For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதல்: ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்-கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: காதல் திருமணம் செய்த 'குற்றத்திற்காக' மணமகன் குடும்பத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தோட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தோட்டிமேடு கிராமத்தில் நாங்கள் 4 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எனது மனைவி முருகம்மாள். எங்கள் மகன் சரவணன் (24) லல்லி என்ற பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணுக்கு 21 வயது ஆகிறது. அவரும் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்தான்.

இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி எனது மகனும், லல்லியும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக நானும், பெண் வீட்டாரும் போலீஸில் புகார் கொடுத்தோம். இந் நிலையில், காணாமல் போன ஐந்து நாட்களிலேயே இருவரும் ஊர் திரும்பினர்.

இரு தரப்பையும் கூப்பிட்டு போலீஸார் பேசினர். லல்லியை அவரது வீட்டுக்குக் கூட்டிச் செல்ல விரும்பவில்லை என்று அவரது பெற்றோர் கூறி விட்டனர்.

இதையடுத்து நானே அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தேன். அதன்படி, ஆண்டார் குப்பம் முருகன் கோவிலில் திருமணம் நடத்த அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது.

இந் நிலையில் எங்கள் ஊரில் கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்பட்டது. ஆனால், எங்கள் வீட்டில் இந்த திருவிழாவிற்கான பணத்தை வசூலிக்க மறுத்து விட்டனர்.

மேலும் இந்தத் திருமணத்தை நடத்தினால், ஊரை காலி செய்துவிட வேண்டும் என்று எனது குடும்பத்தாரையும், எனது சகோதரர் குடும்பத்தையும் சிலர் மிரட்டினார்கள்.

மேலும், கிராமத்தில் உள்ளவர்களையும், திருமணத்திற்கு போகக்கூடாது என்று மிரட்டினார்கள். எங்களுடன் பேசக்கூடாது, பஞ்சாயத்து குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்றும் தடை போட்டனர். மளிகைக் கடைக்காரர் கூட எங்களுக்கு சாமான்களை கொடுக்க மறுத்துவிட்டார்.

எனது மகன் ஒரு பெண்ணை காதலித்த குற்றத்திற்காக எங்களை சமூகத்தில் இருந்தே ஒதுக்கி வைத்து விட்டனர். எனது மகனும், எனது மருமகளும் ஒருவருக்கொருவர் நேசித்தனர். ஆனால் வேண்டுமென்றே எங்களை துன்புறுத்துகிறார்கள்.

இது பற்றி போலீசில் புகார் கொடுத்தும் பலனில்லை.

இந் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று ராஜேஷ் என்பவர் உள்ளிட்டோர் எங்களைத் தாக்கினார்கள். இதையடுத்து போலீசார் எங்களை பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது தொடர்பாக முனிவேல் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார். ஆனால், அன்றைய தினம் இரவே எனது வீட்டிற்கு தீவைக்கப்பட்டது. இதனால் ரூ.3 லட்சம் சேதம் ஏற்பட்டது.

ஊரில் இருப்பவர்கள் பலர் எங்களை ஊரை காலி செய்துவிட்டு செல்லுமாறு மிரட்டுகிறார்கள். இல்லையென்றால் எங்களை ஒழித்துக் கட்டுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

9.1.2008 அன்று எனது தாயார் மரணம் அடைந்தார். முடிதிருத்துவோர், மேளக்காரர், சலவைத் தொழிலாளி போன்ற எவரையும் எனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்க விடவில்லை. எனது உறவினர்களைக் கூட வரவிடவில்லை.

எனவே அருகில் உள்ள நகரத்தில் இருந்து வாடகைக்கு ஆட்களை கொண்டு வந்து எனது தாயாரின் இறுதிச் சடங்கை முடித்தேன். அவ்வாறு அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகளுக்கு கூட ஊரார் அபராதம் விதித்தனர். நாளுக்கு நாள் எங்களுக்கு மிரட்டலும், துன்புறுத்தலும் அதிகரித்து வருகிறது.

கட்டப் பஞ்சாயத்து மற்றும் சமூக விரோத செயல்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், எங்களுக்கு ஏற்பட்ட அநீதியை துடைக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எங்களுடைய வீடு இழப்பு, உடமைகள் இழப்பு ஆகியவற்றிற்கும், மனஉளைச்சல், தாக்குதல் ஆகியவற்றிற்காக ரூ.10 லட்சத்தை நஷ்டஈடாக அரசு வழங்க வேண்டும். வழக்கு முடியும் வரை இடைக்காலமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக 6 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தமிழக அரசு, திருவள்ளூர் எஸ்.பி. இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X