For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறை சொல்வது தோழமைக்கு அழகல்ல: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசை தொடர்ந்து குறை சொல்வது தூய தோழமைக்கு அழகல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு முதல்வர் கருணாநிதி பதில் தந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராசன் தமிழக முதல்வருக்கு பதிலல்ல, சிறு விளக்கம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை விடுத்திருக்கிறாரே.

பதில்: நான் கூட அவருக்கு பதிலாக அல்ல, விளக்கமாகவே தான் நிலம், வீட்டு மனைப் பிரச்சனை பற்றியெல்லாம் எழுதியிருந்தேன். இப்போதும் அந்த நிலையில் தான் அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் பதிலாக அல்ல. விளக்கமாகவே அளித்திட விரும்புகிறேன்.

கேள்வி: திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியன் அடிப்படையில், இதுவரை 1.38 லட்சம் ஏழை விவசாயிகளுக்கு இலவச தரிசு நிலம் வழங்கப்பட்டுள்ளது என்று தோழர் என்.வரதராசன் அவர்கள் சொல்லியிருக்கிறாரே.

பதில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் அடிப்படையில் தான் திமுக ஆட்சியில் இது வழங்கப்பட்டது என்று அவர் கூறியிருப்பதை நான் ஏற்க இயலாது.

எப்படியென்றால் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 5வது முறையாக திமுக பதவி பொறுப்புக்கு வந்த அதே ஆண்டு ஜூலை மாதம் சட்டப்பேரவையில் 22ம் தேதி படித்த நிதிநிலை அறிக்கையிலேயே பக்கம் 6, பத்தி 15ல் தரிசு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவோம் என்று அறிவித்திருக்கிறோம். அறிவித்ததோடு விட்டு விடவில்லை.

மற்ற கட்சிகள் இதற்காக போராட்டம் நடத்தட்டும் என்பதற்காகவும் அரசு காத்திருக்கவில்லை. ஏழை விவசாயிகள் நல்வாழ்வில் கம்யூனிஸ்டுகளை போலவே நாமும் நாட்டம் கொண்டோர் என்பதால், கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினையொட்டி திருவள்ளூரில் முதன் முதலாக இந்தத் திட்டத்தில் தொடக்கவிழா நடைபெற்றது.

முதற் கட்டமாக அன்றைய தினமே 24,358 நிலமற்ற ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 25,282 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை அதாவது 2வது கட்டமாக 2006ம் ஆண்டு டிசம்பம் 17ம் தேதியன்று விழுப்புரத்திலும், மூன்றாம் கட்டமாக 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலும், நான்காம் கட்டமாக 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதியன்று திருநெல்வேலியிலும், ஐந்தாம் கட்டமாக 2007 செப்டம்பர் 28ம் தேதியன்று புதுக்கோட்டையிலும், 6ம் கட்டமாக 2007 டிசம்பர் 29ம் தேதியன்று ஈரோட்டிலும் நடைபெற்ற விழாக்களில் நானே கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இந்த இலவச நிலங்களை வழங்கியிருக்கிறேன்.

நிலமற்ற ஏழை விவசாயிகள் போராடியதின் காரணமாகத் தான் இந்த நிலங்கள் வழங்கப்பட்டன என்பது ஏற்கத்தக்கதல்ல.

கேள்வி: வரதராசன் விடுத்துள்ள அறிக்கையில் சில இடங்களில் பாராட்டிய நிலையில், கம்யூனிஸ்ட்கள் மீதும் கருணாநிதி பாய்ந்துள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறாரே?

பதில்: எழுத்தோட்டத்தில் அந்தச் சொல் வந்து விழுந்திருக்கும் என நினைக்கிறேன். அவருடைய அனுபவத்திற்கும், அவருடைய தியாகத்திற்கும், பழகும் தன்மைக்கும் அப்படிப்பட்ட வார்த்தையை பொதுவாக அவர் பயன்படுத்தக் கூடியவரல்ல. நானே ஒரு கம்யூனிஸ்ட் என்று பலமுறை அவருடன் கலந்து கொண்ட கூட்டங்களில் என்னைப் பற்றி கூறிக் கொண்டிருக்கிறேன்.

அப்படியுள்ள நான் கம்யூனிஸ்ட்கள் மீது பாய்வேனா? மற்ற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிடும்போது, கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலங்களிலேயே என்ன நிலை என்பதையும் மற்ற கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் மாநிலங்களை விட அந்தக் கட்சி ஆளும் மேற்குவங்க மாநிலத்தை தனிச் சிறப்பாகக் கருதி ஒப்பிட்டுப் புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டினேன்.

