For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் அறிக்கை விட்டுள்ளனர்.

டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் அழியாத சில அடையாளங்கள் உள்ளன. இந்த அடையாளங்களை அழித்து விட அனுமதிக்கக் கூடாது.

தமிழர்களின் அடையாளங்களில் மிகச் சிறப்பானது தென் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடும், அவர்களது வீரத்தோடும் ஒன்றி விட்ட ஏறு தழுவுதல் என்கிற ஜல்லிக்கட்டாகும்.

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, நம் தமிழ் மரபில் வந்த இந்த வீர விளையாட்டு இனிமேல் முற்றிலும் அழிந்து விடுமோ என்கிற ஆபத்து உருவாகியிருக்கிறது.

இந்தக் கலைக்கு, வீர விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ஆணை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு தென் மாவட்ட மக்களிடையே பேரதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவிலும், ஸ்பெயின் நாட்டிலும் இந்த வீர விளையாட்டு ஆண்டுதோறும் வேறு வடிவங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்கும் காளைகளை ஈட்டியைக் கொண்டு குத்தியும், வேறு வழிகளில் கடுமையாகத் தாக்கியும் காட்சிகளை தொலைக்காட்சிகளிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அங்கே காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதை போன்று தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் நடப்பதில்லை.

எனவே ஜல்லிக்கட்டிற்கு முற்றிலுமாக தடை விதித்திருப்பதற்குப் பதிலாக ஒழுங்குபடுத்தப்பட்டு யாருக்கும் ஆபத்து இல்லாமல் தொடர்ந்து நடைபெறுவற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு ஆராய வேண்டும்.

இதற்கு சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அதற்கான வழிமுறைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அதே நேரம் சட்டச் சிக்கலுக்கும் இடம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வழக்கம் போல இந்த ஆண்டும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு நடைபெற வழி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழர்கள் காட்டுமிராண்டிகளா? திருமா. கண்டனம்

ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்று கூறியுள்ளதன் மூலம் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்ற அர்த்தத்தில் உச்சநீதிமன்றம் வர்ணித்துள்ளது. இது தமிழர்களின் குறிப்பாக கிராமத்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டாகும். தமிழக தென் மாவட்டங்களின் கிராமப்புற கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. கேலிக் கூத்தாக உள்ளது. இது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாகவே கருதப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம், அநாகரீகமானது என்று உச்சநீதிமன்றம் வர்ணித்துள்ளது. இதன் மூலம் தமிழர்களையும் அது விமர்சித்துள்ளதாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. இந்தக் கருத்தின் மூலம் கிராமப்புற மக்களின் மனங்கள் கடுமையாக புண்பட்டுள்ளன.

முதல்வர் கருணாநிதி உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு புண்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு நிவாரணம் தேடித் தர வேண்டும்.

பொங்கல் பண்டிகையின்போது அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உதவி செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உதயச்சந்திரன் நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.

எனவே இந்த ஆண்டும் அதுபோலவே ஜல்லிக்கட்டை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடைபெற ஆவண செய்யப்பட வேண்டும். இதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டங்களை நடத்தும். மக்களைத் திரட்டி இயக்கம் நடத்துவோம்.

தேவைப்பட்டால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யும்.

தை முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டு தினமாக முதல்வர் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு - சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வாழ்வில், வீரமும், காதலும் இரு கண்களாக கருதப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற காளைகளை அடக்கும் வீர விளையாட்டுக்கள், வீரத்தின் அடையாளமாக நடத்தப்படுகின்றன.

தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவரும் வந்து இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பார்கள்.

பிராணி வதை, உயிர்ச்சேதம், விபத்துக்கள் இவற்றின் அடிப்படையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு, பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவோருக்கும், அதில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனவே பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்த முடியுமா என்பது குறித்து அரசு ஆராய வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்தும் இடங்களில் மருத்துவ வசதிகள், காளை பிடிக்கும் வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்தப் போட்டிகளை நடத்தி தமிழர்களின் கலாச்சாரப் பெருமையை நிலை நாட்ட முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X