For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை சென்னை வருகிறார் மோடி - பலத்த பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

Modi
சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். பல்வேறு கட்சிகள், முஸ்லீம் அமைப்புகள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அறிவித்துள்ளதால் பலத்த பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மோடியின் சென்னை வருகை பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்து, 3 வது முறையாக முதல்வர் பதவியை ஏற்ற பிறகு முதல் முறையாக சென்னைக்கு வருகிறார் மோடி.

மோடியின் வருகையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிளும், பல்வேறு முஸ்லீம் அமைப்புகளும், கருப்புக் கொடி போராட்டம் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளன. இதனால் சென்னை நகரில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9.30 மணிக்கு வருகிறார் ..

நாளை காலை 9.30 மணிக்கு மோடி சென்னைக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவரை பாஜக தலைவர் இல.கணேசன் தலைமையில் பெரும் திரளான பாஜகவினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர்.

குஜராத்தி சங்க விழா ..

இதையடுத்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்கு மோடி செல்கிறார். அங்கு குஜராத்தி சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

கமலாலயத்தில் ஆலோசனை ..

அதன் பின்னர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் செல்லும் மோடி அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்கிறார். பல்வேறு மாவட்ட பாஜக நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

ஜெ. வீட்டில் விருந்து ..

அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு மோடி செல்கிறார். மோடிக்கு மதிய விருந்து அளித்து சிறப்பிக்கிறார் ஜெயலலிதா.

இந்த விருந்தில் பாஜக செய்தித் தொடர்பாளரும், தமிழக பாஜகவுக்கான மத்திய பார்வையாளருமான ரவிசங்கர் பிரசாத்தும் கலந்து கொள்கிறார்.

கூட்டணிக்கு அச்சாரம் ..?

இந்த சந்திப்புதான் மிகவும் முக்கியமாக வர்ணிக்கப்படுகிறது. காரணம், அதிமுக - பாஜக கூட்டணிக்கு இக்கூட்டத்தில் பிள்ளையார் சுழி போடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த சந்திப்பின்போது விடுபட்டுப் போன அதிமுக, பாஜக உறவு உறுதி செய்யப்படவுள்ளதாகவும் கருதப்படுகிறது.

துக்ளக் விழா ..

இதை முடித்து விட்டு மாலையில் காமராஜர் அரங்கில் நடைபெறும் துக்ளக் இதழின் 37வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் மோடி.

தனது சென்னை பயணத்தை முடித்து விட்டு இரவு 9.55 மணிக்கு அகமதபாத் புறப்பட்டுச் செல்கிறார் மோடி.

பலத்த பாதுகாப்பு:

மோடி, இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருப்பவர். எனவே அவரது பயணத்தின்போது மிக பலத்த பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோடிக்கு உறுதியான பாதுகாப்பை வழங்குமாறு சென்னை காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய உளவுப் பிரிவு, ஐபி உள்ளிட்டவை உத்தரவிட்டுள்ளன.

மோடி சென்னையை விட்டு செல்லும் வரை பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இருக்கக் கூடாது எனவும் சென்னை காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட குழுவின் ஆலோசனை நடந்தது. இதில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மோடியின் வருகைக்கு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட பல முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்துள்ளன. காமராஜர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியைத் தடுக்கப் போவதாகவும், கருப்புக் கொடி காட்டப் போவதாகவும் அவை அறிவித்துள்ளன.

மோடியின் வருகையை எதிர்த்து நடத்தவுள்ள போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்த தமுமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ள பாசிச எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காமராஜர் அரங்கில் மோடி நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கும் இந்த அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இப்படி பல்வேறு பரபரப்பான சூழ்நிலையில், நாளை காலை மோடி சென்னைக்கு வருகிறார். அவருக்கு பிரமாண்டமான வரவேற்பைக் கொடுக்க பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X