அது வரதராசனுக்கு நான் கம்யூனிஸ்ட்கள் மீது பாய்ந்துள்ளதாக தோன்றியிருக்கிறது. மேலும் மேற்குவங்க மாநிலத்தை நான் சிறுமைப்படுத்தி விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.

அது தவறு. மேற்குவங்க மாநிலத்தையும், அங்கே உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் நான் மிகவும் மதிக்கக் கூடியவன். அந்த மாநிலத்திலே உள்ள நிலைமையைச் சுட்டிக்காட்டியிருப்பது சிறுமைப்படுத்துவதற்காக அல்ல.

நமது மாநிலத்திலே சரியாகச் செயல்படவில்லையே என்று இங்கே சுட்டிக்காட்டுவோருக்கு அவர்கள் கட்சி ஆளும் மாநிலத்திலே உள்ள யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக புள்ளி விவரத்துடன் ஒப்பிட்டுக் காட்டுவது தவறாக இருக்க முடியாது.

மேலும் நான் ஏதோ சாதுர்யத்தோடு கடைசி ஓராண்டு புள்ளி விவரத்தைக் காட்டியிருப்பதாக வரதராசன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அங்கும் இங்கும் உள்ள நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் ஓராண்டு புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டது! 10 அல்லது 15 ஆண்டுகள் புள்ளி விவரம் என்றால்-இடைப்பட்ட ஆண்டுகளில் திமுக அல்லாத ஆட்சிகள் நடைபெற்றிருக்கின்றன அல்லவா?

கேள்வி: மேற்குவங்க மாநிலத்திலே நடைபெறும் நிலச் சீர்திருத்தம் தரிசு நில விநியோகமல்ல என்றும், உச்ச வரம்பிற்கு மேல் இருக்கிற நிலத்தைக் கைப்பற்றி வழங்குகின்ற புரட்சிகரமான திட்டம் என்றும் வரதராசன் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறாரே?

பதில்: மேற்குவங்கத்தில் நடைபெறுவது உச்சவரம்பிற்கு மேல் இருக்கிற நிலத்தை ஏழைகளுக்கு வழங்கும் புரட்சித்திட்டம் என்று சொல்லியிருக்கிறார். உண்மை தான்.

மேற்குவங்கத்தில் உச்ச வரம்பிற்கு மேல் இருக்கிற நிலத்தைக் கைப்பற்றி, 2006 மார்ச் 31ம் தேதி வரை 29,82,000 ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி வழங்கியிருப்பதாக வரதராசன் அவர்கள் தெரிவித்துள்ள புள்ளிவிவரத்தை நான் மறுக்கவில்லை. அந்த மாநில அரசின் புரட்சிகரமான செயல்பாட்டினையும் மறைக்கும் எண்ணமில்லை.

தமிழகத்திலே நில உச்ச வரம்புச் சட்டத்தின்படி நிலத்தைக் கைப்பற்றி ஏழையெளியவர்களுக்கு வழங்கிடும் திட்டம், நிலமற்ற ஏழைகளுக்கு இலவசமாக அரசு நிலத்தை ஒப்படைக்கும் திட்டம், வேளாண்மைக்குப் பயன்படாத தரிசு நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளின் நிலங்களை மேம்படுத்தி அவர்களுக்கே அந்த நிலத்தை ஒப்படைத்திடும் திட்டம், வீட்டுமனை வழங்கும் திட்டம், குடியிருப்பு அனுபோகதாரர்கள் (உரிமை வழங்கல்) சட்டத்தின் கீழ் குடியிருக்கும் மனைகளை அதிலே வசிப்போருக்கே சொந்தமாக்கும் திட்டம் என்று பல்வேறு தலைப்புகளின் கீழ் நிலங்களும் வீட்டு மனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

வரதராசன் குறிப்பிட்டுள்ள நில உச்சவரம்புச் சட்டம், தமிழ்நாட்டிலே நான் முதல் அமைச்சராக இருந்த 1970ஆம் ஆண்டிலேயே 15 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்ச வரம்பு என்று கொண்டு வரப்பட்டுவிட்டது.

அந்தச் சட்டத்தின்படி ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலம் கைப்பற்றப்பட்டு, தகுதியுள்ள, நிலமற்ற, ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் 61 ஆயிரத்து 985 பேர் ஆதி திராவிடர்கள், 204 பேர் பழங்குடியினர். இதற்கு முன்பு 30 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்ச வரம்பு சட்டத்தினால் உரிய பலன் கிடைக்காமலே போய் விட்டது.

