For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுடன் மோடி சந்திப்பு-விருந்தில் பங்கேற்றார்

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha and Modi

சென்னை வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். மோடிக்கு ஜெயலலிதா மதிய விருந்தளித்தார்.

விருந்தில் 45 வகையான (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு ராசியான 9) 'ஐயிட்டங்கள்' பறிமாறப்பட்டன.

துக்ளக் இதழின் 37வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மோடி இன்று (14ம் தேதி) சென்னைக்கு ஒரு நாள் பயணமாக வந்தார். பாஜக தலைமை அலுவலகம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் அவர் பேசினார். பின்னர் முக்கிய நிகழ்ச்சியாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இடையில் விட்டுப் போன பாஜக-அதிமுக உறவுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போடும் நிகழ்ச்சி இது என்று இந்திய அரசியல் வட்டாரத்தில் வர்ணிக்கப்படுகிறது.

மோடியின் வருகைக்கு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும், முஸ்லீம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த பரபரப்பான சூழலில் இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் மோடி. விமான நிலையத்தில் அவரை பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், பொன். ராதாகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பெரும் திரளான பாஜக வினரும் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

விமான நிலைய வரவேற்பை முடித்துக் கொண்டு மோடி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குச் சென்றார்.

பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு மோடி சென்றார். அங்கு மாநில பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

நிருபர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து:

பிறகு காத்திருந்த செய்தியாளர்களை மோடி சந்தித்தார். அவர்களிடம் முதலில் தமிழில் பேசினார் மோடி. வணக்கம், அனைவருக்கும், பொங்கல் வாழ்த்துக்கள் என்று தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மோடி.

பின்னர் 1 மணியளவில் போயஸ் தோட்டம் செல்ன்றார். அவரை ஜெயலலிதா வீட்டு வாசலில் வந்து மலர் கொத்து அளித்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். மோடியுடன் ரவிசங்கர் பிரசாத்தும் சென்றிருந்தார்.

மோடியும், ஜெயலலிதாவும் ஆலோசனை நடத்தினார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

தொய்வடைந்து கிடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் வலுவுள்ளதாக மாற்ற தேவையான நடவடிக்ைககள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரவிசங்கர் பிரசாத்தும் கலந்து கொண்டார்.

நிருபர்களுக்கு அனுமதி இல்லை:

ஜெயலலிதா-மோடி சந்திப்பு குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் யாரும் போயஸ் தோட்ட வீட்டுக்குள் அனுப்பப்படவில்லை. அதேசமயம், புகைப்படக் கலைஞர்கள் மட்டும் உள்ளே சென்று புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

மோடி வருகையை முன்னிட்டு, ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து ஜெயலிலதா வீடு வரை செல்லும் சாலையில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மோடி வந்தபோது அந்த சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் வீட்டைச் சுற்றி நாலாபுறமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மற்ற சாலைகளைப் போல ராதாகிருஷ்ணன் சாலையிலும் கூட போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மிக மிக மெதுவாக சென்றன. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாயினர்.

சுமார் இரண்டு மணி நேரம் மோடியும் ஜெயலலிதாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

இச் சந்திப்புப் பின் நிருபர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத்,

இது மிக நல்ல சந்திப்பாக அமைந்தது. தேர்தலில் பெறும் வெற்றி பெற்ற மோடியை ஜெயலலிதா வெகுவாகப் பாராட்டினார். 45 வகையான உணவுகளை பரிமாறச் செய்தார் என்றார்.

சந்திப்புக்குப் பின் ஹோட்டலுக்குத் திரும்பிய மோடி, மாலை 5 மணிக்கு சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் சென்றார்.

'துக்ளக்' விழா:

அதன் பின்னர் மாலை ஆறரை மணியளவில் தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடைபெறும் துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார் மோடி.

மோடியை எதிர்த்து காமராசர் அரங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் அறிவித்ததால் அந்தப் பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

பலத்த பாதுகாப்பு:

மோடிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய அரசு தமிழக அரசை அறிவுறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து விமான நிலையம் முதல் மோடி செல்லும் அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.

ஒரு இணை ஆணையர் தலைமையில் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம், ஜெயலலிதா வீடு செல்லும் வழி, காமராசர் அரங்கம், தாஜ் கோரமண்டல் ஹோட்டல் உள்ளிட்ட மோடி செல்லும் இடங்கள் அனைத்திலும் தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

போக்குவரத்து கடும் பாதிப்பு:

முன்னதாக நரேந்திர மோடியின் வருகை காரணமாக சென்னை நகரில் இன்று காலை பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டலுக்கு மோடி சென்றபோது போக்குவரத்தை போலீஸார் முன்கூட்டியே சீர்படுத்தவில்லை. இதன் காரணமாக மீனம்பாக்கம் முதல் அண்ணா சாலை வரையிலும், ராதாகிருஷ்ணன் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதனால் வாகனங்களில் வந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். போலீஸார் முறையாக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை செய்யாததே இதற்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

பிரதமர் வருகை போல..:

சென்னைக்கு நரேந்திர மோடி வருகை புரிந்தது, ஏதோ பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் வந்தது போல படு பரபரப்பாக காணப்பட்டது. மோடிக்கு பல ரூபங்களிலும் ஆபத்து இருப்பதால் அவருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மோடியின் வருகையால் சென்னை நகரம் இன்று கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்ைககள், போக்குவரத்து நெரிசல்கள், பரபரப்புகள், போராட்டங்கள் என நகரமே கலகலத்துப் போனது.

குருவாயூர் கோவிலில் மோடி துலாபாரம்:

முன்னதாக இன்று காலை கேரளா மாநிலம், குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள துலாபாரத்தில் அவருக்கு எடைக்கு எடையாக ரோஜா மலர்கள், கதலி வாழைப்பழம் உள்ளிட்டவை வைக்கப்பட்டன.

மோடியின் வருகையை முன்னிட்டு குருவாயூர் கோவிலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X