் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த நிலையில் இப்படி ஒரு தடையை விதித்திருப்பது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது முதலுதவி சிகிச்சை அளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், ஸ்பெயினில் நடைபெறும் காளை விரட்டும், நமது ஜல்லிக்கட்டும் ஒரே விளையாட்டுதான். ஸ்பெயினில் முழு அரசு ஆதரவுடன், எந்தவிதப் பிரச்சினையும் இன்றி காளைச் சண்டை நடைபெறுகிறது. ஆனால் இங்கு தடை விதித்துள்ளனர். ஏன் இந்த முரண்பாடு என்று தெரியவில்லை என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் தென் மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சியுடன் உள்ளது மட்டும் தெரிகிறது. ஜல்லிக்கட்டு இல்லாமல் நடக்கப் போகும் முதல் பொங்கல் என்பதையும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ரேஷன் கார்டுகள் ஒப்படைப்பு போராட்டம்:

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த தகவல் அறிந்த மதுரை மாவட்ட கலெக்டர் ஜவகர் இன்று கிராம மக்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.

இதில் கலந்து கொள்ள அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களில் இருந்து கிராம நிர்வாகிகள் உட்பட ஏராளமான கிராம மக்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இதனால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X