இருப்பினும் திமுக ஆட்சியில் இன்னொரு திட்டமாக நிலமற்ற ஏழைகளுக்கு இலவசமாக விவசாய நிலம் ஒப்படை செய்யும் திட்டத்தின் கீழ், 1996ஆம் ஆண்டு திமுக 4வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதே முயற்சியெடுத்து, 35 ஆயிரத்து 696 ஏக்கர் பரப்பளவு நிலம், 52 ஆயிரத்து 792 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இது தவிர அதே காலக் கட்டத்தில் நிலச் சீர்திருத்த சட்டத்தின் கீழ் தொடர்ந்து 12 ஆயிரத்து 43 ஏக்கர் விவசாய நிலம், 9 ஆயிரத்து 426 பேருக்கு வழங்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2000ஆம் ஆண்டு செப்டம்பர் வரை 7 லட்சத்து 51 ஆயிரத்து 235 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

அரசுக்குத் தேவைப்படாத புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டு மனை ஒப்படை செய்வது பற்றி பரிசீலித்து பரிந்துரை செய்ய திமுக ஆட்சியில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்களின் பரிந்துரைபடி 2000ம் ஆண்டு மார்ச் 27ம் தேதியன்று ஆணையிடப்பட்டது.

அந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் இலட்சத்து 63 ஆயிரத்து 348 வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

ஒட்டு மொத்தமாக கணக்கெடுப்போமேயானால், 1967ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தமிழகத்திலே வீட்டு மனைப் பட்டாக்கள் 57 லட்சத்து 77 ஆயிரத்து 162 பேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் 12 லட்சத்து 10 ஆயிரத்து 932 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது.

தோழர் வரதராசனுக்கே தெரியும். 1971ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகளை அவர்களுக்கே சொந்தமாக்கும் குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டு வரப்பட்டு - பல லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் அதனால் பயன்பெற்றபோது, திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான மணலி கந்தசாமி அந்த விழாவிலே பேசும்போது,

இந்தச் சட்டத்தை முதல்வர் கருணாநிதி ஒரு துளி இங்க் செலவில் பிரகடனப்படுத்தி விட்டார்.
லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளிகள் இன்றிரவு தங்களது சொந்த வீட்டில் படுக்கிறோம் என்ற ஆனந்த உணர்வோடு படுப்பார்கள். இதற்காக விவசாயத் தொழிலாளர் வர்க்கம் சிந்திய ரத்தத் துளிகள் கொஞ்சமல்ல என்று பேசி அந்தப் பேச்சு இன்றளவும் பழைய ஏடுகளில் உள்ளன.

நான் தெரிவித்துள்ள புள்ளி விவரங்களில் ஏதாவது தவறுகள் இருக்குமேயானால், அதனை வரதராசன் சுட்டிக் காட்டினால் என்னுடைய புள்ளி விவரங்களைத் திருத்திக் கொண்டு வெளியிடவும் தயாராக இருக்கிறேன்.

கேள்வி: வீட்டு மனைப் பட்டா பெறுவதற்காக 25 லட்சம் ஏழை மக்கள் மனு கொடுத்துவிட்டுக் காத்திருப்பதாகவும், கம்யூனிஸ்ட்களுக்கு பதில் சொல்வதை விட, வீட்டு மனைப்பட்டா வழங்குவது தான் மகிழ்ச்சியைத் தரும் என்றும் வரதராசன் சொல்கிறாரே?

பதில்: 3 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு கொண்டு தான் உள்ளன. மேலும் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே சிறப்பு நிகழ்வாக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதென்று இலக்கு நிர்ணயித்து, அந்த இலக்கை காலக்கெடு முடிவதற்குள்ளேயே வழங்கி முடித்திருக்கிறோம்.

அத்துடன் திட்டத்தை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து அந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்திக் கொண்டு தான் வருகிறோம். 10 ஆண்டு காலம் குடியிருப்போருக்குத் தான் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று இருந்த நிபந்தனையைக் கூட சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவை கூட்டத்தில் ஐந்தாண்டு காலம் குடியிருந்தாலே போதுமென்றும், வருமான வரம்பையும் அறவே விலக்கியும் அறிவித்து, அதனை ஆளுநர் உரையிலும் இடம் பெறச் செய்திருக்கிறோம்.

தொடர்ந்து ஆக்க வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அரசை செயல்படாத அரசு போல எண்ணிக் குறை கூறிக் கொண்டேயிருப்பது தூய தோழமைக்கு அழகல்லவே என்ற துன்பம் நம் நெஞ்சைத் துளைக்கத் தானே செய்கிறது! அவர் எழுதியது, நான் எழுதியது, இரண்டையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்; கொள்கை, குறிக்கோளும், செயலும் ஒன்றே என கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X