திமுக கோஷ்டி மோதல்-கட்சித் தேர்தல் ஒத்திவைப்பு
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத்தில் திமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதால், கட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
விளாத்திகுளம் ஓன்றியத்திலுள்ள 180 கிளைகளுக்கான தேர்தல் அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்த சேகரன் தேர்தல் ஆணையராக செயல்பட்டார்.
வெள்ளயம்மாள்புரம் ஆதிதிராவிடர் காலனி கிளை தேர்தலில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த சுப்பையா கிளை செயலாளராக தேர்வு செய்யப்பட்டதால் அப்பகுதியினர் ஆத்திரமடைந்தனர்.
இதையடுத்து தேர்தல் பார்வையாளராக கலநது கொண்ட முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய திமுக மாவட்ட அவை தலைவருமான என்கே பெருமாள் வெள்ளையம்மாள்புரம் ஆதிதிராவிடர் காலனி கிளை தேர்தல் ஓத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த விளாத்திகுளம் ஓன்றிய செயலாளர் ரவீந்திரன் பெருமாளிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் பெருமாள் ஆதரவாளர்கள் அவரை காரில் ஏற்றி அனுப்பினர்.
ஆனால் பெருமாளை சிலர் வழிமறித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை தடுத்தவர்களை அப்புறப்படுத்தினர்.
இதனால் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெருமாளும், ரவீந்திரனும் தங்கள் தரப்பு கருத்துக்களை மாவட்ட செயலாளர் கருப்பசாமியிடம் தெரிவித்தனர். கிளை கழக நிர்வாகிகள் தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பின்னர் அதை தூத்துக்குடியில் நடந்தலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கிடையில் விளாத்திகுளம் கிளை தேர்தலின் போது தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ராஜாசிங் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வேடப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் விஜயபாண்டியனை கைது செய்தனர்.