பிரணாப், நாராயணமூர்த்திக்கு பத்ம விபூஷன்: பா.சிவந்தி ஆதித்தன், சிவ சிதம்பரத்துக்கு பத்மஸ்ரீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி, டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் வீரர் எட்மண்ட் ஹில்லாரி உள்பட 13 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.சுசீலா, எச்.சி.எல். நிறுவன அதிபர் சிவ் நாடார் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது.

தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், புதுச்சேரியை பூர்வீகமாக் கொண்ட தமிழரான ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன்,
டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், தமிழகத்தைச் சேர்ந்த மீனாட்சி சித்தரஞ்சன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

பத்ம விபூஷன்:

இந்த ஆண்டு பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள மற்றவர்கள் விவரம்:

பாடகி ஆஷா போன்ஸ்லே, நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானியான பச்செளரி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிய அதன் தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் அதிகாரி தர், உலகின் முன்னணி எஃகு நிறுவனத் தலைவரான லட்சுமி மித்தல், முன்னாள் உச்ச நீதிமன் தலைமை நீதிபதி ஆனந்த் உள்பட 13 பேருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

பத்ம பூஷன்:

மேலும் இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், நாகா தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசின் பேச்சு நடத்தி வரும் முன்னாள் உள்துறைச் செயலாளர் பத்மநாபைய்யா, ஐசிஐசிஐ தலைவர் காமத், எச்.சி.எல். அதிபர் சிவ் நாடார், எழுத்தாளர் டொமினிக் லாபியர், சிட்டி பேங்க் தலைவர் விக்ரம் பண்டிட், முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சந்திரசேகர் தாஸ்குப்தா, உஸ்தாத் அம்ஜத் அலி கான் உள்பட 35 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம ஸ்ரீ:

நடிகை மாதுரி தீக்ஷத், பாடகர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழரான ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன், ஐபிஎன் லைவ் தொலைக்காட்சியின் தலைவரான ராஜ்தீப் சர்தேசாய், என்டிடிவி நிருபரான பர்கா தத், அவுட்லுக் ஆசிரியர் வினோத் துவா உள்பட 71 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு யாருக்கும் பாரத ரத்னா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற