For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஹ்ரைனின் இனவாத விலை நிர்ணயம்!

By Staff
Google Oneindia Tamil News


துபாய்: அத்தியாவசியப் பொருட்களுக்கு, உள்ளூர்காரர்களுக்கு ஒரு விலையும், வெளிநாட்டினருக்கு ஒரு விலையும் என நிர்ணயிக்க பஹ்ரைன் அரசு முடிவு செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை இனவாத அணுகுமுறை என்று மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பஹ்ரைன் நாடாளுமன்ற நிதி மற்றும் பொருளாதார விவகார கமிட்டி ஒரு பரிந்துரையை முன்வைத்தது. அதன்படி அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பஹ்ரைன் நாட்டினருக்கு குறைந்த விலையும், வெளிநாட்டினருக்கு அதிக விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் நாட்டினருக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மானிய விலையில் தரவும், பிற வெளிநாட்டினர் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் எனவும் இந்தப் பரிந்துரை கூறுகிறது.

இதன் மூலம் அதிகரித்து வரும் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என இந்தக் கமிட்டி அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது இனவாத அணுகுமுறை என விமர்சிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய சமுதாய நிவாரண நிதியத்தின் பொதுச் செயலாளர் சி.ஆர்.நம்பியார் இதை கடுமையாக கண்டித்துள்ளார். இங்கிலாந்து தூதர் ஜேமி பிரவுன், பஹ்ரைனில் வாழும் வெளிநாட்டினரில் பலரும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள். எனவே இந்த பாரபட்ச விலை நிர்ணயத்தால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

பஹ்ரைன் மனித உரிமை கழக தலைவர் அப்துல்லா அல் தீரஸி, இதை மனித உரிமை மீறல் என வர்ணித்துள்ளார்.

பஹ்ரைன் மக்கள் தொகையான 7 லட்சத்து 43 ஆயிரம் பேரில், 38 சதவீதத்தினர் வெளிநாட்டிலிருந்து வேலை பார்க்க வந்துள்ள தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைன் அரசின் இந்த இரட்டை விலை திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லாதது, நிறைவேற்றுவது கடினம் என்று பஹ்ரைன் சில்லறை வர்த்தகர்களும் கூறுகிறார்கள்.

இதுகுறித்து யுனிவர்சல் புட் சென்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் பார்க்க அரேபியர் போல இருந்தால் அவரை பஹ்ரைன் நாட்டவர் என்று கூறி விட முடியாது. அவர் வேறு வளைகுடா நாட்டைச் சேர்ந்தவராகக் கூட இருக்கலாம். அதை எப்படி அறிந்து கொள்ள முடியும்.

மேலும் அரேபியராக இல்லாத ஒருவர், தான் பஹ்ரைன் குடியுரிமை பெற்றவர் என்று கூறினால் அதை எப்படி உறுதி செய்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு நாட்டவருக்கும் ஒரு விலை என்று கம்ப்யூட்டர்களில் எப்படி நாங்கள் பகுத்து வைக்க முடியும். கம்ப்யூட்டர்களிடம் பொருட்களின் விவரத்தைக் கூறினால் அது பில்லைப் போட்டு கொடுக்கும். அதற்கு பஹ்ரைன் நாட்டவரா, வேறு நாட்டவரா என்ற பாகுபாடு தெரியாது. எனவே இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என்றார் அவர்.

கடந்த டிசம்பர் மாதம்தான் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒர்க் பெர்மிட்டுகளுக்கான கட்டணத்தை இரட்டிப்பாக்கியது பஹ்ரைன் அரசு. இந்த நிலையில் தற்போது இனவாத அடிப்படையிலான விலை நிர்ணயத்தை அமல்படுத்த முனைந்துள்ளது.

ஏற்கனவே ஆறு ஆண்டுளுக்கு மேல் ஒரு வெளிநாட்டுத் தொழிலாளரால் பஹ்ரைனில் பணியாற்ற முடியாது என்ற சர்ச்சைக்குரிய உத்தரவையும் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது பஹ்ரைன் என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் இந்த உத்தரவு இன்னும் மற்ற வளைகுடா நாடுகளின் ஒப்புதலைப் பெறாததால் அமலுக்கு வராமல் உள்ளது.

இரட்டை விலை நிர்ணயத்திற்கு பஹ்ரைன் எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் ஷேக் கலீபா பின் சல்மான் அல் கலீபாவிடம் நேரில் வற்புறுத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X