திருக்கடையூர் கோவிலில் ஜெயலலிதா நடத்திய ஆயுள் விருத்தி ஹோமம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை ஆயுள் விருத்தி ஹோமம் நடத்தினார்.
தனது 60வது பிறந்த நாளையொட்டி நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்த இருந்தார் ஜெயலலிதா. இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு சிறிய ரக தனி விமானத்தில் தோழி சசிகலாவுடன் புறப்பட்டார். விமானத்தில் 2 பைலட்டுகள் உள்பட 8 பேர் இருந்தனர்.
ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானத்தில் சிறிய அளவிலான கோளாறே ஏற்பட்டிருப்பதாகவும், சில நிமிடங்களில் அது சரி செய்யப்பட்டு விடும் என பைலட்டுகள் ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர்.
ஆனால் சென்டிமெண்ட் பார்க்கும் ஜெயலலிதா தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பிவிட்டார்.
இதையடுத்து விமானத்தில் செல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டு கார் மூலம் திருக்கடையூர் புறப்பட்டார். பகல் 1.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் மாலை 5.30 மணிக்கு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெ-சசி பரஸ்பரம் மாலை அணிவிப்பு:
அப்போது கோவில் குருக்கள் தந்த மாலையை ஜெயலலிதா சசிகலாவுக்கும், சசிகலாவுக்கு தரப்பட்ட மாலைைய அவர் ஜெயலலிதாவுக்கும் அணிவித்து கொண்டனர்.
பின்னர் கோவிலுக்குள் சென்ற ஜெயலலிதா விநாயகர் சன்னதி, அமிர்தகடேஸ்வரர் சன்னதி, காலசம்ஹார மூர்த்தி சன்னதி ஆகியவற்றிற்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த முதல் கால பூஜையில் கலந்து கொண்டார்.
விருந்தினர் மாளிகையில்...:
அதன் பின்னர் அபிராமி சன்னதியில் வழிபாடு செய்துவிட்டு, பிள்ளை பெருமாநல்லூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலைய உரிமையாளருக்கு சொந்தமான விருந்தினர் மாளிகைக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் சென்றனர்.
விருந்தினர் மாளிகையிலேயே இரவு தங்கிய ஜெயலலிதா இன்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு வந்தார். அங்கு நடந்த கஜ பூஜை, கோபூஜை ஆகியவற்றில் கலந்து கொண்டார்.
அதிகாலை ஹோமம்:
காலை 5.30 மணிக்கு ஹோமம் நடைபெறும் இடத்துக்கு சென்ற ஜெயலலிதா கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், அஷ்ட ஹோமம், மிருத்தியு ஹோமம், தன்வந்திரி ஹோமம், மகம் நட்சத்திர ஹோமம் ஆகியவற்றில் கலந்து கொண்டார்.
பின்னர் தங்க குடத்தில் வைக்கப்பட்டிருந்த நீரை ஊற்றி புரோஷனம் செய்தார். தொடர்ந்து மார்க்கண்டேயனுக்கு ஆயுள் வழங்கிய காலசம்ஹார மூர்த்தி சன்னதியில் அர்ச்சனை செய்தார். பின்னர் அபிராமி சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்குள் சென்ற ஜெயலலிதா ஆயுள் விருத்தி ஹோமம் முடிந்து 9 மணிக்கு தான் வெளியே வந்தார்.
பக்தர்களுக்கு தடா-காத்திருந்த மணமக்கள்:
ஜெயலலிதா வருகையையொட்டி கோவிலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்றும், இன்று காலையும் இவர் கோவிலுக்குள் இருந்தபோது மற்ற பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இன்று காலை திருமணம் செய்வதற்காக கோவிலுக்கு வந்திருந்த மணமக்கள் கோவில் வளாகத்திலேயே வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.