காங், பாமகவுக்கு திமுக 'எச்சரிக்கை'

திமுகவின் உயர் மட்டக் குழுவான தலைமை நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் நடைபெற்றது.
அதில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் செயல்பாடு ஆகியவை குறித்து காரசாராமாக விவாதிக்கப்பட்டன.
குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாமகவுக்கு 'எச்சரிக்கை' விடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த எச்சரிக்கை தீர்மானம்:
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே செய்யும் சதிகளுக்கு தோழமைக் கட்சிகள் தெரிந்தோ, தெரியாமலோ ஆதரவாக உள்ளன என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது.
திமுக கடைப்பிடித்து வரும் தோழமை உணர்வும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், ஆக்கப்பூர்வமான கூட்டணி அணுகுமுறையும் மென்மேலும் உறுதிபெறும் வகையில் நமது தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று திமுக நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.
தோழமை நல்லுணர்வையும், ஆக்கப்பூர்வமான கூட்டணி அணுகு முறையையும் எல்லா கட்சிகளும் கடைப்பிடித்தால்தான் மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளின் அரவணைப்புடன் இந்தியா சந்தித்து வரும் அறைகூவல் மிகுந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும் என திமுக உறுதியாக நம்புகிறது.
ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ, சமதர்ம, கூட்டாட்சி நெறிகள் வெற்றி பெறவும் மீண்டும் மதவாத சக்திகளின் கையில் நாடு சென்று விடாமல் காத்திடவும் தோழமைக் கட்சிகளிடையே ஒற்றுமை தேவை.
1990 ஆம் ஆண்டிற்கு பிறகு மத்தியில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில், தற்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய திமுக உதவியிருப்பதையும் மறந்து விடக் கூடாது என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.வுக்கு கண்டனம்:
மற்றொரு தீர்மானத்தில் அதிமுக பொதுக் குழுவில் ஜெயலலிதா பேசிய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அதிமுக பொதுக் குழுவில் பேசிய ஜெயலலிதா, ராவணன், ராமர் என்று குறிப்பிட்டு தமிழர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் இழிவுப் படுத்தி திராவிடர்கள் மீது பகைமையை விஷமாக கக்கியிருக்கிறார்.
97 விழுக்காடு உள்ள தமிழர்கள் மற்றும் திராவிட இன உணர்வாளர்கள் இந்த தமிழர் விரோத தீய சக்திகளை தமிழகத்திலிருந்தே விரட்டி அடிப்பதை தங்களுடைய தலையாய கடமையாக கருதி பணியாற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திரம்:
சேது சமுத்திர திட்டத்தை தாமதிக்காமல் தொடர்ந்து நிறை வேற்ற தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று இன்னொரு தீர்மானத்தில் திமுக மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
திமுக மகளிர் அணி மாநாட்டை கடலூரில் மே மாதம் நடத்துவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய கூட்டத்தில் திமுக மத்திய, மாநில அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தொடர்ந்து திமுகவுடன் மோதி வருகிறது. அதேபோல பல்வேறு பிரச்சினைகளைக் காரணம் காட்டி பாமக பல மாதங்களவே திமுகவுடன் கடும் மோதலில் ஈடுபட்டிருக்கிறது.
இந்த நிலையில் இரு கட்சிகளையும் மறைமுகமாக எச்சரிக்கும் வகையில், திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.